இலங்கை டெனிஸ் சங்கம், ஏ.பி.ஸி- லுட்றிக்கன்ஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் மலைநாட்டில் பாடசாலை மாணவர் மத்தியில் டெனிஸ் விளையாட்டை அபிவிருத்தி செய்வதற்காக நுவரெலியா , பண்டாரவளை , மாத்தளை ஆகிய மூன்று இடங்களில் டெனிஸ் போட்டியை நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது.
இப்போட்டி சம்பந்தமாக இலங்கை டெனிஸ் சங்கத்தின் பிரதித் தலைவர் மஷ்வல் டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில்;
டெனிஸ் விளையாட்டை அபிவிருத்தி செய்வதே எமது சங்கத்தின் முக்கிய நோக்கமாகும். பாடசாலை மட்டத்தில் இருந்தே இத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். இதன் முதல் கட்டமாக பாடசாலை சிறார்கள் மத்தியில் மினி டெனிஸ் போட்டியை ஆரம்பித்துள்ளோம். இதில் ஆயிரத்துக்கும் அதிகமான பாடசாலை சிறார்கள் இணைந்துள்ளார்கள்.
தற்போது மலையகத்தில் டெனிஸ் விளையாட்டின் அபிவிருத்தியை ஆரம்பித்துள்ளோம். இதில் 12, 14, 18 வயது அடிப்படையில் ஆண், பெண் மாணவர்கள் இடையே தனித்தனியாக போட்டிகளை நடாத்தவுள்ளோம்.
ஒற்றையர் , இரட்டையர் , கலப்பு ஆட்டங்கள் நடைபெறும். இப்போட்டிகளில் வெற்றிபெறுபவர்களுக்கு பரிசுகளும் ஒரு தொகைப்பணமும் பரிசாக வழங்கப்படும்.
மலையகத்தில் 3 கட்டங்களாகப் போட்டிகள் நடைபெறும். 1 ஆம் கட்டம் நுவரெலியாவில் இம்மாதம் 10 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரைக்கும் , 2 ஆம் கட்டம் பண்டாரவளையில் 16 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரைக்கும் , 3 ஆம் கட்டம் மாத்தளையில் 22 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரைக்கும் டெனிஸ் போட்டிகள் நடைபெறும் . இவ்வாறு மஷ்வல் டி சில்வா தெரிவித்தார்.