* ரயில்வே திணைக்கள அணி இரு பிரிவுகளிலும் சாம்பியன்
மஞ்சு பிஸ்கட் நிறுவனத்தின் அனுசரணையுடன், இலங்கை கரப்பந்தாட்டச் சம்மேளனம், அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில், ஆண், பெண், இருபிரிவுகளிலும் ரயில்வே திணைக்கள விளையாட்டுக் கழகம் சாம்பியன் விருதைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
இறுதி ஆட்டங்கள் கடந்தவாரம் சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில், இலங்கை கரப்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவரும், அமைச்சருமான டிலான் பெரேராவின் தலைமையில் நடைபெற்ற இறுதி ஆட்டங்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே பிரதம அதிதியாகவும், போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெருமாவும், இளைஞர் விவகார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்கள்.
முதலில் நடைபெற்ற பெண்கள் அணியின் இறுதி ஆட்டத்தில், ரயில்வே திணைக்கள விளையாட்டுக் கழக அணிக்கும், விமானப்படை அணிக்கும் இடையில் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில், ரயில்வே அணி மூன்று ஆட்டங்களிலும் முறையே 25-17, 25-21, 25-23 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றது.
2 ஆவதாக நடைபெற்ற ஆண்கள் அணிகளுக்கிடையிலான இறுதி ஆட்டத்தில், ரயில்வே திணைக்கள விளையாட்டுக் கழக அணியும் துறைமுக அதிகாரசபை விளையாட்டுக் கழக அணியும் போட்டியிட்டன.
போட்டியின் ஆரம்பத்தில் இரு அணிகளும் சமபலத்துடன் போட்டியிட்டாலும், ரயில்வே அணிவீரர்களின் மின்னல் அடித்தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத துறைமுக அதிகார சபை அணி 25-17, 25-17, 25-24 என்ற புள்ளிகள் வித்தியாசத்தினால் தோல்வி அடைந்தது.