25 ஆவது வருடாந்த பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு விழா செப்டெம்பர் மாதம் 3 கட்டங்களாக நடைபெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இம்முறை அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற இருப்பதனால் அகில இலங்கை ரீதியில் பாடசாலைகள் மட்டத்தில் விளையாட்டுப் போட்டிகளை ஆரம்பித்துள்ளதாக, கல்வி அமைச்சின் விளையாட்டுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில்; இறுதிக்கட்ட விளையாட்டுப் போட்டிகள் 3 கட்டங்களாக கொழும்பு சுகததாச விளையாட்டு அரங்கில் நடைபெறும். அகில இலங்கை ரீதியில் தற்போது பாடசாலைகள் மட்டத்தில் ஆரம்பித்துள்ள விளையாட்டுப் போட்டிகளில் சிறந்த பெறுபேறுகளை பெறும் பாடசாலைகள், கொழும்பில் நடைபெற இருக்கும் இறுதிக்கட்ட விளையாட்டுப் போட்டிகளுக்குத் தெரிவுசெய்யப்படுவார்கள்.
கொழும்பில் நடைபெற இருக்கும் 3 கட்ட விளையாட்டுப் போட்டிகளில் 1 ஆம் கட்ட விளையாட்டுப் போட்டி ஆகஸ்ட் மாதம் 30 ஆம், 31 ம் திகதிகளிலும் செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதி வரைக்கும் நடைபெறும்.
2 ஆம் கட்ட விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை நடைபெறும்.
3 ஆம் கட்ட விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு நடைபெறும்.
மிகவும் விரிவான முறையில் இம்முறை நடத்தப்பட இருக்கும் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் பாடசாலைகளுக்கு சாம்பியன் கிணத்துடன் விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய ஒரு தொகைப் பணமும் பரிசாக வழங்கப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.