Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, April 07, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
கண்டி மாநகர தமிழ் மாணவர்களின் தேவைகள் நிறைவேற்றப்படுமா?
[07 - April - 2008] [Font Size - A - A - A]
-த.மனோகரன்-

மலையகத்தின் தலைநகரென்று கூறப்படும் கண்டி மாநகரில் தமிழ் மாணவர்கள் தமது கல்வியை உரிய முறையில் பெற்றுக் கொள்ள முடியாத நிலையிலுள்ளனர். மத்தியமாகாணத்தின் தலைநகரான இந்நகரிலே கணிசமான எண்ணிக்கையில் தமிழ்மக்கள் வாழ்ந்த போதிலும், சகல வசதிகளுடனும் கூடிய ஒரு தமிழ்ப் பாடசாலை இல்லாதிருப்பது பெருங்குறையாகும்.

இலவசக் கல்வி எல்லோருக்கும் சமத்துவமான கல்வி என்ற கோட்பாடு நமது நாட்டின் கல்விக் கோட்பாடாகும். அது மட்டுமல்ல இன்று கணினி மற்றும் தகவல் தொழிநுட்பத்துறையோடு தொடர்புடைய பாடங்களும் பாடசாலைக் கல்வித் திட்டத்தில் இணைக்கப்பட்டு கற்பிக்கப்பட்டு வருவது மட்டுமன்றி தேசிய பரீட்சைகளில் பாடங்களாகவும் இடம் பெற்றுள்ளன.

இவ்வாறான பல்வேறு முன்னேற்றகரமான செயற்பாடுகள் கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் தமிழ் மாணவர்களை இவை சென்றடைவதாயில்லை.

கண்டி மாநகர எல்லைக்குட்பட்டதாக மூன்று தமிழ் பாடசாலைகள் இயங்கி வருகின்றன. மகியாவ கலைமகள் தமிழ் மகா வித்தியாலயம், விவேகானந்த தமிழ் மகா வித்தியாலயம், கண்டி இந்து சிரேஷ்ட பாடசாலை என்பவையே இம் மூன்று தமிழ்ப் பாடசாலைகளாகும். இவற்றை விட இரு மொழிப் பாடசாலைகளாக கண்டி மகளிர் உயர்தரப் பாடசாலையும் விகாரமகா தேவி பாடசாலையும் உள்ளன. இரு மொழிப் பாடசாலைகளான மேற்படி பாடசாலைகளின் தமிழ்ப் பிரிவுகளில் தமிழ் மாணவ, மாணவியருக்கு இடம் கிடைப்பது குதிரைக் கொம்பாகவேயுள்ளது.

ஏனைய மூன்று தமிழ்ப் பாடசாலைகளும் இட, பௌதிக, ஆசிரியர் பற்றாக்குறைகளுடன் இயங்குகின்றன.

மகியாவ கலைமகள் தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர்தர வகுப்புகள் நடைபெற்று வந்த போதும் கலைப் பிரிவு மட்டுமே உள்ளது. கணித, விஞ்ஞான, வர்த்தகப் பிரிவுகளின்மையால் அப்பாடசாலையில் உயர்தர வகுப்பில் கற்க விரும்பும் மாணவர்கள் கலைப்பிரிவுப் பாடங்களை மட்டுமே கற்க முடிகின்றது.

அதேவேளை கண்டி விவேகானந்த தமிழ் மகா வித்தியாலயத்திலும் உயர்தர வகுப்பு உள்ள போதும் வர்த்தகப் பிரிவு மட்டுமே இயங்குகின்றது. கலை, கணித, விஞ்ஞானப் பிரிவுகள் இன்மையால் அப் பிரிவுப்பாடங்களில் பயில விரும்பும் மாணவர்களது விருப்பம் நிறைவுற முடியாதுள்ளது.

பேராதனை வீதியினுள்ள கண்டி இந்து சிரேஷ்ட பாடசாலையில் கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதரண தர வகுப்பு வரை மட்டுமே உள்ளதால் இங்கிருந்து உயர்தர வகுப்புகளில் பயில விரும்பும் தகைமை பெற்ற மாணவ, மாணவிகள் தமது கல்வியைத் தொடரத் தகுந்த பாடசாலை இன்றி அவதிப்படுகின்றனர்.

கண்டி மாநகருக்கு வெளியேயுள்ள பேராதனை தமிழ் மகா வித்தியாலயத்தில் கலை, விஞ்ஞானப் பிரிவுகள் மட்டுமே உயர்தர வகுப்புகளிலுள்ளன. கணித, வர்த்தகப் பிரிவுகள் இல்லை.

அதேபோன்றே வத்தேகம கல்வி வலயத்திற்குட்பட்ட ரஜவெல தமிழ் தேசிய பாடசாலையின் நிலைமையும் உள்ளது. தேசிய பாடசாலையென்ற பெயரிலியங்கும் இப் பாடசாலை கண்டி மாநகரிலிருந்து பத்து கிலோ மீற்றர் தூரத்திலுள்ளது. இங்கு கணித, விஞ்ஞான பாடங்கள் கற்பிப்பதற்கு உரிய வசதிகள் செய்யப்படவில்லை. ஆசிரியர் இன்மையால் கணிதப் பிரிவு செயற்படுவதில்லை. அதேநிலை தான் விஞ்ஞானப் பிரிவிலும் நிலவுகின்றது.

மத்திய மாகாணத்தில் தமிழ்க் கல்வி அமைச்சொன்றுள்ளது. அதன் பொறுப்பாளராகத் தமிழர் ஒருவரே கல்வி அமைச்சராகச் செயற்படுகின்றார். அத்துடன் மத்திய மாகாணத்தில் பல தமிழ் மாகாண சபை உறுப்பினர்கள் பாராளுமன்ற, பிரதேச சபை, மாநகரசபை, நகரசபை உறுப்பினர்களாகத் தமிழர்கள் உள்ளனர்.

மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தேசியப் பாடசாலைகளுக்கு பொறுப்புக் கூற வேண்டிய மத்திய கல்வி அமைச்சின் பிரதிக் கல்வி அமைச்சராக மலையக்த்தைச் சேர்ந்த தமிழ் அரசியல் கட்சியின் தமிழ்ப் பிரதிநிதியே உள்ளார். இவ்வாறான நிலையில் தமிழர்கள் செறிந்து வாழும் மத்திய மாகாணத்தின் தலைநகரான கண்டியில் ஒரு முழுமை பொருந்திய தமிழ்ப் பாடசாலை இல்லாதிருப்பது வேதனைக்குரியது.

அத்துடன் தேசியப் பாடசாலையாகக் கணிக்கப்படும் பாடசாலையிலும் ஆசிரியர் பற்றாக் குறைகளும், பௌதிக வளக் குறைபாடுகளும் நிலவுவதும் கவலைக்குரியதாகும்.

காலத்திற்குக் காலம் கண்டி மாநகரிலே முழுமை பொருந்திய தமிழ்ப் பாடசாலை அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்று அறிக்கைகளும் மேடைப் பேச்சுகளும் இடம் பெற்று வந்தன. இன்று அவையும் இல்லை. உண்மையைக் கூறுவதானால் இன்று கண்டி மாநகரத் தமிழ் மாணவர்களது தேவைகள், வசதிகள் சகல தரப்பினராலும் மறக்கப்பட்டு விட்டதாகவே தோன்றுகின்றது.

மாணவர்களுக்கு உரிய காலத்தில் உரிய கல்வியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். அதோ வருகிறது, இதோ செய்யப்படுகின்றது என்று கூறிக் கொண்டிருப்பதால் மாணவர்களுக்கு எந்தவொரு பயனும் ஏற்படப் போவதில்லை.

இன்று கல்வித் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு கூட அரசியல் செல்வாக்கு அதிகாரம் தேவையாகவுள்ளது. மத்திய மாகணத்தைப் பொறுத்த வரை இவை இரண்டும் தமிழர் மத்தியிலே உள்ளது.

மத்திய மாகாண சபையின் ஆளும் தரப்பின் அதிகாரம் தமிழ் உறுப்பினர்களிலேயே தங்கியுள்ளது. இவ்வாறான நிலையில் ஒரு முழுமை பொருந்திய தமிழ்ப் பாடசாலையை உருவாக்கி தமிழ் மாணவர்களது கல்வி மேம்பாட்டை உறுதி செய்வதில் தயக்கமும், தாமதமும் ஏற்பட்டுள்ளது புரியாத புதிராகவுள்ளது.

மாணவர்களுக்கு உரிய காலத்தில் உரிய கல்வியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். காலதாமதம் மாணவர்களின் எதிர் காலத்தைப் பாதிக்கும். மலையகத்திலிருந்து வைத்தியர்களும், பொறியியலாளர்களும் கணக்காளர்களும், சட்டத்தரணிகளும் மற்றும் தொழில் சார் நிபுணர்களும் உருவாக வேண்டுமென்று மேடைகளில் பேசுவதாலும், அறிக்கைகள் விடுவதாலும் பயனொன்றும் ஏற்படப் போவதில்லை.

அதற்கான அடித்தளமிடும் கல்வியில் கவனம் செலுத்தி உரிய முறையில் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். கண்டி மாநகர தமிழ் மாணவரின் தேவைகள் உரிய முறையில் கவனித்து நிறைவேற்றப்படுமா?

Email this page Your Opinion Print this page
இலங்கையில் ஆயுத மோதலினாலான உள்நாட்டு இடப்பெயர்வு
திருமணப் பதிவு
வீட்டுக்குள் செருப்புப் போடுங்கள்!
கண்டி மாநகர தமிழ் மாணவர்களின் தேவைகள் நிறைவேற்றப்படுமா?
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com