Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, April 07, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
திருமணப் பதிவு
[07 - April - 2008] [Font Size - A - A - A]
-ந.சதாசிவ ஐயர்-

ஒவ்வொருவருடைய பிறப்பையும் பதிந்து கொள்வது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமானது நிறைவுறும் ஒவ்வொரு திருமணமும் பதியப்பட வேண்டியதாகும். மத நம்பிக்கையும் சடங்குகளும் சம்பிரதாயங்களும் ஊர் வழக்குகளும் திருமணத்தை சிறப்பாக்குவதுடன் வலிதாக்குவதாகவும் இருப்பினும் உறுதிப்படுத்தும் தன்மை அவற்றிற்கு நேரடியாக இருப்பதுமில்லை. காலங்கடந்து சாட்சிகளாவதுமில்லை. எந்த இடத்திலும் சமர்ப்பிக்கப்பட்ட மாத்திரத்திலேயே உறுதிப்படுத்தும் ஆற்றல் பதிவுச் சான்றிதழுக்கு மட்டுமே உண்டு. ஆதலின் நிகழும் திருமணங்கள் யாவும் பதியப்படுதல் வேண்டும்.

திருமணங்கள் பதிவு செய்யப்படும்போது சரியாகவும் சட்டத்திற்கு அமைவாகவும் பதியப்படுதல் அவசியமாகும். திருமணப் பதிவு தொடர்பிலான சட்டங்களையும் பதிவு செய்வது தொடர்பான பொது நடைமுறைகளையும் அறிந்துகொண்டால் பிழையின்றி சரியான முறையில் இலகுவாக திருமணப் பதிவு செய்வதுடன் அதன் ஏற்புடைமையையும் வலிதாக்கலாம்.

இலங்கையில் திருமணப் பதிவுச் சட்டம் பொது, கண்டிய, முஸ்லிம் என மூன்றாக வகுக்கப்பட்டுள்ளது. கண்டி, முஸ்லிம் என்பவை குறிப்பிட்ட இனத்தவருக்கு மட்டுப்படுத்தப்பட்டதாகும். பொதுச்சட்டம் ஏனைய யாவருக்கும் பொதுவானதாகும்.

இங்கு பொதுவான திருமணச் சட்டத்தின்படியான சிறப்பான பதிவுக்கான வழிகாட்டல்களை பார்ப்போம்.

இலங்கையில் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவும் ஒரு விவாகப் பதிவுப் பிரிவாகக் கொள்ளப்படும். ஒரு பிரதேச செயலர் பிரிவுக்குள் வசிக்கும் மாப்பிள்ளையும் பெண் பிள்ளையும் அப்பிரிவுக்குரிய விவாகப் பதிவாளர் ஒருவர் மூலமே தங்கள் விவாகத்தைப் பதிவுசெய்து கொள்ளலாம். இருவரும் வெவ்வேறு பிரதேச செயலர் பிரிவுகளில் வசிப்பவர்களாயின் திருமண அறிவித்தலை மாப்பிள்ளையும் பெண் பிள்ளையும் தாம் வசிக்கும் பிரதேச செயலர் பிரிவிலுள்ள விவாகப் பதிவாளரிடம் தனித்தனியாக வழங்குதல் வேண்டும். அவ்வறிவித்தலைப் பெற்றுக்கொண்ட பதிவாளர் தமக்கிடையே தகவல்களை பரிமாறிக் கொள்வர். உரிய காலத்தின் பின் அவ்விரு பதிவாளர்களில் ஒரு பதிவாளர் மூலம் திருமணப் பதிவைச் செய்து கொள்ளலாம்.

திருமணப் பதிவிற்குத்/ தேவையான தகைமைகள்

1. மணமகள், மணமகன் இருவரும் தமது கடந்த பிறந்த தினத்தில் 18 வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். (18 வயதிற்கு குறைந்தவர்கள் 1995 ஆம் ஆண்டின் விவாகத் திருத்தச் சட்டத்தின்படி திருமணம் செய்துகொள்ள முடியாது. இத்திருத்தச் சட்டப்படி திருமணப் பதிவிற்கு பெற்றோரின் சம்மதம் பெறவேண்டிய அவசியமில்லை.)

2. தடுக்கப்பட்ட உறவு முறையைக் கொண்டவர்களாக இருத்தலாகாது. (அதாவது சகோதர, பெரிய, சிறிய தந்தை, தாய் உறவு முறைகள்)

3. ஏற்கனவே திருமணமானவராயின் விவாகரத்துப் பெற்றவராயிருத்தல் வேண்டும். விவாகரத்துப் பெற்றிருந்தால் அல்லது கணவர் அல்லது மனைவி இறந்திருந்தால் அவற்றை உறுதிப்படுத்தும் ஆவணங்களின் பிரதிகள் இணைக்கப்படுதல் வேண்டும்.

4. திருமண அறிவித்தல் கொடுப்பதற்கு முன்னராக குறைந்தது 10 நாட்களாவது அப்பிரிவில் வசித்திருத்தல் வேண்டும். மணமகன், மணமகள் இருவரில் ஒருவர் வெளிநாட்டில் இருந்து வருபவராயின் அவரது வரவை எதிர்பார்த்து இலங்கையில் இருக்கும் மற்றவர் அறிவித்தல் வழங்கலாம். எனினும், இருவரும் குறைந்தது 4 நாட்களாவது இலங்கையில் இருத்தல் வேண்டும். வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் இங்கு வந்து இறங்கும் போது கடவுச்சீட்டில் இடப்படும் உள்வரவு முத்திரை இதன்போது கவனத்தில் கொள்ளப்படும்.

திருமண அறிவித்தலை/ பூர்த்தி செய்தல்

திருமண அறிவித்தலில் கொடுக்கப்படும் விபரங்களின் அடிப்படையிலேயே விவாகப் பதிவுப்புத்தகம் பூர்த்தி செய்யப்படும். ஆதலால், திருமண அறிவித்தல் படிவம் சரியாகவும் தெளிவாகவும் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

திருமண அறிவித்தலை சிங்களப் பதிவாளராயின் சிங்களத்திலும் தமிழ் பதிவாளராயின் தமிழிலும் பூர்த்தி செய்வர். இலங்கைச் சட்டப்படி எக்காரணம் கொண்டும் ஆங்கிலத்தில் பதிவு செய்யப்படமாட்டாது.

திருமணப் பதிவிலுள்ள தவறுகளையோ எழுத்துப் பிழைகளையோ திருத்துவதாயின் மாவட்ட நீதிமன்றில் விண்ணப்பம் சமர்ப்பித்து (அதாவது வழக்குத் தாக்கல் செய்து) மன்றின் அனுமதியுடனேயே திருத்தப்பட வேண்டும். ஆதலால் அறிவித்தலை அவதானமாகப் பூர்த்தி செய்தல் வேண்டும்.

மணமகன் மணமகள் பெயர், பிறப்புச்சான்று, அடையாள அட்டை, வெளிநாட்டில் இருந்து வருபவரின் கடவுச்சீட்டு என்பவற்றை பரிசீலித்து தந்தையின் பெயர் முதலாவதாகவும் மணமகள் மணமகன் பெயர் அடுத்ததாகவும் வரக்கூடியதாகவும் ஆங்கில மொழி பெயர்ப்புக்கு ஏற்றவாறான உச்சரிப்பு வரக்கூடியதாகவும் எழுதுதல் வேண்டும்.

குடும்ப நிலைமையை வாலிபனா, கன்னிகையா, தாரமிழந்தவரா, விவாகரத்துப் பெற்றவரா முன்னர் சமயாசாரப்படி விவாகமானவர்களா எனத் தெளிவாகக் குறிப்பிடுதல் வேண்டும். இதில் மூடி மறைத்தல்கள் பொருத்தமற்றது. திருமணப் பதிவின்போது கௌரவத்திற்காக உண்மைகளை மறைத்து வாலிபன், கன்னிகை எனக் குறிப்பிட்டால் பிற்காலத்தில் பல தேவைகளின் பொருட்டு சமர்ப்பிக்கும்போது பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிடும். சமயாச்சாரப்படி திருமணம் செய்து பிள்ளைகளும் பிறந்த பின் திருமணப் பதிவு செய்யும்போது அதுபற்றி தெளிவாக பதிவாளருக்கு எடுத்துக்கூறி சரியாகப் பதிவு செய்தல் வேண்டும். ஆதலால், பதிவாளர் விளக்கிக் கூறுவதுபோலும் திருமண அறிவித்தல் படிவத்தின் மறுபுறத்தில் வழிகாட்டற் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பது போலும் தெளிவாக விடயங்களைக் குறிப்பிடுதல் வேண்டும். அத்துடன், விவாகரத்துச் சான்றின் பிரதியை அல்லது இறப்புச் சான்றின் பிரதியை தேவைக்கேற்ப சமர்ப்பித்தல் வேண்டும்.

இனத்தைக் (சாதியை) குறிப்பிடும்போது சிங்களவர், இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர் எனத் தெளிவாகக் குறிப்பிடுதல் வேண்டும். இங்கு தந்தையின் இனமே மகனின் அல்லது மகளின் இனமாக அமையும். இனம் வேறு பிரஜை வேறு. இனம் மாறாது. பிரஜை மாறும். வெளிநாட்டுக்குச் சென்று அந்நாட்டின் பிரஜாவுரிமை பெற்றவர்கள் இனம் என்பதற்கான அர்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல் தாங்கள் தற்போது வசிக்கும் நாட்டின் பிரஜை எனக் குறிப்பிடும்போது கோருவர். இது முற்றிலும் தவறானது. அதேபோன்று, முகவரியைக் குறிப்பிடும்போது திருமண அறிவித்தலில் கடந்த 10 நாட்களாக தாங்கள் வசிப்பதாக குறிப்பிடும் இலங்கை முகவரியையே குறிப்பிடுதல் வேண்டும். வெளிநாட்டு முகவரியைக் குறிப்பிடுதலாகாது. வெளிநாட்டு முகவரியையும் இலங்கை முகவரியையும் இனத்தையும் பிரஜையையும் சேர்த்து இரண்டையும் எழுதுவதும் பெயரை "அல்லது" எனும் சொல்லை இடையிட்டு இடுபெயர்களாக எழுதுவதையும் முற்றாகத் தவிர்த்தல் வேண்டும்.

திருமணப் பதிவுக்கான நாள், நேரம், இடம் என்பவற்றை முன்னதாகவே தீர்மானித்துப் பதிவாளருடன் ஒழுங்குசெய்தல் வேண்டும். பதிவாளருக்கான போக்குவரத்து வசதி செய்து கொடுப்பதுடன் முக்கியமாக பதிவாளர் வந்தவுடன் திருமணப் பதிவை விரைவில் முடித்து அவரை அனுப்பி வைத்தல் வேண்டும். மணமக்கள் மண்டபத்திற்கு வருவதற்கு முன்னதாகவே அவரை அழைத்து வந்து காக்க வைப்பதும் பதிவு முடிந்த பின் உடன் அனுப்பி வைக்காமல் காக்க வைப்பதும் தவிர்க்கப்படல் வேண்டும். ஏனெனில், அந்த சுபமுகூர்த்தத்தில் அவருக்கு வேறும் ஒரு திருமணத்தைப் பதிவு செய்து வைக்கவேண்டியிருக்கலாம்.

திருமணப் பதிவு நடைபெறும்போது திருமணப் பதிவுப் புத்தகத்தின் மூன்று பிரதிகளும் பதிவாளரால் நிரப்பப்பட்டிருத்தல் வேண்டும். மணமக்களும் பெற்றோரும் திருமணப் பதிவு ஆரம்பிக்க முன்பு அதனை வாசித்து சரிபார்த்து பிழைகள் இருப்பின் உடன் திருத்திக் கொள்ளல் வேண்டும். திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் கூடுகளின் வலப்பக்கத்தில் மாப்பிள்ளை, பெண் பிள்ளை, பதிவாளர் மூவரும் தவறாது சுருக்கொப்பமிடல் வேண்டும். ஒப்பிடும்போது தமது வழமையான ஒப்பத்தை இடல் வேண்டும். தமிழில் எழுதப்பட்டுள்ளது என்பதற்காக தமிழிலோ சிங்களத்தில் எழுதப்பட்டுள்ளது என்பதற்காக சிங்களத்திலோ அல்லது ஆங்கிலத்திலோ ஒப்பமிட வேண்டும் எனும் சட்டம் நியதி ஏதும் இல்லை. ஒப்பம் எந்த மொழியில் என்பது முக்கியமல்ல. அது அவரது வழமையான ஒப்பமாக இருத்தல் வேண்டும் என்பதே முக்கியம். மணமகள் ஒப்பமிடும்போது திருமணப் பதிவுக்கு முன்பு எப்படி வழமையாக ஒப்பமிடுவாரோ அவ்வாறே ஒப்பமிடல் வேண்டும். திருமணத்தின் பின் அவர் கணவனின் பெயருடன் தனது பெயரை சேர்த்து எழுதும்போது ஒப்பத்தை தேவையின் பொருட்டு மாற்றிக் கொள்ளலாம்.

திருமணப் பதிவு செய்யப்பட்டதும் பதிவாளரால் அவ்விடத்தில் வைத்தே இலவசப் பிரதி மணமகளிடம் கையளித்தல் வேண்டும் என்பது சட்டம். மணமகளின் பெற்றோர் அதனைத் தவறாது கேட்டுப் பெற்றுக்கொள்தல் வேண்டும். இலவசப் பிரதியானது மணமக்களினதும் சாட்சிகளினதும் பதிவாளரினதும் original ஒப்பத்துடன் கூடியதாகும். அவ்வாறான ஒரு பிரதி மீண்டும் கைகளில் கிடைக்காது. அதனைத் திருமணப் பரிசாக வைத்திருத்தல் சிறப்பானதாகும். உடனடியாகவே பதிவாளரின் அனுமதியுடன் மேலதிகப் பிரதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். அதேவேளை, எதிர்காலத்தில் பிரதி தேவைப்படும்போது எங்கே பெறுவது என்பதையும் பதிவாளரைக் கேட்டு அறிந்து கொள்தல் வேண்டும். பொதுவாக திருமணப் பதிவு நடைபெறும் பகுதிக்குரிய பிரதேச செயலகத்திலேயே மூலப்பிரதி பேணப்படும். அவ்வலுவலகத்தில் வேண்டியபோதெல்லாம் விண்ணப்பம் சமர்ப்பித்து பிரதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். தமிழர்கள் சிங்களத்தில் பதிவு செய்யும்போது தமிழர் பெயர் சிங்களத்தில் சரியாக எழுதப்படுகின்றதா என சரி பார்த்தல் வேண்டும். தற்போது கொழும்பில் தமிழ் மொழி மூலம் திருமணப் பதிவு செய்ய பதிவாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் தமிழில் பதிவு செய்வது பிழையற்ற பதிவுக்கு ஏதுவாக அமையும். சிங்களத்திலோ தமிழிலோ பதிவு செய்யப்பட்டாலும் உடனடியாகவே ஆங்கில மொழி பெயர்ப்பையும் செய்து வைத்துக் கொள்தல் சிறப்பானதாகும்.

ஆதலால் திருமணப் பதிவின்போது பெற்றோரும் மணமக்களும் அக்கறையுடன் செயற்படின் சிறப்பான பதிவிற்கு அது வழியாகும்.

Email this page Your Opinion Print this page
இலங்கையில் ஆயுத மோதலினாலான உள்நாட்டு இடப்பெயர்வு
திருமணப் பதிவு
வீட்டுக்குள் செருப்புப் போடுங்கள்!
கண்டி மாநகர தமிழ் மாணவர்களின் தேவைகள் நிறைவேற்றப்படுமா?
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com