-செல்வி.சாமினி சந்திரன்-
ஆயுத மோதல்கள் எப்போதுமே மனித குலத்திற்கு மதிப்பளிப்பதில்லை. குறிப்பாக மோதலில் ஈடுபடும் தரப்பினர் தமது இலக்குகளை அடைவதற்கு உத்வேகம் பெறும் அதே கணம், அது விளைவிக்கும் பாதகமான தாக்கங்கள் தொடர்பில் சிந்தித்துச் செயற்படத் தவறி விடுகின்றனர். பொதுவாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் இனங் காணப்படும் இயல்புகளில் ஒன்றாக உள்நாட்டினுள்ளான மோதல்களும் இடம்பிடித்து விட்ட நிலையில், இலங்கைத் தீவும் அதில் ஒன்றாக உள்ளடங்கி விடுகிறது. அவ்வகையிலே தசாப்த காலமாகத் தொடர்ந்து வரும் இலங்கையின் உள்நாட்டு ஆயுத மோதல் ஏற்படுத்திய தாக்கங்கள் பல்வகையின. அவற்றுள் ஒன்றாக உள்நாட்டிற்குள்ளான மக்களின் இடப்பெயர்வினை அடையாளப்படுத்தலாம்.
இலங்கைத் தீவு நீண்டகாலமாக சந்தித்து வரும் இம்மோதல் பல எதிர்விளைவுகளை தொடர்ச்சியாகச் சம்பவிக்கச் செய்த வண்ணமே நீண்டு செல்கின்றது. இந்த நீண்ட தீர்வினை எட்டாத பயணத்தில் பங்கு கொள்ளும் மோதல் தரப்பினர் இருவருமே அடைந்த இலக்குகள் மீண்டும் ஓர் மோதலிற்கு வழி சமைப்பதாக அமைந்ததே ஒழிய, ஓர் நிரந்தரத் தீர்வினை எட்டவில்லை. பல்லின சமூகங்கள் ஜீவிக்கின்ற இந்நாட்டிலே வெவ்வேறுபட்ட அபிலாஷைகளைக் கொண்ட மக்களின் தேவைகள், சலனங்கள் ஆயுதத்தினால் அடைந்துகொள்ள இயலாதன என்பதை மோதலில் ஈடுபடும் தரப்பினர் புரிந்துகொள்ள விளைவதில்லை. மொத்தத்திலே இம்மோதலானது மக்கள் நலன் கருதிய செயன்முறை என்பதற்கு மாறாக, குறித்த மோதலில் ஈடுபடும் தரப்பினரின் நலன் கருதியது என்பது கொடிய மோதல் ஏற்படுத்திய பாதக விளைவுகள் வெளிப்படுத்தும் உண்மை. அவற்றுள் ஓர் பிரதான விளைவாக எம்மால் அடையாளம் காணக்கூடியதே, மோதலிலிருந்து தமது உயிரைப் பாதுகாக்கும் நோக்கிலான மக்களின் சொந்த இடங்களிலிருந்தான உள்நாட்டிற்குள்ளான நகர்வாகும். தொடர்ச்சியான இம்மோதல் தேசிய எல்லை தாண்டிய வகையிலும் மக்களைப் புலம் பெயரச் செய்துள்ளது என்பதும் வெளிப்படை.
பொதுவாக `இடம்பெயர்வு' என்பது மனித வாழ்க்கையின் ஓர் அங்கமாகும். அதாவது ஒரு குறித்த மக்கள் தொகையினர் வள வாய்ப்புக்களைப் பெறல், தொழிற்படையில் இணைதல், கைத்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடல், வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதார, மருத்துவ வசதிகள் போன்வற்றைப் பெற்றுக்கொள்ளுமுகமாக மீள் பரம்பலை ஏற்படுத்தும் செயற்பாட்டையே `இடம்பெயர்வு' என அழைப்பர். அதேசமயம் `உள்நாட்டு இடப்பெயர்வு' என்பது குறித்து நிற்பது ஒரு வகையில், மிகக் கிட்டிய தூரத்திற்கு தற்காலிகமாகவோ தற்காலிக நிரந்தரமாகவோ அன்றில் நிரந்தரமாகவோ இடப்பெயர்வு மேற்கொள்வதைக் குறித்து நிற்கிறது. குறிப்பாக ஒருவர் தொழிலின் நிமித்தம் தான் வாழும் பிரதேசத்திலிருந்து மிகக் கிட்டிய தூரத்திலுள்ள நகரத்திற்கோ அன்றில் கிராமத்திற்கோ சென்று வருவதை இவ் இடப்பெயர்வுக்குள் அடக்கலாம். அதேசமயம், மற்றோர் பரிமாணமும் இதற்கு உண்டு. அதாவது இராணுவ பரவலாக்கம், ஆயுத மோதல், இராணுவ அச்சுறுத்தல் போன்ற பல காரணங்களின் நிமித்தம் தமது சொந்த இருப்பிடங்களை விட்டு இழந்து வெளியேறுவோர் சர்வதேச எல்லையைத் தாண்டாத போது `உள்நாட்டு ரீதியான இடப்பெயர்வு' என அது கொள்ளப்படும். சர்வதேச எல்லையைத் தாண்டும் போது இடப்பெயர்வு என்பது அகதிகள் வெளியேற்றமாக மாறுகின்றது எனக் கொள்ளலாம். உலகளாவிய ரீதியில் இருபத்தைந்து மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் தமது சொந்த நாட்டிற்குள்ளேயே முரண்பாடு காரணமாக பலாத்காரமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுள் அரைப்பங்கினருக்கும் மேலானோர் ஆபிரிக்காவிலும் நான்கு முதல் ஐந்து மில்லியன் வரை ஆசியாவிலும் (பெரும்பாலானோர் பர்மா, இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலும்) மூன்று முதல் நான்கு மில்லியன் வரை ஐரோப்பாவிலும் இரண்டு மில்லியனுக்கும் மேலானோர் அமெரிக்க நாடுகளிலும் காணப்படுகின்றனர்.
கலாநிதி உம்ரோ சிங் சவுத்திரி (2002) என்பவரது உள்நாட்டு இடப்பெயர்வு பற்றிய விளக்கத்தை நோக்கின், "உள்நாட்டு இடப்பெயர்வானது, மனோரீதியிலான உற்சாகமின்மையையும் சமூக- பொருளாதார ரீதியிலான பலவீனமானதோர் நிலையினையும் ஏற்படுத்துவதாகிறது. அத்துடன், அதில் வீடற்றுப் போதல் சம்பந்தமான பிரச்சினை மட்டுமன்றி, உதவியில்லாமை, நம்பிக்கையிழப்பு மற்றும் மனித உரிமை மீறப்படுதல் என்பவற்றுக்கும் உள்ளாவதனால் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரின் இத்தகைய துயர் நிலையானது உண்மையானதும் அவசரமானதுமான ஒன்றாகும்" என்கிறார். இவ்வடிப்படையில், இலங்கையில் இரு தசாப்தங்களாக நடைபெற்று வரும் சிவில் யுத்தத்தின் விளைவுகள் நீண்ட காலத்திற்கு பாரிய சுமையினை பல்வேறு வழிகளில் அழுத்திய வண்ணம் உள்ளது. அது மட்டுமன்றி, ஒரு முழுத் தலைமுறையினர் இவ் ஆயுத மோதலினால் பாதிக்கப்பட்டு விட்டனர் என்பதே மிகவும் துயர்மிகு செய்தியாகும். மேலும், பெருந்தொகையான மக்கள் வன்முறையினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டு உயிர், உடைமையையும் இழந்து, முடமாக்கலுக்குட்பட்டும், உள்நாட்டு ரீதியாக இடம்பெயர்ந்தும் உள்ளனர். பிணக்கு ஏற்பட்ட காலப்பகுதியில் அழிந்தோரின் தொகை 60,000க்கும் கூடுதலானது என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பிணக்கில் கடந்த பல ஆண்டுகளில் ஏதாவதொரு வகையில் நேரடியாகப்பாதிப்பிற்குள்ளான குடிமக்களின் தொகை 17 இலட்சங்கள் என மதிப்பிடப்பட்டுள்ளதாக, இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடன் நிவாரண புனர்வாழ்வு மற்றும் நல்லிணக்க இணைப்பு ஆணையாளர் அதிபதி அலுவலகத்தினால் `நிவாரணம், புனர்வாழ்வு மற்றும் மீளிணக்கப்பாடு மீதான தேசிய சட்டகம்' என்றவாறாக தமிழாக்கம் செய்யப்பட்ட ஏடு விதந்துரைக்கிறது. தற்பொழுது கூட, பெருந்தொகையானோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோராக இருக்கின்றனர். அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் அறிக்கையின் படி, 2001 ஆம் ஆண்டு நவம்பரில் கூட உள்நாட்டு ரீதியாக இடம்பெயர்ந்து உலருணவு பெறுவோரின் தொகை 683,256 ஆகும். உள்நாட்டில் இடம்பெயர்ந்த குடும்பத்தினரின் வீதம் அம்பாறை மாவட்டத்திலுள்ள 40% க்கும் மன்னாரிலுள்ள 95% க்கும் இடையே உள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணத்திலுள்ள வீடுகளில் மூன்றிலொன்றிற்கு மேற்பட்டவை சேதமடைந்தோ, முற்றாக அழிந்தோ உள்ளன. தத்தமது இடங்களுக்குத் திரும்பிச் சென்று மீண்டும் மீண்டும் இடப்பெயர்வுக்கு உள்ளானோர் அடங்கலாக, பெரும்பாலானோர் நலன்புரி நிலையங்களிலும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோருடனும் வசித்து வருகின்றனர். சீரான எதிர்காலத்திற்கு சொற்பமான நம்பிக்கையே கொடுக்கும் நெரிசலான நலன்புரி நிலையங்களில் பல குடும்பங்கள் பத்து வருடங்களுக்கும் மேலாகக் காலத்தைப் போக்கி வருகின்றன.
1980களின் முதற்பகுதிகளில் முனைப்புப் பெற்ற இன விடுதலைப் போராட்டத்தினால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த பிரதேசங்களிலிருந்து தவிர்க்க முடியாத நிலையில் இடம்பெயர்வினை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு உட்பட்டனர். அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் தமது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து பல இடங்களில் பரந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களிற் கணிசமானோர் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர். அதேபோல், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள மக்கள் உள்நாட்டிலுள்ளேயே இடம்பெயர்வினை மேற்கொண்டுள்ளனர். வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் நிகழ்ந்து வரும் உள், வெளி இடப்பெயர்வின் பண்புகளுக்கும் வடக்கு- கிழக்கு மாகாணங்களில் நிகழ்ந்து வரும் உள்,வெளி இடப்பெயர்வுப் பண்புகளிற்கும் இடையில் பாரிய வேறுபாட்டினைக் காணமுடிகிறது. அதாவது தென்னிலங்கையில் மேற்கொள்ளப்படும் இடப்பெயர்வானது, அபிவிருத்தியுடன் தொடர்புபட்டிருக்க, மற்றது, தவிர்க்க முடியாததும், பாதுகாப்பிற்காகத் தூண்டப்பட்டதுமான இடப்பெயர்வுகளாக உள்ளன.
இவ்வாறாக மொத்தத்திலே ஆயுத மோதல் பலப்படுத்திய உள்நாட்டு இடப்பெயர்வில் முக்கியமான சமூகத்தினராகக் கருதப்படக்கூடியோர் தமிழரும் முஸ்லிம்களுமே, யுத்த நிலையும் அதனோடு இணைந்த காரணிகளின் செயற்பாட்டின் விளைவாக மேற்கொள்ளப்பட்ட இவ் இடப்பெயர்வுகளில் முக்கியமாகக் கூறப்பட வேண்டியது, வட மாகாணத்திலிருந்து முஸ்லிம் சமூகத்தினர் வெளியேற்றப்பட்டமை ஆகும். ஏறத்தாழ 75,000 முஸ்லிம்கள் இம்மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்து அநுராதபுரம், பொலநறுவை, புத்தளம், கொழும்பு போன்ற மாவட்டங்களிற்குச் சென்று அகதிமுகாம்களிலும் உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் வாழ்ந்து வர சற்று வசதி படைத்தோர் வீட்டினை வாடகைக்குப் பெற்றோ அன்றில் சொந்தமாக வாங்கியோ வாழ்ந்து வருகின்றனர்.
இவை தவிர, தமிழ் மக்களில் பெருமளவிலானோர் தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் யுத்த அனர்த்தத்தின் விளைவாக தம்மை பாதுகாத்துக் கொள்ளும் முகமாக தற்காலிக இடப்பெயர்வினைக் காலத்திற்குக் காலம் மேற்கொண்டு வந்துள்ளனர். இதன் விளைவாக மாவட்டத்திற்குள்ளேயானதும் மாவட்டத்திற்கு வெளியேயானதுமான இடப்பெயர்வுகள் முனைப்புப்பெறலாயின.
இந்த அடிப்படைகளில் நோக்குமிடத்து தொடர்ந்து வரும் கோரயுத்தம் இலங்கை மக்களின் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளில் தனது நேரடியான அல்லது மறைமுகமான தாக்கத்தினை செலுத்திய வண்ணம் இருக்கும் இந்நிலையில், பிணக்கின்போதான பாதுகாப்பின் நிமித்தம் தமது சொந்த இடங்களிலிருந்து வெளியேறி வரும் மக்கள் தொகை `உள்நாட்டு இடப்பெயர்வாளர்' என்று கல்விசார் பதப்பிரயோகத்தினூடு அடையாளப்படுத்தப்பட்டு பெருகி வரும் நிலைப்பாடு நாட்டின் ஓர் செழிப்பான அபிவிருத்திக்கு உசிதமான விடயம் அல்ல. இவர்கள் தொடர்பில் அவர்களின் மீள்குடியேற்றங்கள் தொடர்பில் அரசாங்க மட்டத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் ஓர் நிரந்தர தீர்விற்கான அத்திவாரங்களை தொடர்ந்து செல்லும் மோதல் பின்னடையச் செய்து வருகின்றது. எனவே, நாடு அபிவிருத்தியை நோக்கி நகர்வதற்கான முஸ்தீபுகளை நகர்த்த விளைகையில், குறித்த இம்மக்களின் நிரந்தர தீர்வு தொடர்பில் சிந்தித்துச் செயற்பட வேண்டிய நிர்ப்பந்தம் குறித்த நாட்டு அரசாங்கத்திற்குக் காணப்படும் அதேவேளை, இம்மக்கள் நாளாந்தம் எதிர்நோக்கும் இன்னல்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடும் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு இந்த மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பும் மோதலில் ஈடுபட்ட தரப்பினருக்கே உரியவை என்றாலும் மிகையாகாது.
- நன்றி: நக்கீரம்