சிம்பாப்வேயின் தலைநகர் ஹராரேயிலுள்ள எதிர்க் கட்சியினரின் அலுவலகத்தில் அந்நாட்டு பொலிஸார் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
ஜனநாயக மாற்றத்திற்கான இயக்கம் (எம்.டி.சி.) என்னும் பிரதான எதிர்க் கட்சியின் அலுவலகங்கள் யாவும் சோதனையிடப்பட்டதாகவும் ஆனால் அந்நேரத்தில் அதிகாரிகள் எவரும் அங்கிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பிறிதொரு சம்பவத்தில் ஹோட்டலொன்றில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிஸார் இரு வெளிநாட்டுச் செய்தியாளர்களை கைது செய்துள்ளனர்.
தேர்தல் முடிவுகள் வெளிவரத் தாமதமாகுவதால் பதற்றம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படும் அதேவேளை, ஜனாதிபதி ரொபேர்ட் முகாபேயை தாம் தோற்கடித்திருப்பதாக எதிர்க் கட்சி தெரிவித்துள்ளது.
அத்துடன், எம்.டி.சி.யின் அலுவலகங்கள் இயங்குவதாகக் கருதப்படும் அதிகளவான ஹோட்டல்களிலும் பொலிஸார் தீவிர சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
நாட்டின் தேர்தல் ஆணையகம் அறிவிப்பை வெளியிட முன்னர் எதிர்க் கட்சியினர் தேர்தல் முடிவுகளை அறிவித்தமையே இத்தேர்தலுக்கான காரணமாக இருக்கலாமென நம்பப்படுவதாக நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத் தேர்தலுக்கான முடிவுகளை தேர்தல் ஆணையகம் தெரிவித்திருந்தது. இம்முடிவுகளின்படி 28 வருடங்களின் பின்னர் எம்.டி.சி. கட்சி பாராளுமன்றத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் எம்.டி.சி. கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மறைந்து வாழ்வதாக தெரிவிக்கப்படுவதை மறுத்துள்ள அக்கட்சியின் செயலாளர் தமது தலைவர் மோர்கன் ரிஸ்வாங்கிரை பாதுகாப்பாக இருப்பதாகவும் ஆனால், செய்தியாளர் மாநாட்டை நடத்தும் திட்டம் இரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள செய்தியாளர்களில் ஒருவர் நியூயோர்க் ரைம்ஸின் செய்தியாளர் எனவும் இவர் பத்திரிகை உலகின் மிகச் சிறந்த விருதான புலிட்சர் விருதை வென்றவரெனவும் நியூயோர்க் ரைம்ஸ் தெரிவித்துள்ளது.
அத்துடன், இவர்கள் எங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டு தொடர்பான எந்தவித விபரமும் வெளியிடப்படவில்லையெனவும் இப்பத்திரிகை தெரிவித்துள்ளது.