மலேசியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர்கள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள் என்றும் அவர்களை ஒரு போதும் விடுதலை செய்யவும் கூடாதென அந்நாட்டின் சட்டமா அதிபர் அப்துல் கெனி பட்டைல் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் இந்தியர்களுக்காக போராட்டம் நடத்தியமைக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர்கள் ஐந்துபேரை விடுதலை செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இவர்களின் வழக்கு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது கருத்துத் தெரிவித்த சட்டமா அதிபர் மேலும் தெரிவிக்கையில்;
எமது பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியர்கள் மீது விரிவான விசாரணைமேற்கொள்ளப்படவேண்டுமென பிரதமர் உயர் நீதிமன்றிற்கு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் இவர்களை கைது செய்யுமாறும் பிரதமர் பதாவி உத்தரவிட்டிருந்தாரெனத் தெரிவித்தார்.
இதேவேளை, கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியர்கள் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி தெரிவிக்கையில்:
இவர்கள் சட்டத்துக்கு முரணான வகையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களைக் கைது செய்வதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை. அதனால் இவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனத் தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த சட்டமா அதிபர், இவ்விடயம் தொடர்பாக பிரதமர் அப்துல்லா பதாவியால் நீதிமன்றிற்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த அமைப்பினருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஹிந்ராவ் அமைப்பினர் சர்வதேச ஆதரவைப் பெறமுயற்சிப்பதுடன், பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பினரின் உதவியைப் பெறமுயன்றுள்ளனர்.
அதன்மூலம் நாட்டின் தேசிய பாதுகாப்பையும் அமைதியையும் சீர்குலைக்கும் முயற்சிகளில் ஈடுபடத் திட்டமிட்டிருந்தனர்.
இதனை தடுத்து நிறுத்தாவிட்டால் நாடளாவிய ரீதியில் பாரியளவிலான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு நாட்டின் தேசிய பாதுகாப்பையும் அமைதியையும் சீர்குலைக்குமெனத் தெரிவித்தார்.