* வடமேல் மாகாணசபை உறுப்பினர் எஹியா
"13 ஆவது திருத்தச் சட்டம் சிறுபான்மை இன மக்களுக்கு விமோசனம் அளிப்பதற்காகவே அறிமுகப் படுத்தப்பட்டது. ஆனால் இன்று எந்த ஒரு மாகாண சபையும் இந்த சட்டத்தின் பிரகாரம் அபிவிருத்திகளையோ சலுகைகளையோ வழங்கவில்லை"இவ்வாறு வட மேல் மாகாணசபை உறுப்பினர் எஸ்.ஏ. எஹியா தெரிவித்தார்.
13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான விஷேட கலந்துரையாடல் ஒன்று கடந்த வாரம் முதலமைச்சர் அத்துல விஜேசிங்கவின் தலைமையில் வாரியப்பொல தொழிற் பயிற்சிநிலையக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அங்கு தொடர்ந்து பேசிய மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஏ. எஹியா;
"இனப் பிரச்சினைக்கு தீர்வாக மாகாண சபை அறிமுகப்படுத்தப்பட்டாலும் சிறுபான்மை இனத்தவருக்கு எவ்வித பயனும் அதன் மூலம் பெற்றுக் கொடுக்கப்பட வில்லை. மாகாண சபை மூலம் சிறுபான்மை இனத்தவரின் தேவைகள் நிறைவேற்றப்பட்டாலும் உறுப்பினர்களின் கோரிக்கைகள் செவி மடுக்கப்படுவதில்லை. மாகாண சபை முதலமைச்சர்களாக பெருபான்மையினத்தவர்களே நியமனம் பெறுவதினால் அவர்கள் சிறுபான்மையினரின் கோரிக்கைகளை மத்திய அரசிடம் போராடிப் பெற்றுத் தருவதில்லை.
அவ்வாறு போராடிப்பெற வேண்டிய தேவையும் பெருபான்மை இன முதலமைச்சர்களுக்கு இல்லை .20 வருடமாக மாகாணசபை சிறுபான்மை இனத்தவர்களுக்கு வழங்காத அதிகாரத்தை விரைவில் கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் தேர்தல் மூலம் சிறுபான்மையினத்தவர் ஒருவர் முதலமைச்சரானால் அதன் பின்னர் மத்திய அரசிடம் சிறுபான்மை இனத்தவர் தொடர்பான போராட்டம் புது வடிவம் பெறும். அது வரையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே எந்த முறையிலும் எந்த அமைப்பிலும், அதிகாரத்தினை சிறுபான்மை இனத்தவர் பெற முடியாது" என்றார்.