* அமைச்சர் பேரியல் அஷ்ரப்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கிழக்கை விடுவித்ததன் பயனாகவே ஜனநாயக ரீதியான தேர்தலை எதிர் கொள்ள வாய்ப்பு கிட்டியுள்ளதாக வீடமைப்பு பொதுநிர்வாக அமைச்சர் பேரியல் அஷ்ரப் தெரிவித்தார்.
கிழக்கில் ஏதாவது அபிவிருத்தி இடம் பெற்றிருந்தால் அது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, மற்றும் இன்றைய ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ஷவினது முயற்சியின் பலன் என்றே கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
அம்பாறை தேர்தல் அலுவலகத்தில் வியாழக்கிழமை கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கான வேட்பாளர் நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்த பின்பு மக்கள் மத்தியில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் எம்.ஐ.எம்.றபீக், சட்டத்தரணி அபுல் கலாம், இக்காம் மொஹமட் மற்றும் கிழக்கு மாகாண சபை வேட்பாளர்களான வெஸ்டர்றியாஸ், சாய்ந்த மருது எம்.சலீம், மருதமுனை எம். உவைஸ், பொத்துவில் எம்.பி.ஏ.அஸீஸ் அம்பாறை விமல் வீர திஸநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
மறைந்த தலைவர் அஷ்ரப்பின் கடந்த காலபணிகளை நினைவு கூர்ந்த அமைச்சர் பேரியல் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
"எம்.எச்.எம்.அஷ்ரப் எதிர்க்கட்சியில் இருந்த போதும் எமது மக்களின் பிரச்சினைகளை எதிர் கொண்டு தீர்வை கண்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து பல அபிவிருத்தி திட்டங்களை அவர் முன்னெடுத்தார். இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் மக்களுக்கு சாதித்துக் கொடுத்தது என்ன? இரு வருடகாலம், இந்தக் கட்சியின் உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தில் இணைந்து இருந்தனர். மறைந்த தலைவர் அஷ்ரப் 1993இல் பல சவால்களை முகம் கொடுத்தார்"என குறிப்பிட்டார்.