தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க நாளை செவ்வாய்க்கிழமை அரசியல் கட்சிகளின் தலைவர்களையும், கிழக்கு மாகாண படை அதிகாரிகளையும் , வெளிநாட்டுத் தூதுவர்களையும் ஒரே நேரத்தில் சந்தித்து பேச்சு நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பாதுகாப்புக் குறித்தும் தேர்தல் கண்காணிப்பில் சர்வதேச கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்துவது குறித்தும் இச்சந்திப்பில் ஆராயப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் , ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் கூட்டாக இணைந்து பிள்ளையான் குழுவின் ஆயுதங்களைக் களையுமாறு வலியுறுத்துவர் என்று தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்தும்படியும் அவர்கள் வலியுறுத்தவுள்ளனர்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் குறித்தும் ஆராயும் நோக்கிலேயே இச்சந்திப்பு நடைபெறுகிறது. பல்வேறு விடயங்கள் குறித்து இதில் கலந்துரையாடப்படும்.சர்வதேச கண்காணிப்பாளர்களை தேர்தல் கடமையில் ஈடுபடுத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.