கிழக்கு மாகாண சபை தேர்தல் நியமனப்பத்திரம் கடந்த 3 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து மாகாணசபைக்கு 37 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 1316 பேர் போட்டியிடுகின்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிக போட்டி நிலவுகிறாது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதி உயர்பீட உறுப்பினராகவிருந்த முன்னாள் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து போட்டியிடுவதால் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
காத்தான்குடி இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் நடைபெற்ற முதலாவது கூட்டத்தில் அமைச்சர்களான றிசாத் பதியுதீன், எம்.எஸ்.எஸ்.அமீரலி, நஜீப் ஏ.மஜீத், வேட்பாளர்களான சுவைர், ஜவாஹிர் சாலிஹ் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.
மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் ஜனாதிபதிக்கு அருகே நிற்கும் பிள்ளையானின் பெரியளவிலான கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்த் தேசிய ஜனநாயக கூட்டமைப்பின் நங்கூர சின்னத்திலான சுவரொட்டிகளும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.
ஐ.தே.க. சார்பில் போட்டியிடும் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலான வேட்பாளர்களான முன்னாள் நகரசபை தலைவர் யூ.எல்.எம்.முபீன், பிரதித் தலைவர் மர்சூக் அஹமட்லெவ்வை, சட்டத்தரணி ஐ.எம்.அஸ்வர் ஆகியோர் கருத்தரங்குகளை நடத்தி வாக்குவேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
முஸ்லிம் பிரதேசங்களில் காணப்படும் தீவிர தேர்தல் பிரசாரம் தமிழ் பிரதேசங்களில் சூடுபிடிக்கவில்லை.