* தலைவர் ஈஸ்வரன் தெரிவிப்பு
ரொஷான் நாகலிங்கம்
சிறிய உற்பத்தித்துறைகளை ஊக்குவிக்குமுகமாக இலங்கை வர்த்தக சம்மேளனத்தால் வழங்கப்படும் நிதியுதவி இவ்வருட இறுதிவரையே வழங்கப்படுமென அதன் தலைவர் தெ.ஈஸ்வரன் தெரிவித்ததுடன் இத்தொழில் துறையில் ஈடுபடும் பெண்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நிதியுதவி அளிக்கப்படுமெனவும் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
"நெதர்லாந்து அரசாங்கம் நாட்டின் சிறிய உற்பத்தியை ஊக்குவிக்கும் முகமாக இலங்கை வர்த்தக சம்மேளனத்துக்கு நேரடியாக நிதியுதவியளித்து வருகின்றது. இதுவரை எமக்கு 50 மில்லியன் ரூபா வரை நிதியுதவியை அளித்துள்ளது.
இத்திட்டத்தை கடந்த ஒருவருடத்துக்கு மேலாக எமது சம்மேளனம் மேற்கொண்டுவருகின்ற நிலையில் இது வரை 250 க்கு மேற்பட்டவர்களுக்கு நிதியுதவி அளித்துள்ளோம். இத்திட்டம் இவ்வருட இறுதியில் நிறைவு பெறவுள்ளதால் இலங்கை வர்த்தக சம்மேளனத்துடனோ அல்லது மாவட்ட சம்மேளனங்களுடனோ தொடர்புகொண்டு இந்த நிதியுதவியை பெற்றுக்கொள்ள முடியும்.
சிறிய உற்பத்திக்கான நிதியுதவி பெற விரும்புபவர்கள் நாட்டில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டுள்ளதாக கருதப்படும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை தவிர்ந்தவர்களாக இருக்கவேண்டும். அத்துடன் சிறிய உற்பத்தியில் கடந்த இருவருடகாலமாக குறைந்தது ஈடுபட்டிருக்க வேண்டுமென்பது முக்கியமானதாகும்.
நாம் வாகனம், கட்டிடம் மற்றும் தொலைத்தொடர்பு சேவையென்பவற்றுக்கு நிதியுதவி அளிக்கமாட்டோம். அதாவது ஒரு இயந்திரத்தைக் கொள்வனவு செய்து குறைந்தது 2 பேருக்கு மேலதிகமாக வேலைவாய்ப்பு வழங்கும் பட்சத்திலேயே இந்த நிதியுதவியை அளிக்கவுள்ளோம்.
ஒரு சிறிய உற்பத்தி நிறுவனம் கொள்வனவு செய்யவுள்ள இயந்திரத்தின் பெறுமதியின் 75 வீத பங்கையே நாம் கொள்வனவு செய்யும் நிறுவனத்துக்கு நேரடியாக வழங்குவோம். இவை தொடர்பில் நாம் எமது சம்மேளனத்தால் மேற்பார்வை செய்தே வழங்கவுள்ளோம்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு இந்த உதவியை அம்மாவட்ட அரச அதிபர் ஊடாக நாம் வழங்குகின்ற நிலையில், வட,கிழக்கு சிறிய உற்பத்தியாளர்கள் இவ்வுதவியை அம்மாவட்டங்களிலுள்ள சம்மேளனங்களின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
குறிப்பாக பெண்கள் மத்தியில் சிறிய உற்பத்தியை அதிகரிக்குமுகமாக அவர்களுக்கு முன்னரிமை அடிப்படையில் உதவிகளை வழங்குகின்றதுடன் நுவரெலியா, கண்டி மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் உள்ளவர்களே இதுவரை அதிகளவான நன்மைகளை பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.