* அமைச்சர் பந்துல குணவர்த்தன
அரசியல் மாற்றங்களினால் பொருட்களின் விலை உயர்வை நீக்க முடியாதென நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்ததுடன், சட்டிகளை உடைப்பதனால் பொருட்களின் விலை குறைந்து விடாதென்றும் தெரிவித்துள்ளார்.
குருநாகலையில் `கோப் சிற்றி' மலிவு விற்பனை நிலையத்தை கடந்த வியாழக்கிழமை திறந்து வைத்து பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் பேசுகையில் கூறியதாவது;
"உள்நாட்டு உற்பத்தி அதிகரித்தால் மட்டுமே வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்த முடியும். உற்பத்தியாளர்கள் தமது உற்பத்தி பொருட்களுக்கு அதிக விலையை எதிர்பார்க்கின்ற நிலையில், நுகர்வோர் குறைந்த விலையில் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்க்கின்றனர்.
இருதரப்பினதும் நோக்கம் இருவேறு துருவமாகவுள்ள நிலைமையில், உலக சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரித்துச் செல்கின்றது.
இவ்வாறான சூழ்நிலையில், பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்தி வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கு ஒரேயொரு வழிதான் உள்ளது. அது ்நாம் வளர்ப்போம் நாட்டைக் கட்டியெழுப்புவோம்ீ என்ற எமது அரசு மேற்கொள்ளும் திட்டத்துக்கு ஒத்துழைத்து பங்களிப்பு வழங்குவதேயாகும்.
அரசியல் மாற்றங்களை கொண்டு வருவதினால் பொருட்களின் விலையுயர்வுப் பிரச்சினையை தீர்த்து விட முடியாது. சட்டி, பானைகளை உடைத்து பொருட்களின் விலையுயர்வை குறைத்து விட முடியுமென்றால் நாம் அனைவரும் அரசியல் கட்சி பேதங்களை மறந்து ஒன்றுபட்டு சட்டி, பானைகளை உடைப்போம்" என்றார்.