* அனுதாபச் செய்தியில் அருள்சாமி
அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்வதற்காக அர்ப்பணிப்புடன் பாடுபட்டவர் என மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எஸ்.அருள்சாமி தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
நேற்றுக் காலை கம்பஹா வெலிவெரிய பகுதியில் நடைபெறவிருந்த மரதன் ஓட்டப்போட்டியின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டபோது இடம்பெற்ற குண்டுவெடிப்பில் மரணமான அமைச்சர் ஜெயராஜின் மறைவு குறித்த அனுதாபச் செய்தியிலேயே அருள்சாமி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மறைந்த அமைச்சரின் கடந்தகாலப் பணிகளை நினைவுகூர்ந்து வெளியிட்ட அந்த அனுதாப அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
இலங்கை நாடு இன்று பல முக்கிய அரசியல் தலைவர்களை இழந்து நாடு படும் பாதாளத்திற்கு தள்ளப்பட்டுவருகின்றது. இவ்வாறான அரசியல்வாதிகள் கொலை செய்யப்படுவதால் இந்நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்படப்போவதில்லை. இந்நாட்டிலுள்ள மக்களது உயிர்களை பாதுகாக்க வேண்டுமானால் நாட்டில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி ஒரு நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும்.
மறைந்த ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தமிழ், சிங்களம், ஆங்கிலம் மொழிகளில் பொதுமக்களிடம் சரளமாக உரையாடி சகல இன மக்கள் மனதிலும் நீங்காத இடம்பிடித்தவர். அவரின் மறைவையொட்டி தொழிலாளர் விடுதலை முன்னணியும் ஆசிரியர் விடுதலை முன்னணியும் தனது ஆழ்ந்த அனுதாபத்தை அவரின் குடும்பத்தினருக்கு தெரிவித்துக்கொள்வதாக அருள்சாமி விடுத்த அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.