அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் இழப்பு கேட்டு மிகப்பெரும் அதிர்ச்சிக்குள்ளானேன். தற்போதைய நிலையில் அவரது இழப்பு எவ்வகையிலும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்று பிரதி சுகாதார அமைச்சரும் பெருந்தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
அமைச்சரின் இவ்விழப்பினை அறிந்த முழு மலையகமே ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. மலையகம் முழுவதும் சோகமயமாகவுள்ளது. அமைச்சர் பெர்னாண்டோ புள்ளே மலையகப் பெருந்தோட்டத்துறை மக்களின் மேம்பாட்டு வேலைத்திட்டங்களை மிகுந்த அக்கறையுடன் மேற்கொண்டுவந்தார்.
அவரின் துரித முயற்சிகளினாலேயே பெருந்தோட்டத்துறை பாதைகள் பல உறுதியாக அமைக்கப்பட்டன.
ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான இவர், அதிசிறந்த தலைமைத்துவத்தினை கொண்டிருப்பதுடன், எம் எல்லோருக்கும் வழிகாட்டியாகவும் திகழ்ந்திருந்தார். சிறந்த பேச்சாற்றலை கொண்ட அமைச்சர், மனதில் பட்டதை மிகத் துணிவுடனும் ஆனித்தரமாகவும் முன்வைத்து செயல்பட்டார். பாரிய பொறுப்புக்களை இவர் வகித்த போதிலும் சிறிதும் ஆடம்பரமற்ற முறையில் தம்மை நாடிவந்தவர்களை இன்முகத்துடன் அணுகி, அவரவர் தேவைகளை நிறைவேற்றி வந்தவராவார்.
பாராளுமன்ற அமர்வுகளின் போது, எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு தகுந்த பதிலடியினைக் கொடுத்து வாயடைக்கச் செய்தவர். அவரது பதிலுரை நகைச்சுவையுடன் கூடியதாக இருந்ததினால் அனைவரினதும் பாராட்டைப் பெற்று பாராளுமன்றத்தின் தனிக்குரலாக அமைந்திருந்தது.
அவரது இழப்பிற்கு காரணமானவர்களை உடன் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தும் ஆக்கபூர்வ நடவடிக்கைகளை பாதுகாப்புத்துறையினர் மேற்கொள்ள வேண்டும். அவரது குடும்பத்தினருக்கு அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.