* சுட்டிக்காட்டும் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும்
ஏற்றுமதியை அதிகரிப்பது தொடர்பில் நாட்டின் மனித உரிமைகள் தொடர்பாகப் பரிசீலனை செய்யுமாறு இலங்கையின் பாரிய ஏற்றுமதித் தொழிற்றுறைக்கு இரு பெரிய ஏற்றுமதிப் பங்காளிகள் கூறியுள்ளனர்.
அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கைப் பொருட்களை அதிகளவில் கொள்வனவு செய்பவையாகும். வர்த்தகத்தில் மேம்பாடடைவதற்கு மனித உரிமைகள் விவகாரம் கணக்கில் எடுக்கப்படுவதாக ஆடைத்தொழிற்றுறைக்கு இந்த இரு சாராரும் கடந்தவாரம் தெரிவித்துள்ளனர்.
முன்னுரிமை அடிப்படையில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்பது தொடர்பாக அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் இலங்கை ஈடுபட்டுள்ளது. ஆனால், இலங்கையின் எதிர்மறையாக இருக்கும் மனித உரிமைகள் தொடர்பான பதிவுகள் சகலவற்றையும் முக்கியத்துவம் இழக்கச் செய்துள்ளதாக அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் பிளேக் ஆடை ஏற்றுமதியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
`இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துமாறும் அரசிலுள்ள எமது நண்பர்களுடனும் இணைந்து முழுமையான பணியில் நீங்கள் ஈடுபட வேண்டும் என்றும் ஆடைக்கொள்வனவு அலுவலகங்கள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தின் போது ரொபேர்ட் பிளேக் கூறியுள்ளார்.
`இங்குள்ள மனித உரிமைகள் தொடர்பான எதிர்மறையான நிலைவரங்கள் அமெரிக்க காங்கிரஸ் மற்றும் அமெரிக்க மக்கள் மத்தியில் முக்கியத்துவத்தை இழக்கச் செய்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தகத்தையும் மனித உரிமைகள் நிலைவரத்தையும் ஒன்றாகவே இணைத்துப் பார்க்கிறது.
கடந்த வருடம் அமெரிக்கச் சந்தை வாய்ப்பை இலங்கை இழந்தபோதும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னுரிமை சலுகைத் திட்டத்தால் ஆடைத்தொழில் துறையின் ஏற்றுமதி அதிகரித்தது. இத்திட்டத்தின் பிரகாரம் தீர்வையற்ற முறையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதி செய்ய முடியும். முன்னுரிமை சலுகைத் திட்டத்தின் பிரகாரம் ஆடைகளை மாத்திரமன்றி 7200 வகையானவற்றை தீர்வையின்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.
இலங்கையைத் தான் நேசிப்பதாகவும் ஆனால், தொழிலாளர் உரிமைகள், தரம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான 27 சர்வதேச தீர்மானங்களை அமுல்படுத்துவதிலேயே முன்னுரிமை சலுகை வசதிகள் தங்கியிருப்பதாக ஆடைக்கொள்வனவு அலுவலகங்களின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில், ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் ஜூலியன் வில்சன் தெரிவித்திருக்கிறார்.