இலங்கையில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான பேரணிகளை நியூயோர்க்கில் உள்ள இலங்கை அலுவலகங்களுக்கு முன்பாக நடத்துவதற்கு சர்வதேச மன்னிப்புச் சபை தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச மன்னிப்புச் சபையைச் சேர்ந்த 1,000 தொண்டர்கள் இலங்கை, மியன்மார், டார்பர்(சூடான்), போபால் (இந்தியா) ,லிபியா ஆகிய பகுதிகளில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான பேரணிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அமெரிக்காவின் 10 மாகாணங்களைச் சேர்ந்த தொண்டர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.
எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறும் இந்த எதிர்ப்புப் பேரணி, நியூயோர்க்கில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள், ஐ.நா அலுவலகங்களின் முன்பாக நடைபெறவுள்ளது. இந்தப் பேரணியை சர்வதேச மன்னிப்புச் சபையின் அமெரிக்கப் பிரிவு 133 ஒழுங்கு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதன்போது 2006 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் மற்றும் 2006 ஆம் ஆண்டில் இருந்து படுகொலை செய்யப்பட்ட 10 க்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.