* உயர் நீதிமன்றத்தில் மனு
கத்தோலிக்க பாடசாலைகளில் கத்தோலிக்க பிள்ளைகளை அனுமதிக்க முடியாதிருப்பதாக கொழும்பு ஆயர் இல்லத்தின் கத்தோலிக்க பாடசாலைகளின் இயக்குநரான அருட்தந்தை உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
ஹன்வெல்ல புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் 67 வீதமான கத்தோலிக்க பிள்ளைகள் அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால், 18 வீதமான கத்தோலிக்க பிள்ளைகளுக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேபோல, கந்தானை சென். செபஸ்ரியன் மகளிர் கல்லூரி, மத்துகம சென். மேரிஸ் கல்லூரி என்பவற்றிலும் குறைவான கத்தோலிக்க பிள்ளைகளே அனுமதிக்கப்பட்டனர் எனவும் மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு சமயப் பாடசாலையில் ஒரு பிள்ளையை சேர்க்கும்போது அச்சமயத்தைச் சேர்ந்த பிள்ளைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று பாடசாலைகளை அரசு 1961 இல் சுவீகரிக்கும் போது தெரிவித்திருந்ததையும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அந்த விதிகளுக்கு மாறாக இப்பாடசாலைகளில் பிள்ளைகளின் அனுமதி முறை அமுல்படுத்தப்படுகிறது.
கத்தோலிக்க பாடசாலைகளில் மாணவர்களை அனுமதிக்கும் போது கத்தோலிக்க மாணவர்களுக்கு 60 வீதம் முதல் 70 வீதம் வரையும் இடம் அளிக்கப்பட வேண்டும் என கல்வியமைச்சின் அனுமதி விதி தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், சில கத்தோலிக்க பாடசாலைகளில் கத்தோலிக்க பிள்ளைகளின் அனுமதி விகிதம் குறைந்துள்ளது.
எனவே, கத்தோலிக்க பாடசாலைகளில் கத்தோலிக்க பிள்ளைகளுக்கு அனுமதி வழங்கும்போது முன்னுரிமை அளிக்க நீதிமன்றம் கல்வியமைச்சுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அருட்தந்தை தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவில் கல்வியமைச்சின் செயலாளர் உட்பட எட்டுப் பேர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.