* தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி. அரியநேத்திரன்
கிழக்கு மாகாணசபைத் தேர்தல் மோசடியான முறையிலேயே இடம்பெறப்போகிறது என்பதை வேட்பு மனுத் தாக்கல் வெளிப்படுத்துகின்றது. விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற கட்சியின் பெயரில் போலி வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதன் மூலம் இதனை அறிந்துகொள்ள முடியுமென மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பி.அரியநேத்திரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
விடுதலைப் புலிகள் 1989 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதியாக இருந்த ஆர்.பிரேமதாஸவின் காலப்பகுதியில் ஏற்பட்ட போர் நிறுத்தம், பேச்சுவார்த்தைக்குப்பின் "விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி" எனும் பெயரில் தேர்தல் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக அறிவிக்கப்பட்டது. இக்கட்சியின் செயலாளர் நாயகமாக அக்கால கட்டத்தில் விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளராக இருந்த யோகரெட்ணம் யோகி நியமிக்கப்பட்டிருந்தார்.
ஆனால், எந்த ஒரு தேர்தலிலும் இக்கட்சியினால் இதுவரை வேட்பு மனுத்தாக்கல் செய்யப்படவில்லை. தேர்தல்களிலும் அது போட்டியிடவும் இல்லை.
தற்போது கடந்த 3 ஆம் திகதி கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி கட்சியின் பெயரில் கட்சி செயலாளர் யோகரெட்ணம் யோகி என்பவரின் போலிக் கையொப்பம், போலி றப்பர் முத்திரை, போலி முகவரி என்பன இடப்பட்டு போலி சமாதான நீதிவான் உறுதிப்படுத்தலுடன் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதுடன், வேட்பாளர்களில் அநேகமானவர்கள் சிங்களவர்களாக காணப்படுகின்றனர்.
விடுதலைப் புலிகளின் உறுப்பினராக தற்போது வன்னியில் உள்ள யோகரெட்ணம் யோகியின் கையொப்பத்தை வேட்பு மனுவில் போலியாக வைத்து இந்த மோசடி வேட்பு மனுவை தாக்கல் செய்ததன் மூலம் எதிர்வரும் மே 10 ஆம் திகதி இடம்பெறும் கிழக்கு மாகாண தேர்தல் முழுமையான மோசடித் தேர்தல் என்பது தெட்டத்தெளிவாக நிரூபணமாகியுள்ளது.
இந்த தில்லுமுல்லுத்தனமான, போலியான செயலானது அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் செய்யப்பட்டிருப்பதை தென்பகுதியில் இயங்கும் பல அரசியல் கட்சிகளினால் சுட்டிக்காட்டப்பட்ட போதும் அரசு மௌனம் தெரிவிப்பதில் இருந்து உண்மை நிருபிக்கப்பட்டுள்ளது.