கமபஹா வலிவோரியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம் பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குலில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொல்லப்பட்டதையடுத்து வட பகுதிக்கான அனைத்து போக்குவரத்துக்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
நேற்று முற்பகலுடன் மதவாச்சி வீதிச் சோதனை நிலையம் மூடப்பட்டு வடபகுதியிலிருந்து எவரும் தென்பகுதிக்கு வர அனுமதிக்கப்படவில்லை. மறு அறிவித்தல் வரை வடபகுதிக்கான சகல போக்குவரத்துக்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மதவாச்சி வீதிச் சோதனை நிலையத்தில் படையினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மற்றும் மன்னாரிலிருந்து தென் பகுதிக்குச் செல்வதற்காக மதவாச்சி இராணுவ சோதனை நிலையத்திற்குச் சென்ற பயணிகள் அனைவரும் மதவாச்சியை தாண்டிச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இதனால் வவுனியாவிலிருந்தும் மன்னாரிலிருந்தும் தென் பகுதிக்குச் செல்வதற்காகச் சென்றவர்கள் மதவாச்சியில் நேற்று முழு நாளும் காத்திருந்தனர்.
எனினும் தெற்கிலிருந்து வடக்கே சென்றவர்களை மதவாச்சி சோதனைநிலையத்தை தாண்டிச் செல்ல அனுமதித்ததுடன் மறு அறிவித்தல் வரை தென்பகுதிசெல்ல அனுமதிக்கமாட்டோமெனவும் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே வடக்கிற்கும் வெளியிடங்களுக்குமான வாகனப் போக்குவரத்துக்கள் தடைசெய்யப்பட்ட நிலையில் தற்போது பயணிகள் போக்குவரத்தும் படையினரால் தடைசெய்யப்பட்டுள்ளன.
எதுவித முன்னறிவித்தலுமின்றி படையினர் மேற்கொண்ட இந்தச் செயலால் ஆயிரக்கனக்கான மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.