* யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி
யாழ். குடாநாட்டு மக்களுக்கு அடுத்த சில மாதங்களில் விசேட அடையாள அட்டைகளை விநியோகிக்கும் யோசனையை இராணுவம் முன்வைத்துள்ளது.
கொழும்பு உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு செல்வதற்கான பயணத்திற்கு ஆளடையாளத்தை நிரூபிப்பது உட்பட பல்வேறு நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்புதிய விசேட அடையாள அட்டைகளை விநியோகித்தால் ஆட்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளை இலகுபடுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.
அத்துடன், யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொள்வோரை அடையாளத்தை நிரூபிப்பதற்கான நடவடிக்கைகளை கணினிமயமாக்குவது தொடர்பாகவும் இராணுவம் யோசனை சமர்ப்பித்திருக்கிறது.
இதனையும் அடுத்த சில மாதங்களில் நடைமுறைப்படுத்துவதென யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என்று தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சென்ற செய்தியாளர்களிடம் யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
அத்தாட்சிப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் உட்பட வேண்டியிருக்கின்ற போதும் கணினி மயமாக்கல் மூலம் இதனை சீர்படுத்த முடியுமென அவர் கூறியதாக பி.ரி.ஐ. செய்திச்சேவை குறிப்பிட்டிருக்கிறது.
விசேட அடையாள அட்டைகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு அவர் பதிலளிக்கையில், முதற்கட்ட நடவடிக்கைகள் பூர்த்தியடைந்திருப்பதாகவும் இதற்காக சகல மக்களையும் புகைப்படம் பிடித்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
யாழ்.குடாநாட்டில் தற்போது 6-1/2 இலட்சம் தமிழ் பேசும் மக்கள் உள்ளனர். அவர்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை இராணுவத்தினர் மேற்கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இதேவேளை, வடபோர் முனையில் போரில் வெற்றிபெறும் வரை ஏ-9 நெடுஞ்சாலை திறக்கப்படமாட்டாது என்றும் மேஜர் ஜெனரல் சந்திரசிறி கூறியுள்ளதாக இணையத்தளமொன்று தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகளை போரில் முறியடிக்கும் வரையிலும் யாழ். குடாநாட்டை நாட்டின் ஏனைய பகுதிகளுடன் இணைக்கும் ஏ-9 நெடுஞ்சாலையை திறக்கப்போவதில்லை.
ஏ-9 பாதை மூடப்பட்டுள்ள போதும் குடாநாட்டிற்கான உணவு விநியோகம் நடைபெறுகின்றது. யாழ். குடாநாட்டின் பாதுகாப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.