தற்கொலைத் தாக்குதலில் ஜெயராஜ் உட்பட 15 பேர் பலி
* 96 பேர் படுகாயம்; கம்பஹா வலிவேரிவில் சம்பவம்
கம்பஹா வலிவேரியா பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே உட்பட 15 பேர் கொல்லப்பட்டதுடன். 96 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தமிழ்- சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு வலிவேரியா வெலுமஹா பகுதியில் நேற்றுக் காலை 7.30 மணியளவில் மரதனோட்டப் போட்டியை ஆரம்பித்துவைக்க அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தயாரான போதே அவர் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இந்தத் தாக்குதலில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே, முன்னாள் ஒலிம்பிக் வீரரும் தெற்காசிய மரதனோட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றவருமான கே.ஏ.கருணாரட்ன, தேசிய மெய்வல்லுநர் பயிற்சியாளரான லக்ஷ்மன் டி சில்வா மற்றும் மரதனோட்ட வீரர்கள் சிலர் உட்பட 15 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டதுடன், பொலிஸ் அதிகாரிகள், பொலிஸார், மரதனோட்ட வீரர்கள், பொதுமக்கள் மற்றும் விளையாட்டு அதிகாரிகளென 96 பேர் படுகாயமடைந்தனர்.
வெலுமஹா- கொழும்பு வீதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது;
தமிழ்- சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு கம்பஹா விளையாட்டுக் கழகமும் இலங்கை மெய்வல்லுநர் சங்கமும் இணைந்து மாபெரும் மரதனோட்டப் போட்டியை நேற்று ஒழுங்கு செய்திருந்தது.
இப்போட்டியின் பிரதம விருந்தினராக அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே கலந்துகொண்டார்.
நேற்றுக் காலை 7 மணிக்கு அங்கு வந்த அமைச்சர் பெர்னாண்டோ புள்ளே சுமார் அரை மணி நேரம் அப்பகுதியிலிருந்தவர்களுடன் உரையாடிய பின் சுமார் 7.30 மணியளவில் போட்டியை ஆரம்பிப்பதற்காக, மரதனோட்டப் போட்டி தொடங்குமிடத்திற்கு வந்தார்.
அவ்வேளையில், மரதனோட்டத்தில் பங்குபற்றிய பெருமளவு இளைஞர்கள் வீதிக்கு குறுக்கே தயாராக நின்றபோது மரதனோட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக அமைச்சர் பொர்னாண்டோ புள்ளேயிடம் முன்னாள் மரதனோட்ட வீரர் கே.ஏ.கருணாரத்தின கொடியைக் கையளித்தார்.
இதையடுத்து, கொடியை அசைத்து மரதனோட்டத்தை ஆரம்பிக்க அமைச்சர் பெர்னாண்டோ புள்ளே தயாரான போது பாரிய சத்தத்துடன் குண்டொன்று வெடித்துள்ளது.
இதனால் அமைச்சரும் அவருடன் நின்றவர்களும் பொலிஸாரும் மரதனோட்ட வீரர்களும் பொதுமக்களுமென பெருமளவானோர் அந்த இடத்திலேயே வீழ்ந்தனர். இதில் அமைச்சர் உட்பட 15 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். அமைச்சரது உடலும் வேறு சிலரது உடல்களும் பெரிதும் சிதைவடைந்து உருக்குலைந்து கிடந்தன.
படுகாயமடைந்து வீதியிலும் வீதியோரத்திலும் வீழ்ந்து கிடந்தவர்கள் உடனடியாக வாகனங்கள் மூலம் கம்பஹா ஆஸ்பத்திரிக்கு அவசர அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டனர்.
படுகாயமடைந்தவர்களில் கம்பஹா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஹெக்டர் தர்மசிறியும் வலிவேரியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வன்டவற்ரும் அடங்குவர்.
மரதனோட்டப் போட்டியை தொடக்கிவைக்குமிடத்திற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகேயும் வேறு சில அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களும் வருகை தரவிருந்த போதும் அவர்கள் அங்கு தாமதமாகவே வந்து சேர்ந்ததால் உயிர் தப்பினர்.
இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்ட தேசிய மெய்வல்லுநர் பயிற்சியாளர் லக்ஷ்மன் டி சில்வா, பிரதி விளையாட்டுத்துறை அமைச்சர் பந்துல பசநாயக்காவின் இணைப்புச் செயலாளருமாவார்.
இதைவிட இந்தச் சம்பவத்தில் கொழும்பு சாஹிரா கல்லூரி றகர் விளையாட்டுக்கான பொறுப்பாசிரியர் அத்தநாயக்கவும் கொல்லப்பட்டுள்ளார்.
தற்கொலைக் குண்டுதாரியும் மரதனோட்ட வீரரைப் போல் அங்கு ஓடுவதற்கு தயாராக நின்றே, அமைச்சர் பெர்னாண்டோ புள்ளே அருகில் வந்து போட்டியை ஆரம்பித்துவைப்பதற்காக கொடியை அசைக்க முற்பட்டபோது குண்டை வெடிக்கவைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தத் தாக்குதலில் உடல் சிதறிப் பலியான தற்கொலைக் குண்டுதாரியின் தலை, பின்னர் அந்தப் பகுதியில் சற்று தூரத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பலத்த பொலிஸ் பாதுகாப்பு இருந்தும் குண்டுதாரி மரதனோட்ட வீரர்கள் அணியும் உள்பெனியனுக்குள் எப்படிக் குண்டை மறைத்து வைத்திருந்தாரென்பதும் எவரையும் சோதனையிடாது அமைச்சருக்கு மிக அருகில் தற்கொலைக் குண்டுதாரி செல்ல எப்படி அனுமதிக்கப்பட்டார் என்பதும் ஆச்சரியமாயிருப்பதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்ட அமைச்சர் உட்பட பலரது சடலங்கள் மிக மோசமாகச் சிதைவடைந்த நிலையிலேயே அங்கு கிடந்து பின்னர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டன.
சம்பவத்தையடுத்து அப்பகுதிக்கு உடனடியாகப் பொலிஸாரும் படையினரும் விரைந்து வந்தனர். பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேராவும் அங்கு வந்தார்.
அப்பகுதி உடனயாக சுற்றிவளைக்கப்பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டதுடன், தேடுதல்களும் நடைபெற்றன. வீதிப் போக்குவரத்தும் நீண்டநேரம் தடைசெய்யப்பட்டிருந்தது.
சம்பவத்தில் படுகாயமடைந்த அனைவரும் உடனடியாகக் கம்பஹா ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
படுகாயமடைந்த 96 பேரில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாயிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. 92 பேர் கம்பஹா ஆஸ்பத்திரியிலும் மூவர் ராகம ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டனர். ஆபத்தான நிலையிலிருந்த ஐவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் இவர்களில் மூவர் உயிரிழந்தனர்.
சம்பவம் குறித்து உடனடியாக ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டது. இதுபற்றிக் கேள்வியுற்று அவர் பெரும் அதிர்ச்சியடைந்ததுடன், உடனடியாகத் தனது சகோதரரும் எம்.பி.யுமான பசில் ராஜபக்ஷவை ஹெலிகொப்டர் மூலம் கம்பஹா ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்.
இந்தச் சம்பவத்தை ஜனாதிபதியும் பிரதமரும் வன்மையாகக் கண்டித்துள்ளனர். அமைச்சர் ஜெயராஜின் சொந்த இடமான நீர்கொழும்பிலும் மக்கள் பெரும் அதிர்ச்சியும் கவலையுமடைந்துள்ளனர். அந்தப் பிரதேசம் முழுவதும் பெரும் சோகமயமாயுள்ளது.
அமைச்சரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் வியாழக்கிழமை மாலை பூரண அரச மரியாதையுடன் கட்டானையில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, அமைச்சர் கருஜெயசூரிய மற்றும் கம்பஹா மாவட்ட ஆளும் கட்சி எம்.பி.க்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஜெயராஜ், இந்த வருடத்தில் கடந்த மூன்று மாதங்களில் கொல்லப்பட்ட ஆறாவது பாராளுமன்ற உறுப்பினரும் 2 ஆவது அமைச்சருமாவார்.
வாழ்க்கை வரலாறு
1953 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 ஆம் திகதி பிறந்த இவர் நீர்கொழும்பு மேரிஸ் ரெல்லா கல்லூரியில் கல்வி பயின்றார். சிறுவயதிலிருந்தே சிறந்த பேச்சாளரான இவர் இலங்கை சட்டக் கல்லூரி மாணவராக இருக்கும்போது ஜூரி சபையின் விசேட வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டார்.
1977 ஆம் ஆண்டு சட்டத்தரணியாகத் தொழிலை ஆரம்பித்த இவர் சிறந்த சட்டத்தரணியாகவும் புகழ்பெற்றார். 1983 ஆம் ஆண்டு கட்டானை தொகுதியின் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளரான இவர், 1989 ஆம் ஆண்டு கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்றம் சென்றார்.
1993 ஆம் ஆண்டு சுதந்திரக் கட்சியின் அரசியல் சபைக்குத் தெரிவானார். பின் அக்கட்சியின் பிரதிச் செயலாளரானார். உயிரிழக்கும் போது இவர் கட்சியின் பிரதித் தவிசாளராயிருந்தார்.
1994 ஆம் ஆண்டு 2 ஆவது தடவை பாராளுமன்றத்திற்கு தெரிவான இவர் நிதி, திட்ட அமுலாக்கல், இனவிவகார மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சராகவுமிருந்தார்.
1997 இல் திட்ட அமுலாக்கல் பாராளுமன்ற விவகார அமைச்சரானார்.
2000 ஆம் ஆண்டு மூன்றாவது தடவையாக எம்.பி.யான இவர், பாராளுமன்றத் தெரிவுக் குழுக்கள் பலவற்றின் தலைவராகவும் உறுப்பினராகவுமிருந்துள்ளார்.
2004 இல் மீண்டும் பாராளுமன்றம் சென்ற இவர் வர்த்தக, வாணிப மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சரானார். அத்துடன், ஆளும் கட்சியின் பிரதம கொரடாவாகவும் நியமிக்கப்பட்டார்.
2005 இல் ஜனாதிபதித் தேர்தலையடுத்து வர்த்தக, வாணிப விற்பனை அபிவிருத்தி அமைச்சராகவும் நெடுஞ்சாலைகள் அமைச்சராகவுமிருந்தார்.
இலங்கை அரசு சார்பில், விடுதலைப் புலிகளுடன் ஜெனீவாவில் நடைபெற்ற கடைசி இரு சுற்றுப் பேச்சுகளிலும் கலந்துகொண்டதுடன், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச மாநாடுகள் பலவற்றிலும் கலந்துகொண்டார்.
நாடுகளுக்கிடையில் இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் உயர்மட்ட சந்திப்புகள் பலவற்றிலும் கலந்துகொண்டார்.
1994 ஆம் ஆண்டு மோல்டாவில் நடைபெற்ற பொதுநலவாய உலக வர்த்தக அமைப்பின் 6 ஆவது மாநாட்டிலும் இலங்கை சார்பில் இவர் கலந்துகொண்டார்.
2005 இல் பாப்பரசர் 2 ஆம் அருளப்பர் சின்னப்பரின் மறைவின் போது ஜனாதிபதியின் அனுதாபச் செய்தியை இவரே வத்திகானுக்கு எடுத்துச் சென்றார்.
கல்வி அபிவிருத்தி அமைப்பின் தலைவராகக் கடமையாற்றிய இவர், ஒவ்வொரு வருடமும் 1,500 மாணவர்களுக்கு புலமைப்பரிசிலையும் வழங்கி வந்தார்.
கடைசியாக இவர், கிழக்குமாகாண சபைத் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் திருகோணமலை மாவட்ட பிரசாரப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.