ஐ.சி.சி.யின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக தென்னாபிரிக்காவைச் சேர்ந்த லார்கட் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதனை ஐ.சி.சி. அதிகாரப்பபூர்வமாக அறிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) அதிகாரம் படைத்த பதவியான தலைமை செயலதிகாரியாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மால்கம் ஸ்பீட் இருந்து வருகிறார். இவரது பதவிக் காலம் ஜூன் மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து அந்தப் பொறுப்புக்கு தென்னாபிரிக்காவின் இம்தியாஸ் பட்டேல் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், சில நாட்கள் கழித்து அப்பொறுப்பை ஏற்க அவர் மறுத்து விட்டார்.
இதைத் தொடர்ந்து மீண்டும் புதிய தலைமைச் செயலதிகாரியை தேடும் பணியை தொடங்கிய ஐ.சி.சி. தென்னாபிரிக்காவின் 47 வயதான ஹரூன் லார்கட்டை இந்த பதவிக்கு அணுகியது. அவர் இந்த பொறுப்பை ஏற்க ஒப்புக் கொண்டுள்ளார்.
இதையடுத்து புதிய செயலதிகாரியாக லார்கட் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் ஜூன் 29 ஆம் திகதி முதல் ஜூலை 4 ஆம் திகதி வரை நடக்கும் ஆண்டு பொதுக்குழு கூட்டத்திற்கும் பின் இந்தப் பொறுப்பை அவர் ஏற்றுக் கொள்வார் என்றும் ஐ.சி.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
`ஐ.சி.சி.யின் 3 ஆவது செயலதிகாரி லார்கட். அவர் இந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இவர் ஏற்கனவே தென்னாபிரிக்க அணியின் தேர்வுக் குழுத் தலைவராகவும் அதன் நிர்வாகியாகவும் பணியாற்றியுள்ளார்' என்று ஐ.சி.சி. தேர்வுக் குழுத் தலைவர் டேவிட் மோர்கான் குறிப்பிட்டார்.
தென்னாபிரிக்காவின் கேப்டவுன் மற்றும் ஜொகனஸ் பேர்க்கில் செயற்படும் ்கபெலா இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஹோல்டிங்ஸ்ீ என்ற நிறுவனத்தின் செயல் இயக்குநராக லார்கட் இருந்து வருகிறார். அவர் முதல்தர கிரிக்கெட் போட்டியில் விளையாடி 2,813 ஓட்டங்களும் 191 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.