* கும்பிளே நம்பிக்கை
சரிவிலிருந்து அடுத்த டெஸ்ட் போட்டியில் வீறுகொண்டு எழுவோமென்று இந்திய அணிக் கப்டன் கும்பிளே கூறியுள்ளார்.
ஆமதாபாத் டெஸ்ட் தோல்விக்குப் பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;
முதல் இனிங்ஸில் 76 ஓட்டங்களில் சுருண்டு, அதன் பின் 2-ஆவது இனிங்ஸில் மீண்டு வருவது மிகவும் கடினமாகும். இந்த டெஸ்டிலிருந்து நாங்கள் நிறையப் பாடம் கற்றுக் கொண்டுள்ளோம். இந்த சரிவிலிருந்து நாங்கள் மீள்வோம். இதேபோன்ற நிலைமையை நாங்கள் ஏற்கனவே சந்தித்திருக்கிறோம். பந்துவீச்சாளர்களை குறை சொல்ல முடியாது. அவர்கள் தங்கள் 100 சதவீத முழுத் திறமையையும் வெளிப்படுத்தினார்கள். ஆனால் பலன் தான் கிடைக்காமல் போய் விட்டது.
தென்ஆபிரிக்க அணிக்கு முதல் 4 விக்கெட்டுகளை நாங்கள் விரைவில் கைப்பற்றினோம். ஆனால் 5-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த டிவில்லியர்ஸ் - கலிஸ் ஜோடி (இந்த ஜோடி 256 ஓட்டங்கள் எடுத்தது) ஆட்டத்தின் போக்கையே மாற்றி விட்டது. இவர்களை விரைவிலேயே வீழ்த்தியிருந்தால் ஆட்டம் வேறு மாதிரி அமைந்திருக்கும்.
முதல் இனிங்ஸை விட 2-ஆவது இனிங்ஸில் துடுப்பாட்டம் நன்றாக இருந்தது. இதில் நமது வீரர்கள் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தினார்கள். ஆனால் அதனை நிறைய ஓட்டங்களாக மாற்றத் தவறி விட்டார்கள். நாங்கள் கான்பூரில் நடக்கவுள்ள கடைசி டெஸ்டில் வீறு கொண்டு எழுவோம். இங்குள்ள சாதனைகள் நமக்கு சாதமாக இருக்கின்றன. ஆடுகளத்தை இப்படித் தான் தயார் செய்ய வேண்டுமென்று எந்த அறிவுரையும் நான் கொடுப்பது கிடையாதென்றார்.
ஸ்மித் தலைமையில் தென்ஆபிரிக்க அணி பெற்ற 27-ஆவது டெஸ்ட் வெற்றி இதுவாகும். இதன் மூலம் தென்ஆபிரிக்க கப்டன்களில் அதிக வெற்றியை பெற்றுள்ள குரோஞ்ஞேயின் 27 வெற்றி சாதனையை அவர் சமன் செய்துள்ளார். வெற்றி குறித்து ஸ்மித் கூறுகையில்.
"இது ஒரு அற்புதமான டெஸ்ட். நாங்கள் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினோம். எங்களது பந்துவீச்சாளர்கள் கடினமாக உழைத்தார்கள்.நாங்கள் திட்டமிட்டு செயல்பட்டோம். டிவில்லியர்சுக்கும், கலிசுக்கும் இது ஒரு அற்புதமான டெஸ்ட். மொத்தத்தில் அணியின் அசுரத்தனமான கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி இதுவாகும். இன்னும் ஒரு போட்டி உள்ளது என்று எங்களது வீரர்களுக்கு தெரியும். எனவே தொடரில் அவர்கள் கவனம் செலுத்தி வருகிறார்கள். 2-0 என்று தொடரை வெல்ல விரும்புறோம்" என்றும் தெரிவித்தார்.