ஐந்து ஆண்டுகள் தடையை எதிர்த்து சொயிப் அக்தர் முறைப்படி மேன்முறையீடு செய்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் சர்ச்சைக்குரிய பந்துவீச்சாளர் அக்தர் . இந்த ஆண்டு ஜனவரியில் அறிவிக்கப்பட்ட வீரர்களுக்கான ஒப்பந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார். இதனால், ஆத்திரமடைந்த இவர் கிரிக்கெட் சபை நிர்வாகிகளைக் கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழு இவருக்கு 5 ஆண்டுகள் தடை விதித்தது. இந்தத் தடை பாகிஸ்தானில் மட்டும் பொருந்தும் என்பதால் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்) போட்டிகளில் அக்தர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்கவும் அனுமதி மறுக்கப்பட்டது.
இந்தச் சூழலில் தடையை எதிர்த்து அக்தர் சார்பில் வெள்ளிக்கிழமை மேன்முறையீடு செய்யப்பட்டது. இதன்மீது விசாரணை நடத்த குழு ஒன்று அமைக்கப்படும் .பொதுவாக இக்குழுவின் தலைவராக பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் நசிம் அஷ்ரப் தான் இருப்பார். ஆனால், ஐ.பி.எல் அமைப்பில் அனுமதியளிக்க நசிம் பணம் கேட்டதாக அக்தர் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக இவர் மீது நசிம் சார்பில் மான நஷ்ட வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
எனவே, மேன்முறையீட்டுக் குழுத் தலைவர் பொறுப்பிலிருந்து நசிம் விலகுகிறார். இது குறித்து அவர் கூறுகையில்;
"பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் விதிமுறைப்படி அக்தர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேன் முறையீட்டுக் குழுத் தலைவராக இருக்கும் உரிமை எனக்குள்ளது. ஆனாலும், வீண் பிரச்சினையைத் தவிர்க்கவே விலகுகிறேன். இதுபற்றி விசாரிக்க சுதந்திரமான குழு அமைக்கப்படும்" என்றார்.
இதேநேரம், மேன்முறையீடு செய்துவிட்டு வெளியே வந்த அக்தர் கூறுகையில்;
"நான் சட்டத்தை மதிப்பவன். முறைப்படி மேன்முறையீட்டை செய்துள்ளேன். இதன்மீது பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முடிவெடுக்கும் வரை அமைதியாக இருக்க வேண்டும்" என்றார்.
இதற்கிடையே அக்தருக்கு இன்னொரு சிக்கல் காத்திருக்கிறது. சமீபத்திய பேட்டியின் போது இந்தியா மற்றும் ஜொகனஸ்பேர்க்கில் விளையாடிய போது சூதாட்டக்காரர்கள் தன்னை தொடர்பு கொண்டதாகத் தெரிவித்திருந்தார். இது போன்ற தகவல்களை உடனடியாக கப்டன் , அணியின் முகாமையாளர் அல்லது ஐ.சி.சி.க்குத் தெரிவிக்க வேண்டும். ஆனால், அக்தர் மிகவும் தாமதமாக இத்தகவலை வெளியிட்டுள்ளார். இதையடுத்து ஐ.சி.சி.சார்பில் இவரிடம் விசாரணை நடத்தப்படுமெனத் தெரிகிறது.