தென்னாபிரிக்காவுகு எதிரான 3 ஆவது டெஸ்டிலும் டெண்டுல்கர் ஆடமாட்டார் என்று இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் வலது இடுப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். சென்னையில் நடந்த தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டின் போது டெண்டுல்கருக்கு இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆமதாபாத்தில் நடந்த 2 ஆவது டெஸ்டில் டெண்டுல்கர் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக முகமது கைவ் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், கான்பூரில் வருகிற 11 ஆம் திகதி தொடங்கும் 3 ஆவது மற்றும் கடைசி டெஸ்டிலும் டெண்டுல்கர் விளையாட மாட்டார் என்பது தெரிய வந்திருக்கிறது.
இது குறித்து இந்திய கிரிக்கெட் சபை செயலாளர் நிரஞ்சன்ஷா நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்திக் குறிப்பில், ்டெண்டுல்கர் காயத்திலிருந்து வேகமாக குணமடைந்து வருகிறார். இருப்பினும் கான்பூர் போட்டியில் பங்கேற்கும் அளவுக்கு போதுமான உடல் தகுதியை எட்டவில்லை. இதனால், கான்பூர் டெஸ்டில் டெண்டுல்கர் பங்கேற்கமாட்டார்.
டெண்டுல்கரின் உடல்நிலை சீராவதற்காக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்ீ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. டெண்டுல்கர் குணமடைய மேலும் 12 நாட்கள் ஆகும் என்று தெரிகிறது.
இஷாந்த் ஷர்மாவுக்கு சோதனை
இதற்கிடையே இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவுக்கு நேற்று உடல் தகுதி சோதனை நடக்கவிருந்தது. அவுஸ்திரேலிய தொடரில் அசத்திய இஷாந்த் ஷர்மா, கால் மற்றும் கை விரலில் ஏற்பட்ட காயத்தால் தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் 2 டெஸ்டிலும் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் கான்பூர் டெஸ்ட் போட்டியில் அவர் ஆடுவாரா என்பது பெங்களூர் தேசிய கிரிக்கெட் அக்கடமியில் நடக்கும் உடல் தகுதி பரிசோதனையின் முடிவில் தெரிந்து விடும். இதே போல் சுழற்பந்து வீச்சாளர் முரளிகார்த்திக்குக்கும் நேற்று உடல் தகுதி சோதனை நடக்குமென்று எதிர்பார்க்கப்பட்டது.