ஒரு காலத்தில் மட்டக்களப்பின் முடிசூடா மன்னனாக, விளங்கிய சொல்லின் செல்வர் கலாநிதி செல்லையா இராசதுரையின் பொதுவாழ்வில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட காலத்துச் சம்பவங்களின் தொகுப்பாக "சுவடுகள்" என்னும் நூல் இன்று புதன்கிழமை வெளிவருகின்றது. இந்நூலின் வெளியீட்டு வைபவம் கொழும்பு தமிழ்ச்சங்க சங்கரபிள்ளை மண்டபத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும்.
கலாநிதி இராசதுரை அவர்களை அறியாதவர்கள் இருக்க முடியாது. தமிழ் எழுத்தாளராக வாழ்க்கையை ஆரம்பித்து நாராளுமன்றம் சென்ற நல்ல தமிழ்ப் பேச்சாளர். அவர் வாழ்க்கை மணம்மிகு மலர்கள் தூவிய இராஜபாதை அல்ல. கல்லும் முள்ளும் பள்ளமும் படுகுழியும் நிரம்பிய வாழ்க்கை வேதனைகளும் சோதனைகளும் சாதனைகளும் அவர் வாழ்க்கையில் நிரம்பவும் உண்டு. சிறுமைகண்டு பொங்கி எழுவதும் அநீதியை எதிர்க்கும் மனமும் கொண்டவர். தமிழ் மொழியை உயிரினும் மேலாக நேசிக்கும் ஒரு தமிழ் ஆவலர். அவர் நடந்துவந்த பாதையின் ஒரு சில சம்பவங்களின் தொகுப்பே `சுவடுகள்' என்னும் இந்த நூல். இன்னும் பல பதிவுசெய்யப்படவேண்டிய சம்பவங்கள் காலப்போக்கில் "சுவடுகள்" இரண்டாவது பாகமாக வெளிவரும் என்று அவர் அறிவித்துள்ளார். பல இளைஞர்களுக்கு அவர் வழிகாட்டியாவார். நல்ல எழுத்தாளர்கள் சிறந்த கவிஞர்கள் அரசியல்வாதிகள் ஆவதற்கு களம் அமைத்துக்கொடுத்தவர் இந்த சரித்திர "சுவடு"களை தமிழ் நெஞ்சங்கள் வரவேற்கும் வாழ்த்தும் என்று எதிர்பார்க்கின்றோம். கடந்தகால நினைவுகளை இன்று இரைமீட்டிப் பார்ப்பது அவருக்கு ஒரு சுகானுபவம் அல்லவா?
இன்றைய நூல்வெளியீட்டு வைபவத்துக்கு மொறிஸியஸ் நாட்டின் தூதுவர் தெ.ஈஸ்வரன் தலைமை வகிப்பார். கொழும்புத் தமிழ்ச்சங்க பொதுச் செயலாளர் ஆர்.இரகுபதி பாலஷ்ரீதரன் தொடக்கவுரை நிகழ்த்துவார். செல்லையா இராசதுரை அவர்களின் சேவை நலன்பற்றியும் அவர் தமிழ் மொழியின்பால் கொண்டுள்ள ஆர்வத்தினையும் பற்றி முஸ்லிம் சமயவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.எச்.எம்.ஜமில், கம்பவாரிதி ஜெயராஜ், கலாசூரி ஆ.சிவனேசச்செல்வன், சர்வதேச முஸ்லிம் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் எம்.அஷ்ரப் ஹுசைன் ஆகியோர் உரை நிகழ்த்தவுள்ளனர். தமிழ்ச்சங்க துணை நிதிச் செயலாளர் சி.பாஸ்கரா நன்றியுரை நிகழ்த்துவார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச்சேவையில் காலை 7 மணிமுதல் 8 மணிவரை நடைபெறும் ஒரு மணிநேர நடப்புவிவகார நிகழ்ச்சியில் மேற்படி நூல் வெளியீடு பற்றிய இராசதுரையின் நேர்காணல் இடம்பெறும்.
-நூல்வெளியீட்டு ஒழுங்கமைப்புக் குழு