Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 09, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
விதவைகள் வாழ்வு மலரட்டுமே
[09 - April - 2008] [Font Size - A - A - A]
-சொ.அமிர்தலிங்கம்-

(நேற்றைய தொடர்ச்சி)

எமது வடக்கு, கிழக்கு மாகாணத்தில் பல்வேறு வழிகளில் விதவையானோர் ஏறக்குறைய ஐம்பத்தேழாயிரம் பேர் இருக்கின்றனர். இயற்கையின் வாயிலாக இறப்பின் மூலம் கணவனைப பிரிந்தோர் அகால மரணமாகக் கணவனைப் பிரிந்தோர், ஆழிப் பேரலையின் தாக்கத்தால் கணவனைப் பிரிந்தோர், போர் காரணமாகக் கணவனைப் பிரிந்தோர் எனப் பலர் உள்ளனர். இதனால், விதவையானோர் அனைவரும் குடும்பச் சுமையைச் சுமந்து வாழ்கின்றனர். இதேபோன்று பல்வேறு நாடுகளிலும் பல ஆயிரம் பேர் விதவைகளாகி உள்ளனர். போர் நடைபெற்ற பாலஸ்தீன், ஈராக், ஆப்கானிஸ்தான், ருவாண்டா, செச்னியா, வியட்நாம் போன்ற நாடுகளில் பல்லாயிரம் பேர்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தமது பொருளாதாரச் சுமையை தாமே சுமக்க வேண்டிய நிலையில் வாழ்ந்து வருகின்றனர். எனினும், எமது வடக்கு, கிழக்கு மாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட கணவன்மாரை இழந்த விதவைகள் வாழ்வை நாம் ஜீரணிக்க முடியாமல் அவதியுறுகிறோம்.

இப்படியாக போர்ச் சூழலாலும் ஏனையவற்றாலும் பாதிப்படைந்த விதவைகளுக்குத் தேவைப்படுவது உள ஆற்றுப் படுத்தலாகும். அவர்கள் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதால் தமது சுகதுக்கங்களை ஏனையோரிடம் பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பத்தை நாம் அதிகரிக்க வேண்டும். இதனால், அவர்கள் மனச்சுமைகளை இறக்கி வைத்து விடிவுகாண வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே, அயலவர்கள் விஷேடமாகப் பெண்கள் இவர்களை ஒதுக்கி வைக்கக் கூடாது. எங்களது கலாசாரமானது கூட்டுக் குடும்ப வாழ்க்கையாதலால் ஒருவருக்கொருவர் கலந்துரையாடி மன ஆறுதலடைய வாய்ப்புகள் அதிகமுண்டு. "சொல்லியழுதால் பழிதீரும்" என்பார்கள். எனவே, சொல்லியழ சந்தர்ப்பங்கள் வழங்கப்பட வேண்டும். இது பொதுவான ஒரு நம்பிக்கையாகும். எனவே, இந்த சொல்லியழ சந்தர்ப்பங்கள் வழங்கப்பட வேண்டும். இது பொதுவான ஒரு நம்பிக்கையாகும். எனவே, துக்கங்கள், துயர்கள், துன்பங்கள் என்பவற்றை ஆற்றிக் கொள்ள இந்த உள ஆற்றுப்படுதல் வழிவகுக்கிறது. போரினால் பாதிக்கப்பட்டு கணவன்மாரை இழந்த விதவைகள் அனுபவிக்கும் சோதனைகள் பற்பல. எனவே, இவர்களுக்கு விஷேடமாக ஆறுதல் கூறிப் பரிகாரங்காண அனைவரும் முற்பட வேண்டும். நல்ல வாழ்க்கையை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். எதிர்காலத்தில் விரக்தி, சோகம், வெறுப்பு, தளர்வு என்பன ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். உறுதியான நம்பிககையை வளர்க்க வேண்டும். விதவைப் பெண்களின் வாழ்வினை வளப்படுத்த உதவ வேண்டும். சிறு துளி பெரு வெள்ளம் ஆவது போல நாம் செய்யும் சிறிய சிறிய உதவிகள் அவர்களுக்கு பெரும் பயனைக் கொடுப்பதாக இருக்க வேண்டும் எனவே, புண்பட்ட மனதுக்கு ஆறுதல் அளிப்பது இந்த உள ஆற்றுப்படுத்தலாகும்.

மேலும், இன்று விதவைப் பெண்களின் பொருளாதார வளத்தை மேம்படுத்த வேண்டும். அவர்களது குடும்பச் சுமையையும் எதிர் காலத்தையும் சரிவர நிர்வகிக்க உதவ வேண்டும். விதவைப் பெண்கள் தங்கள் மெய்நிலை (AWARENESS) உணர்ந்து செயலாற்ற சுய தொழில் வளர்ச்சித் திட்டத்தில் ஈடுபடுத்த வேண்டும். இப்படியாக மெய்நிலை உணர்வறியச் செய்யும் பயற்சிகள் வழங்க வேண்டும். இதனால் அவர்கள் தமது சமூகமாற்றத்திற்காகவும் உயர்ச்சிக்காகவும் செயற்படுவர். விதவைகள் இன்று உள்ளூர் நிறுவனங்கள் மூலம் சுயதொழில் செயற்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இதற்காக சிறு கடன் வழங்கும் திட்டங்கள் உதவி செய்கின்றன. விதவைப் பெண்கள் வருமானம் காட்டக் கூடிய தம்மாலான சுயதொழில்களைச் செய்ய தமது மனப்பாங்கை மாற்றிக் கொள்ள வேண்டும். இன்றைய குடும்பச் சுமைக்கும் அதன் பலனாக ஏற்படும் வறுமை, பொருளாதார வளர்ச்சியின்மை என்பன தீர்க்கப்பட வேண்டியனவாகும். எனவே, அவர்களுக்கு தன்னம்பிக்கையினையும் ஆக்கபூர்வமான மனோபாவத்தையும் வளர்க்க நாம் உதவ வேண்டும். செய்கின்ற சுய தொழில்கள் போதிய வருமானத்தைத் தருவதாக இருக்க வேண்டும். பணத்தேவை காரணமாக விதவைகள் தொழில் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்காளாவர். போர் நடைபெற்ற வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தன்னார்வ நிறுவனங்கள் பல சிறு கடன் திட்டங்களை விதனைகளின் சுயதொழில் முயற்சிக்காகச் செலவிடுகின்றன. வடக்கு, கிழக்கு மாகாணத்தின் எட்டு மாவட்டங்களிலும் நெல் விளைவிக்கப்படுகின்றன. எனவே, அரிசியுடன் சம்பந்தப்பட்ட தொழில்கள் செய்ய இங்கு வாய்ப்பு அதிகம். மா தயாரித்தல், பலகாரங்கள் செய்தல் போன்றனவற்றை ஊக்குவிக்கலாம். மேலும், ஆடு, கோழி வளர்ப்பு, பாய் இழைத்தல், காய்கறித் தோட்டம் என்பனவற்றையும் ஏற்படுத்தி உழைக்கலாம். செய்யும் தொழில் இவர்களது குடும்பச் சுமையை நீக்க உதவ வேண்டும். எனவே, விதவைகள் தொழிலில் ஈடுபாடு காட்டி தமது குடும்பச்சுமையைப் போக்க முனைய வேண்டும். சுய தொழில் மூலம் ஆக்கபூர்வமான பயனைப் பெற்று பொருளாதாரத்தில் முன்னேற வழியுண்டு. இது அவர்களை உள ரீதியான தாக்கத்திலிருந்தும் விடுவிக்கும். விதவைகள் தொழிலில் ஈடுபாடு காட்டி நல்ல வருமானத்தைப் பெற்று சமூகத்தின் ஏணிப்படிகளில் ஏறி முன்னேற வேண்டும்.

எனவே, கணவன் இறப்பது ஒரு நியதி. இயற்கையால் கொடுக்கப்பட்ட தீர்வு அல்லது விபத்து இதற்கு விதவைப் பெண் எவ்விதத்திலும் காரணமாக மாட்டாள். அப்படி இருக்கும் போது ஏன் அவளை விதவை என்ற ரீதியில் ஒதுக்க வேண்டும். அவளை விதவை என்ற பட்டம் சூட்டுவதால் யாம் கண்ட பயன் என்ன? எனவே, விதவை, அறுதலி, தாலியறுத்தவள் என்ற சொற்களை எமது அகராதியிலிருந்து நீக்கி அவர்களை கைம்பெண்ணாகக் கருதி அவர்களுக்கு இரக்கம் காட்டி வாழ விடுவோம். அவர்களது இருள் மயமான வாழ்வு மலர எமது மனப்பாங்கை மாற்றி அவர்களுக்காக எம்மை அர்ப்பணிப்போமாக! கைம்பெண்கள் வாழ்வு மலரட்டும்! எம்மால் முடியாதது ஒன்றுமில்லை. கைம்பெண்கள் வாழ்வு மலரட்டுமே! வளமும் பெருகட்டுமே!

கட்டுரையாளர், ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாணம், திருகோணமலை.

Email this page Your Opinion Print this page
வரையறையற்ற தளம்பல் நிலையில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு
அம்பலமாகும் அந்தரங்க உறவுகள்!
விதவைகள் வாழ்வு மலரட்டுமே
மூளாய் பிள்ளையார் கோவில் வருடாந்த திருவிழா ஆரம்பம்
சொல்லின் செல்வரின் `சுவடுகள்' இன்று வெளியீடு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com