சட்டம் படிப்போருக்கு வகுப்பறையில் பாலபாடமாக் கற்றுக் கொடுக்கப்படுவது "குற்றவாளி தன்னை அறியாமலேயே ஏதேனும் ஒரு தடயத்தை விட்டுச் செல்வான்' என கூறுவதுண்டு. இது குற்றவாளிக்கு பொருந்துகிறதோ இல்லையோ, சமீப காலமாக சில காவல்துறை அதிகாரிகளுக்கு பொருந்தி வருவதைக் காண முடிகிறது.
அண்மைக் காலங்களில் தென் மாவட்டங்களில் நாளிதழ்களில் அவ்வப்போது ஒரு வித்தியாசமான விளம்பரங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.
அதாவது, சில காவல்துறை சார்பு-ஆய்வாளர்கள் பதவி உயர்வு பெற்று ஆய்வாளர்களாகவோ,ஆய்வாளர்கள் சிலர் பதவி உயர்வு பெற்று துணைக் கண்காணிப்பாளர்களாகவோ பொறுப்பேற்கும் நிலையில் அவர்களை வாழ்த்தி நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன.
இப்போது, தமிழ்நாடு காவல்துறைப் பணியில் இருந்த ஒரு காவல் கண்காணிப்பாளருக்கு `ஐ.பி.எஸ்' அந்தஸ்து கிடைத்துள்ளதற்கு உள்ளூர் நாளிதழில் பெரிய பெரிய விளம்பரங்கள் பளிச்சிடுகின்றன.
இந்த விளம்பரங்களைப் பார்ப்போருக்கு தோன்றும் எண்ணம் `இதற்கு ஏன் இந்த விளம்பரம்' என்பதுதான்.
தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு ஒரு `கௌரவம்' கிடைக்கும்போது அவர்களைப் பாராட்டுவதும் அதைக் கொண்டாடுவதும் மகிழ்ச்சியை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதும் இயல்பான ஒன்றுதான். அதில் தவறில்லை.
ஆனால், அது எல்லா நிலைகளிலும் குறிப்பாக காவல்துறை போன்ற சட்டத்தை அமுல்படுத்தும் நிலையில் உள்ளவர்களை விருப்பு, வெறுப்பின்றி நடுநிலையோடு செயல்பட வேண்டியவர்களை ஒரு சிலர் இப்படி பகிரங்கமாகப் பாராட்டி குளிர்விப்பதும் அதிகாரிக்கும், அவர்களுக்கும் இருக்கும் நெருக்கத்தை ஊரறிய பறைசாற்றுவதும் சரியா? இதற்கு இவர்கள் பணத்தைச் செலவழிப்பது எதற்காக? நோக்கம் என்ன?
`தமிழகக் காவல்துறையின் ஈரல் அழுகிவிட்டது' என பகிரங்கமாக கூறியவர் தற்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி. அதற்கு அவர் அறிந்திருந்த காரணங்ள் எதுவாக இருந்தாலும், எல்லோரும் அறிந்த ஒன்று சில காவல்துறையினரின் `நேர்மையற்ற போக்கு'.
அதாவது, சட்டத்தை அமுல்படுத்துவதில் வேண்டியவர்களிடம் ஒரு அணுகுமுறை, வேண்டாதவர்களிடம் ஒரு அணுகுமுறை என விருப்பு-வெறுப்புடன் செயல்படுவதுதான்.
காவல்துறையில் உள்ள சிலர் இந்த நேர்மையற்ற போக்கை, எல்லா நேரங்களிலும் நேரடியாகவே மேற்கொள்வதில்லை. அதற்கெல்லாம் சில ஆட்கள் இருப்பார்கள். அவர்கள்தான் அவர்களுக்கு (காவல்துறையினருக்கு) எல்லாமுமாக இருப்பார்கள். அந்த `சில ஆட்கள்' யார் என்பது நெருங்கிய உள்வட்டத்துக்குத்தான் தெரியும்.
காவல்துறையில் காரியம் சாதிக்க வேண்டுமென்றால், அந்த `சில ஆட்களை' பிடித்தால் போதும், எல்லாம் ஆகும். அவர்களைத் தெரியாத அப்பாவிகள்தான் பாடாய்ப்படுவார்கள்.
தெரிந்தவர்களுக்கு `எல்லாம் சுபம்' அவர்களுக்கும் இவர்களுக்கும் பங்கு பரிவர்த்தனையுடன் காரியங்கள் நடந்தேறும். இந்த அசிங்கங்கள் எல்லாம் திரை மறைவாக இருந்த காலம் மாறி இப்போது எல்லாம் பகிரங்கமாகி வருவதுதான் வேதனை தருகிறது.
தங்களுக்கு நாளிதழ்களில் பாராட்டு மழை பொழிபவர்கள் பற்றி அதிகாரிகளுக்கு தெரியாமல்கூட இருக்கலாம். அதிகாரிகளும் `எதுவும் தங்களுக்குத் தெரியாது' என்றும் கூறலாம். ஆனால், `பாராட்டிய' பின்பும் தெரியாமலா போகும்? உறவு நெருங்காமல் போகவா செய்யும்?
காவல் நிலையங்களுக்கு தொழில்ரீதியாக வரும் நிருபர்களைக் கூட "வந்த வேலை முடிந்த உடன் நடையைக் கட்டுங்கள். இல்லையெனில், இங்கே காரியம் சாதிக்க உங்களையும் அணுகுவார்கள்"என கடிந்து கொண்ட அதிகாரிகளும் இருந்தார்கள். இருக்கிறார்கள். அவர்கள் என்றும் `நிமிர்ந்த நன்னடையாய், நேர்கொண்ட பார்வையைாய் நிலத்தில் யார்க்கும் அஞ்சாதவர்களாய்'காவல்துறைக்குப் பெருமை சேர்க்கிறார்கள்.
அதேவேளையில், பாராட்டு மழைக்கு ஒரு சிலர் தகுதியானவர்களாக இருக்கலாம். ஆனால்,அது விதிவிலக்கு. எல்லோரையும் அப்படியே எண்ணிவிட முடிவதில்லை.
இந்த அதிகாரிகள் தங்களை `நேர்மையானவர்களாய்' காட்டிக் கொண்டாலும் உண்மை தெரிந்தவர்களிடம் அவர்கள் கூனிக் குறுகுவதைக் காணச் சகிக்காது.
`தன்னைச் சுற்றி இருப்பவர்கள் மத்தியில் `இவர் நல்லவர்' என்று `இமேஜை' திட்டமிட்டு ஏற்படுத்திக் கொண்டவர்கள் நாளடைவில் பெரிய அளவில் தவறுகளைச் செய்யத் துணிவர்' என்பது உளவியல் அறிஞர்களின் கருத்து.
சில அதிகாரிகளைப் பாராட்டியும் `ஜால்ரா'தட்டியும் நெருக்கத்தை காட்டிக் கொள்வோர், ஒன்று அந்த அதிகாரியால் ஏதேனும் லாபம் பெற்றவராக இருக்க வேண்டும். அல்லது லாபத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பவராக இருக்க வேண்டும். அல்லாமல் வேறு எதற்காக இந்த `புகழ் மாலை' என்பதுதான் சாமானியர்களின் மனதில் ஓடும் எண்ண ஓட்டம். அதேவேளையில் நேர்மையில் உறுதிகொண்ட அதிகாரிகள் இத்தகைய விளம்பரங்களை ஊக்கப்படுத்த மாட்டார்கள் என்பதும் திண்ணம்.
தினமணி