Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 09, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
வரையறையற்ற தளம்பல் நிலையில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு
[09 - April - 2008] [Font Size - A - A - A]
-கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து-

ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக் காலப்பகுதியில் எதிர் எதிர் அரசியல் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இடம்பெற்றுவந்தபோதும், இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் இரு பிரதான கட்சிகளுக்கும் (பொ.ஐ.மு. மற்றும் ஐ.தே.க.) இடையில் தெளிவான ஒரு பொது இணக்கப்பாடு ஏற்பட்டிருந்தது. இன முரண்பாட்டுக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான யோசனைகள் 1995, 1997 ஆம் ஆண்டுகளில் முன்வைக்கப்பட்டு ஆகஸ்ட் 2000 அரசியலமைப்புப் பிரேரணைக்கான முன்வரைபுகள் வெளியானது வரையில் முக்கியமான மைல் கற்களாக அமைந்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியும் 1999, 2000, 2001 மற்றும் 2004 ஆம் ஆண்டு தேர்தல் காலப் பகுதிகளிலும் விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற சமயத்திலும் இனப்பிரச்சினைத் தீர்வை முக்கியமாக முன்வைத்திருந்தது. தெளிவாக இனங்காணப்பட்ட இந்த இணக்கப்பாட்டின் முக்கிய பகுதிகளாவன:

அ) இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு சாத்தியமில்லை.

ஆ) விடுதலைப் புலிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகள்.

இ) ஒற்றையாட்சிக்கு அப்பாற்பட்ட அதிகாரப்பரவலாக்கலூடான அரசியல் தீர்வு.

ஈ) இணைந்த வடக்கு, கிழக்கு அடிப்படையில் பேச்சுவார்த்தை.

2002 ஆம் ஆண்டு டிசம்பரில் ஒஸ்லோவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் வரலாற்று ரீதியாக தமிழ் பேசும் மக்கள் பாரம்பரியமாக வாழும் வடக்கு, கிழக்கு உள்ளக பகுதிகளுக்குப் சுயநிர்ணய உரிமையை வழங்குவதை அடிப்படையாகக் கொண்ட தீர்வு குறித்துப் பரிசீலிக்கவும் சமஷ்டிக் கட்டமைப்பை ஏற்றுக்கொள்ளவும் இரண்டு தரப்பும் இணங்கியிருந்தமை இந்த இணக்கப்பாட்டின் அண்மைய முக்கிய அடைவு எனலாம்.

மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் பொதுவாக இணங்கப்பட்ட இந்த விடயங்களில் முட்டுக்கட்டைகள் ஏற்பட்டு அவை பின்வருமாறு மாற்றம் பெற்றன.

அ) பயங்கரவாதத்துக்கு எதிரான மோதல்.

ஆ) மோதலில் இராணுவ வெற்றி.

இ) ஒற்றையாட்சி அரசைப் பாதுகாத்தல்.

ஜனாதிபதி வேட்பாளராக மகிந்த ராஜபக்ஷ ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளுடன் செய்துகொண்ட தேர்தல் உடன்படிக்கைகளில் முக்கிய கூறாக ஒற்றையாட்சி அம்சத்தைப் பாதுகாத்தல் என்பது உள்ளடக்கப்பட்டபோது முரண்பாட்டுத் தீர்வு தொடர்பான அணுகுமுறையில் குறிப்பிடத்தகுந்த தரமாற்றம் ஏற்பட்டது. எவ்வாறாயினும் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வின் முக்கியத்துவம் தொடர்பாக உள்நாட்டவர்களாலும் வெளிநாட்டவர்களாலும் வழங்கப்பட்ட அழுத்தங்களைத் தொடர்ந்து சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவையும் அதன் பிரேரணைகளை பரிசீலனை செய்வதற்கு நிபுணர்கள் குழுவொன்றையும் ஜனாதிபதி ஏற்படுத்தியிருந்தார். இதன் வெளிப்பாடாக, இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் `தென்பகுதி இணக்கப்பாடு' அவசியமெனவும் அதனை உள்ளடக்கியே இனப்பிரச்சினைத் தீர்வு முன்வைக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். முன்னைய ஆட்சியாளர்களைப் போலன்றி, இவரது அரசாங்கம், தனது சொந்த யோசனைகளின் அடிப்படையில் பேச்சுக்களுக்குச் செல்லாமல், கலந்துரையாடல்களினூடாக அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு நடைமுறையைக் கடைப்பிடித்தது. அவருடைய அரசாங்கம், தமது சொந்தத் தீர்வை முன்வைப்பதில் பின்நின்றுகொண்டு சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் இடம்பெறும் அனைத்துக் கட்சிகளினதும் நோக்கங்களை உள்ளடக்கிய இணக்கப்பாடொன்றுக்கு வரும் பொறுப்பை சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவிடம் ஒப்படைத்தது.

இதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது பதினைந்து மாதங்கள் கடந்துள்ள நிலையில், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு தளம்பல் நிலையில் உள்ளது. பெரும்பான்மையினரின் அறிக்கை என்று பொதுவாக குறிப்பிடப்படுகின்ற அறிக்கையொன்றை நிபுணர்கள் குழு முன்வைத்தது. இதற்கு எதிராக சிறுபான்மை அறிக்கை என்ற பெயரில் இரண்டு வெவ்வேறு குழுக்களின் அறிக்கைகள் முன்வைக்கப்பட்டன. பேராசிரியர் திஸ்ஸ விதாரணவும் ஒரு ஆவணத்தைத் தயாரித்திருக்கிறார். பெரும்பான்மை அறிக்கையும் விதாரணவின் ஆவணமும் ராஜபக்ஷவுக்கு முந்தைய ஜனாதிபதி இணக்கப்பாட்டை பிரதிபலிக்கின்றன. இவை சமஷ்டிச் சட்டகத்துக்குள் ஒரு அதிகாரப்பரவலாக்கல் பொறிமுறைக்குள் நிற்கின்றன. அவற்றின் இணைந்த பார்வையில், நிபுணர்கள் குழுவின் பெரும்பான்மை அறிக்கை வேறுபட்ட இன மற்றும் அரசியல் பின்புலங்களிலிருந்து வந்திருந்ததுடன், அர்த்தபுஷ்டியான அதிகாரப்பரவலாக்கலுக்கு ஆதரவாக இருந்தது.

அரசியல் கட்சிகளும் தமது பிரேரணைகளை முன்வைத்திருந்தன. ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்த பிரேரணை ஜனாதிபதியின் மரபுக் கோட்பாட்டையும் மாவட்ட ரீதியில் அதிகாரங்களைப் பகிரும் திட்டங்களையும் பிரதிபலித்தது. ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளின் எதிர்பார்ப்புகளுக்கு அமைவாக ஒற்றையாட்சி அரசைத் தக்கவைக்கும் முறையொன்றை அது குறிப்பிடுகிறது. குறிப்பாக அரசின் கட்டமைப்பு தொடர்பாகவும் பரவலாக்கப்படும் பிரிவு தொடர்பாகவும் எழுந்துள்ள கையாள்வதற்குக் கடினமாகவிருக்கும் எதிரெதிரான, மாறுபட்ட கருத்துக்களிடையே ஒரு இணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மேலும் கலந்துரையாடல்களை நடத்துமாறு சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் திஸ்ஸ விதாரண அறிவுறுத்தப்பட்டிருந்தார். இந்த நடவடிக்கை முடிவற்று இழுபட்டுக்கொண்டு சென்ற நிலையில், உடனடியான பொது இணக்கப்பாடொன்றுக்கு வரவேண்டுமென்ற சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக விரைவில் ஒரு இணக்கப்பாடு எட்டப்பட்டுவிடும் என்ற நிலையை அரசாங்கம் பேணிவந்தது.

மிக அண்மையில், வரவு- செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு எதிர்க்கட்சி திடம்கொண்டு நின்றபோது, அதிலிருந்து தன்னைக் காத்துக்கொள்வதற்கு ஜே.வி.பி.யின் ஆதரவு அரசாங்கத்திற்கு மிகவும் முக்கியமாக இருந்ததால், சர்வகட்சிக் குழு ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு அவசரப்படத் தேவையில்லை என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. பொது இணக்கப்பாடானது ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்தியது போல ஒற்றையாட்சி முறையை வலியுறுத்துவதாக அமையாவிட்டால் அரசாங்கம் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டியிருக்கும் என்பதே இதற்குப் பிரதான காரணமாகும். பாராளுமன்ற ஆசனக் கணக்குகளைப் பேணுதல் மற்றும் தேர்தல் தேவைகளுக்கு ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமயவை நம்பியிருக்கும் நிலையில் இதை விட வேறு மார்க்கம் கிடையாது.

அரசியல் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் ஒற்றையாட்சி அரசுக் கொள்கையைத் திருப்திப்படுத்தும் தேவை இந்தப் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் முழுவதும் காணப்படும். ஆக, இங்குள்ள உண்மையான கேள்வி என்னவென்றால், இந்த அரசாங்கம் உண்மையாகவே ஒரு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறதா அல்லது சர்வதேச சமூகத்தை சாந்தப்படுத்துவதற்காக அவ்வாறு பாசாங்கு செய்கிறதா என்பதுதான்.

பின்னையதுதான் உண்மையான நிலை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்த பிரேரணை, ஒற்றையாட்சி அரசை தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்ற ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகியவற்றின் கோரிக்கையைத் திருப்திப்படுத்தும் வகையில் வளைந்து கொடுக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத் தெளிவாகக் காட்டும் வகையில் அமைந்திருந்தது. இதன் விளைவாக இந்த அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாடு என்பது ஒற்றையாட்சியை வலியுறுத்துகின்ற பெரும்பான்மை வாதம்தான் என்பதும் ஜே.வி.பி. அல்லது ஜாதிக ஹெல உறுமயவை இதற்கு ஒரு சாட்டாகக் காட்டுவது பொய்யானது என்பதும் தெளிவாகிறது. 13 ஆவது திருத்தச் சட்டத்தையும் மாகாண சபை முறையையும் முன்னிறுத்தும் `ஒற்றையாட்சி அரசுக்குள் அதிகபட்ச அதிகாரப்பரவலாக்கம்' என்ற வாதத்துக்கு நாம் மீண்டும் வந்திருக்கிறோம். அது இந்தச் சமன்பாட்டுக்குள் அடங்கியபடியாலேயே தற்போதைய அரசியல் யாப்பின் எல்லைக்குள் அடக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்துக்கு எதிரான இராணுவ வெற்றிக்கு அழுத்தம் கொடுக்கும் போக்கின் தொடர்ச்சியாக இராணுவ வெற்றியின் மூலம் பெறப்பட்ட வலுச்சமநிலையை அடிப்படையாகக் கொண்டே இறுதி விளைவு அமையும். இதனால் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு புதிய அரசியலமைப்புத் தீர்வொன்றுக்கும் சமூக உடன்பாட்டுக்கும் வருவதற்கு தடையாக இருந்து வரலாற்றில் இழக்கப்பட்ட மற்றுமொரு சந்தர்ப்பமாக இது அமைந்துவிடப்போகிறது.

இந்த ஆய்வு சம்பவங்களால் தொடர்விளைவாக எழுந்த ஒன்றா என்றால், ஒரு அர்த்தபுஷ்டியான வழியில் முரண்பாட்டுக்கான தீர்வு எட்டப்படுமா என்ற கேள்வி எழுகிறது. விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடிப்பதன் மூலம் இந்த முரண்பாடு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுவிடும் என்று வாதிடுவோரும் இருக்கவே செய்கிறார்கள். இந்தக் கட்டுரையை எழுதியவர் உட்பட ஏனையோர் விடுதலைப் புலிகள் என்பது இன முரண்பாட்டின் ஒரு நோய்க்குறியே என்றும் இதற்கான வேர்கள் அரசியல் ரீதியானவை என்றும் அழுத்திக் கூறுகிறோம். ஆட்சியதிகாரப் பகிர்வு மற்றும் வளங்களைப் பெற்றுக்கொள்ளல் தொடர்பான குறைகள் எதிர்பார்ப்புகளாகவே அவை உள்ளன. ஒற்றையாட்சி, அரசின் கீழான அதிகபட்ச அதிகாரப்பகிர்வோ அன்றி மாவட்ட அடிப்படையில் மத்தியில் அதிகாரங்களைப் பகிர்வதோ தசாப்த காலங்களாக இந்த ஒற்றையாட்சி முறைமை இருந்துவந்த பின்னணியில் இவற்றுக்குப் பரிகாரமாக அமையாது.

அதிகபட்ச அதிகாரப்பகிர்வு என்கின்ற இந்த வார்த்தைப் பிரயோகம் மீதான அழுத்தம் ஒற்றையாட்சி அரசமைப்புக்குள்ளேயே பிரிக்க முடியாதபடி இருக்கிறது. ஒருங்கியை பட்டியல் தொடர்ச்சியாகத் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டு தற்போதிருக்கும் அதிகார மட்டங்கள் தொடர்ந்தும் பேணப்படவே செய்யும். ஒதுக்கப்படுவதான உணர்வால் உந்தப்பட்டு முரண்பாட்டுச் சுழற்சி மீண்டும் உயிர்ப்பிக்கப்படும்.

போரை முன்னெடுத்தல் என்ற நிலைப்பாட்டுக்குள் சிக்குண்டுள்ள ராஜபக்ஷ அரசாங்கம் வெற்றிபெற்றவரின் சமாதானத்தை நிலைநிறுத்த முயல்கிறது. இந்த முரண்பாட்டில் எப்போதுமே சமாதானம் சாத்தியமில்லை.

நன்றி: சமாதான நோக்கு

Email this page Your Opinion Print this page
வரையறையற்ற தளம்பல் நிலையில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு
அம்பலமாகும் அந்தரங்க உறவுகள்!
விதவைகள் வாழ்வு மலரட்டுமே
மூளாய் பிள்ளையார் கோவில் வருடாந்த திருவிழா ஆரம்பம்
சொல்லின் செல்வரின் `சுவடுகள்' இன்று வெளியீடு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com