Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 09, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Editorial
சர்வதேச சமூகத்தின் உடனடி தலையீடு அவசியம்
[09 - April - 2008] [Font Size - A - A - A]
நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தித் துறை அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் படுகொலைச் சம்பவத்துக்கு கண்டனச் செய்திகளை விடுத்துள்ள அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா உட்பட சர்வதேச சமூகம், மீண்டும் ஒரு முறை யதார்த்தபூர்வமான உண்மையை அழுத்தி உரைத்திருக்கிறது. அதாவது இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியில் தீர்வொன்றை எட்ட முடியாதெனவும் பேச்சுவார்த்தையூடான அரசியல் தீர்வை காண்பதே முன்னால் உள்ள ஒரேயொரு பாதையெனவும் உலக நாடுகள் திரும்பவும் வலியுறுத்தி வருகின்றன. வன்செயல்களை நிறுத்தி பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதே பொது மக்களின் துன்பத்தை நிறுத்துவதற்குரிய வழியெனவும் அவை சுட்டிக் காட்டுகின்றன.

இலங்கையின் மோதலுக்கு இராணுவ ரீதியில் தீர்வொன்றை எட்ட முடியாது என்பதிலேயே ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் இலங்கைத் தீவில் இறுதியான சமாதானத்தை நிலைநாட்ட பேச்சுவார்த்தை மூலமான இணக்கப்பாடு மட்டுமே ஒரேயொரு மார்க்கமாக இருப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார மற்றும் அயலுறவுக் கொள்கைகளுக்கு பொறுப்பான ஆணையாளர் பெனிற்றா பெரேரா வால்ட்னர் உறுதிபடக் கூறியுள்ளார். அமெரிக்கா,கனடா உட்பட ஏனைய உலக நாடுகளும் இதனையே திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றன. அண்டை நாடான இந்தியாவும் சகல சமூகங்களுக்கும் ஏற்புடைய தீர்வை துரிதமாக காணுமாறு கூறி வருகின்றது.

மூன்று தசாப்தகாலமாக நீடித்துச் செல்லும் மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்து தமிழ் மக்கள் இலங்கைத் தீவில் வாழும் ஏனைய சமூகங்களுக்கு விசேடமாக பெரும்பான்மைச் சமூகமான சிங்கள மக்கள் அனுபவித்து வரும் உரிமைகள் தங்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென்றே வலியுறுத்தி வருகிறார்களே தவிர மேலதிகமாகவோ முன்னுரிமை கொடுத்து தாங்கள் நடத்தப்பட வேண்டுமெனக் கேட்கவில்லை. பல வருட காலமாக உயிரிழப்புகளும் உடைமை அழிவுகளும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இதனைத் தடுத்து நிறுத்தி சமாதானத் தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டுமென சர்வதேச சமூகமும் தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற போதும் எந்தவொரு சாதகமான பெறுபேறுகளும் இதுவரை கிடைக்கவில்லை.

2002 பெப்ரவரி 22 இல் நோர்வே அனுசரணையுடனான போர் நிறுத்த உடன்படிக்கைக்கு சர்வதேச சமூகம் வலுவான ஆதரவை வழங்கி ஊக்குவித்த போதும் அந்த உடன்படிக்கை தற்போது வரலாற்றுக் குறிப்பேடாகி விட்டது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற சர்வதேச சமூகங்கள் பேச்சுவார்த்தை ஆரம்பிக்குமாறு வலியுறுத்துகின்றனவே தவிர அதனை வெற்றிகரமான முடிவொன்றை எட்டுவதற்கான யதார்த்தபூர்வான அணுகுமுறைகளை கடைப்பிடிப்பதாக தென்படவில்லை. தத்தமது அரசியல், பொருளாதார, பூகோள நலன்களுக்கு முன்னுரிமை கொடுத்தே சகலவற்றையும் அணுகுவதாலேயே இலங்கையின் இன நெருக்கடி உட்பட எந்தவொரு பாரதூரமான பிரச்சினைக்கும் இறுதியான தீர்வை காண முடியாத நிலைமை ஏற்படுகின்றது.

பேச்சுவார்த்தையூடான இணக்கப்பாடு மட்டுமே சாத்தியமென ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உறுதியாக நம்புவதாக ஆணையாளர் பெனிற்றா கூறியிருக்கின்ற போதும் அமெரிக்காவின் நலன்கள் சார்ந்த பாதையிலிருந்தும் தமது தடத்தை மாற்றிக் கொள்ளும் நிலைமையில் ஐரோப்பிய ஒன்றியம் இல்லையென்பது உண்மையான நிலைவரமாகும்.அமெரிக்காவும் அரசாங்கமென்ற வகையில் இலங்கை அரசாங்கத்தின் நலன்களுடன் ஒத்துழைத்து செயல்பட்டு வருமென்பது புதுமையான விடயமல்ல. இதனால், இழப்புகள், பாதிப்புகள் ஏற்படும் போது அறிக்கைகளை வெளியிடுவதுடன் மட்டும் நிறுத்திக் கொள்ளாது சமாதானத் தீர்வொன்று எட்டப்படுவதற்கு யதார்த்தபூர்வமான வகையில் ஆக்கபூர்வமான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும்.

மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்காக மனிதாபிமான ரீதியில் அணுகுமுறைகளை கைக்கொள்வது என்பது உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதென அர்த்தப்படாது. ஐ.நா. சாசனத்தின் பிரகாரம் இலங்கை மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்து மக்களின் அவலங்களை குறிப்பாக மோசமாபக பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் துயரத்தை முடிவுக்கு கொண்டு வர சர்வதேச சமூகம் நடைமுறைச் சாத்தியமான உதவிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பதே யாவரினதும் எதிர்பார்ப்பாகும்.

Email this page Your Opinion Print this page
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com