* பாகிஸ்தான் மக்கள் கட்சி முடிவு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டமை குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்காக புதிய விசாரணைக் குழுவை அமைக்க பாகிஸ்தான் மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தான் முன்னார் பிரதமர் பெனாசிர் பூட்டோ, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ராவல்பிண்டியில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது தற்கொலை படையினரின் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை குறித்து பிரிட்டன் புலனாய்வு அதிகாரிகளும் பாகிஸ்தான் பொலிஸாரும் விசாரித்து வருகின்றனர். இந்த படுகொலை குறித்து உண்மை அறிய கவுஸ் முகமது என்பவர் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி முஷாரப்பால் அமைக்கப்பட்ட இந்த விசாரணைக் குழுவினை பாகிஸ்தான் மக்கள் கட்சியினர் புறக்கணித்துவிட்டனர். இதனால் இந்த குழு மேற்கொண்டு விசாரணை நடத்த முடியாத நிலை உள்ளது.
சிந்து மாகாணத்தின் முன்னாள் முதல்வர் குலாம் ரஹிம் மற்றும் இவரது கட்சியான முஸ்லீம் லீக் (க்யூ) பிரிவின் தலைவர்கள் பலர், பெனாசிர் படுகொலையில் சம்பந்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சிந்து மாகாண தலைவர் ஜுல்பிகர் அலி மிர்சா தெரிவித்துள்ளார்.
`பெனாசிர் படுகொலை செய்வதற்கு முன்னதாக, குலாம் ரஹிம் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். `பெனாசிர் பயணம் இன்று இரவோடு முடிவடையும்' என குறிப்பிட்டிருந்தார். அவர் கூறியபடியே அன்று பொனாசிர் படுகொலை செய்யப்பட்டார். எனவே, பெனாசிர் கொலையில் குலாமுக்கு பங்குள்ளது தெள்ள தெளிவாகிறது. இது குறித்து, விசாரிக்க புதிய விசாரணை குழு அமைக்கப்படும் என ஜுல்பிகர் அலி மிர்சா தெரிவித்துள்ளார்.
சிந்து மாகாணத்தில் பாகிஸ்தான் மக்கள் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த கட்சி விரைவில் இங்கு ஆட்சி அமைக்க உள்ளது. `ஆட்சி அமைந்ததும் பெனாசிர் படுகொலை குறித்து விசாரணை குழு அமைக்கப்படும் குலாம் ரஹிம் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் தூக்கிலிடப்படுவார்' என ஜுல் பிகார் அலி மிர்சா மேலும் தெரிவித்துள்ளார்.