சிறுவர் துஷ்பிரயோக விசாரணைகளின் ஓர் கட்டமாக பலதார மணம் புரியும் சமூகப் பிரிவொன்றிலிருந்து 400 இற்கும் அதிகமான சிறுவர்களையும் 130 பெண்களையும் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநில அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது பெண்ணொருவர் தான் துஷ்பிரயோகத்திற்குள்ளாவதாக தொலைபேசி மூலம் வழங்கிய தகவலைத் தொடர்ந்தே இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
1700 ஏக்கர் பரப்பளவுள்ள இப் பிரிவினருக்குச் சொந்தமான கிராமப் பகுதியில்தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படையினர் அதிகளவான ஆண்களை உட்பகுதியில் தடுத்து வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மீட்கப்பட்டவர்களில் தகவல் கொடுத்த பெண்ணும் உள்ளடங்கியுள்ளாரா என்பது இதுவரை தெளிவாகவில்லை.
டெக்ஸாஸின் வட மேற்கு நகரான சான் அன்ரோனியாவிலிருந்து 160 மைல்கள் தொலைவிலுள்ள இக் கிராமம் பாரிய வீடமைப்பு திட்டம், ஒரு மருத்துவ நிலையம் மற்றும் வழிபாட்டுத் தளம் ஒன்று ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. எனினும் இங்கு வசிக்கும் மக்களின் தொகை தெரியவரவில்லை. அத்துடன் இப் பகுதி கிறிஸ்தவ அமைப்பொன்றினால் நிர்வகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இங்கிருந்து தகவல் தெரிவித்த 16 வயது சிறுமி தான் உடல் உள ரீதியாக துஷ்பிரயோகப்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் தான் 15 வயதில் குழந்தையொன்றை பெற்றெடுத்ததாகவும் தனது கணவரின் வயது 50 எனவும் தெரிவித்துள்ளார்.
டெக்ஸாஸில் 16 வயதிற்கு குறைவான பெண்களின் திருமணங்கள் சட்டத்திற்கு முரணானதாகும்.
இதேவேளை, தேடுதல் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.