யாழ்ப்பாணக் குடாநாட்டில் எழுபத்தாறு ஹெக்டர் நிலப்பரப்பில் பாதீனியம் செடி பரவி வளர்ந்து வருவதாக விவசாயத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இச்செடி பரவலாக வளர்ந்து படர்ந்து வருவதால் விவசாய நிலங்களுக்கு பெரும்பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
1987 ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை யாழ். குடாநாட்டில் நிலை கொண்டிருந்தபோது அவர்களது உணவுக்காக கொண்டு வரப்பட்ட ஆடுகளின் ரோமங்களில் ஒட்டியிருந்த பாதீனியம் செடி விதைகளால் யாழ். மாவட்டத்தில் இச்செடி பரவலாக வளரவாய்ப்பு உருவாகியிருந்தது.
1991 ஆம் ஆண்டு பாதீனியம் செடி பற்றிய தகவல்களை தரமறுப்பவர்களுக்கு தாவர பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டு ஒரு இலட்சம் ரூபா வரை தண்டம் விதிக்க நீதித்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
அண்மையில் எடுக்கப்பட்ட தரவுகளின்படி கோப்பாய் பிரதேசத்தில் 49 ஹெக்டர் நிலப்பரப்பிலும் வேலணை, தெல்லிப்பளை, சங்கானை, நல்லூர், யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவுகளில் 17 ஹெக்டர் நிலப்பரப்பிலும் வளர்ந்து படர்ந்து வருகின்றன. இச்செடியை முற்றாக அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.