* பிரதியமைச்சர் பைசல் முஸ்தபா
அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதைவிட கல்வி வசதிகளை அபிவிருத்தி செய்வதில் நாம் முன்னிலை வகிக்க வேண்டுமென சுற்றுலாத்துறைப் பிரதி அமைச்சர் பைசல் முஸ்தபா தெரிவித்தார்.
அண்மையில் தெல்தெனிய கல்வி வலயத்தைச் சேர்ந்த ஹிஜிராபுர முஸ்லிம் மகா வித்தியாலய புதிய கட்டிடத் திறப்பு விழாவில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது;
இன்று கிழக்கு மாகாணத்திற்கு வெளியே கல்வியில் மிகப் பின் தங்கிய சமூகமாக முஸ்லிம் சமூகம் உள்ளது. காரணம் பல்கலைக்கழக அனுமதியில் 1.5 சதவீத மாணவர்களே பிரவேசிக்கின்றனர். இவர்களில் அநேகர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். கிழக்கைத் தவிர்த்து பார்க்கும்போது ஒரு மிகச் சிறிய தொகையினரே முஸ்லிம்களில் பல்கலைக்கழகம் செல்கின்றனர். ஆனால், எமது இன விகிதாசாரம் 9.5 ற்கும் மேல் உள்ளது.
18 வயதை அடைந்ததும் அதிகமான முஸ்லிம்கள் கடவுச் சீட்டைப் பெற்றுக் கொண்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் தேடிச் சென்று விடுகின்றனர். இது உடனடித் தேவையை நிறைவு செய்கின்றபோதும் சமூக ரீதியில் பாரிய இழப்பாகும். நாம் கல்வியைத் தேடுவதில் பின்னிற்கக் கூடாது.
எனது பாட்டன் செய்யத் முஹம்மத் முஸ்தபா ஒரு வழக்கறிஞராக இருந்தார். அவர் கல்வியைத் தேடியதன் காரணமாகவே இன்று மூன்றாவது தலைமுறையில் நானும் ஒரு சட்டத்தரணியாகவும், பிரதி அமைச்சராகவும் உயர்ந்துள்ளேன். எனது பாட்டன் கல்வியைத் தேடவில்லை என்றால் எனது தந்தையும், நானும் இன்னும் மடவளையில் அதேநிலையில் இருந்திருப்போம். இந்தளவு முன்னேற்றம் கண்டிருக்க மாட்டோம்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன,மத,பேதமற்று குரல் கொடுப்பவர். பாலஸ்தீனத்தின் மக்கள் படும் துன்பத்திற்காக குரல் கொடுத்தவர். இதனால் அவரது கரத்தைப் பலப்படுத்த முற்பட்டேன்.
ஐ.தே.கட்சியின் ஆட்சியில் இப்பகுதி அபிவிருத்தி காணவில்லை. இதன் காரணமாகவே பிரதேச சபைத் தேர்தலின்போது ஷ்ரீ.ல.சு.கட்சி சார்பாக போட்டியிட்ட எஸ்.உபைதுல்லாவை ஆதரித்தீர்கள். அவரது அயராத முயற்சி காரணமாக இன்று சுமார் 20 இலட்ச ரூபா செலவில் இவ்விரு மாடிக் கட்டிடத்தை கட்ட முடிந்துள்ளது.
எனக்கு வாக்களித்த மக்கள் எனக்கு முக்கியம். எனவே, அவர்களுக்கு என்னால் ஆன சேவையைச் செய்ய நான் தயாராக உள்ளேன் என்றார்.