குறிகாட்டுவானுக்கும்- நெடுந்தீவுக்கும் இடையில் நடைபெற்றுவரும் குமுதினி படகுச்சேவை மீண்டும் இடைநிறுத்தப்பட்டுள்ளது என வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
இப்படகு கடந்த மாதம் 32 இலட்சம் ரூபா செலவில் திருத்தம் செய்யப்பட்டும் பத்து நாட்கள் கூட ஆகவில்லை. மீண்டும் இப்படகு பழுதடைந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்திருப்பது குறித்து நெடுந்தீவு வாழ் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
நெடுந்தீவில் வாழ்கின்ற நாலாயிரம் மக்களின் வெளியிடங்களுக்கான ஒரே ஒரு படகுச்சேவை இதுவாகும். இதனால், இந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்படகில் தேவைக்கதிகமாக பொருட்களை ஏற்றிச் செல்வதாக தெரிவிக்கப்படும் புகார்களையடுத்து அவற்றுக்குக் கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது. அவ்வாறான நிலையில் மீண்டும் இப்படகு பழுதடையக் காரணம் என்ன என்பது குறித்தும் விசனம் தெரிவிக்கப்படுகிறது.
இதன்காரணமாக நெடுந்தீவு மக்கள் மீன்பிடிப் படகுகள் மூலம் பயங்கரமான கடல் பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
நெடுந்தீவுக்கும்- குறிகாட்டுவானுக்கும் இடையில் நவீன படகுச்சேவையை ஆரம்பிக்குமாறும் இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாகவே கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.