* ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம்
யோ.நிமல்ராஜ்
`நான் இச்சம்பவம் தொடர்பாக நடந்த உண்மைகளை மட்டுமே இந்த ஆணைக்குழு முன்னிலையில் கூறுகின்றேன். அத்துடன், இங்கு சென்று சாட்சி கூறும்படி எவரும் என்னை வற்புறுத்தவுமில்லையென மூதூரில் இயங்கிய அக்ஷன் பாம் நிறுவன பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட விடயம் தொடர்பில் சாட்சியம் வழங்கிய ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2006 ஆகஸ்ட் மாதம் மூதூரில் படுகொலை செய்யப்பட்ட பதினேழு பணியாளர்கள் தொடர்பான விசாரணைகள் ஏழுபேர் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவால் கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற்று வருகின்றது.
இதன்போது, இச்சம்பவத்தில் பலியான ஜெயசீலனின் சார்பில் சாட்சியமளித்த ஒருவரை இராணுவத் தரப்பில் ஆஜராகிய சட்டத்தரணி கோமின் தயாசிறி குறுக்கு விசாரணை செய்யும் போது சாட்சியத்தின் கூற்றுகள் ஒன்றுக்குப்பின் முரணானவையாக இருக்கின்றதெனவும் சாட்சி தெளிவற்ற நிலையில் இருப்பதாகவும் கூறியபோதே சாட்சி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சாட்சி மேலும் தெரிவிக்கையில்;
ஜெயசீலனை 2006 ஜூலை மாதம் 31 ஆம் திததியே நான் இறுதியாக சந்தித்தேன்.
அதற்குப் பின்னர் அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. 2006 ஆகஸ்ட் முதலாம் திகதியே மூதூரில் மோதல்கள் ஆரம்பித்து விட்டதாக செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில், ஜெயசீலன் மூதூரிலேயே தங்கி இருந்தார். 2006 ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் நான்காம் திகதி வரை அவர் எமது குடும்பத்தாருடன் தொலைபேசித் தொடர்பினை மேற்கொண்டிருந்தார்.
கடந்த 2006 ஆகஸ்ட் முதல் வாரத்தில் மூதூரில் மோதல்கள் ஆரம்பித்துவிட்டதை வெடிச்சத்தங்கள், ஷெல் வீச்சுகள் மூலமும் அறியக் கூடியதாக இருந்தது.
இந்நிலையில், 2006 ஆகஸ்ட் நான்காம் திகதி காலை தொலைபேசி மூலம் கதைத்த ஜெயசீலன் தனது அலுவலகத்தைச் சுற்றிய பிரதேசங்களில் இராணுவம் நிற்பதாகவும் தாம் பாதுகாப்பாக இருப்பதாகவும் விரைவில் திரும்பி வருவதாகவும்தான் கூறினார்.
இவை அனைத்தையும் நான் எனது வாக்கு மூலத்தில் ஏற்கனவே கூறியிருந்தேன். நான் வழங்கிய வாக்கு மூலங்களில் இவை பதிவு செய்யப்பட்டனவா இல்லையா என்பது தொடர்பாக எனக்குத் தெரியாது.
வாக்கு மூலங்களில் நான் வாசிக்காமலேயே ஒப்பமிட்டேன்.
நான் எச்சந்தர்ப்பத்திலும் இராணுவம் இவர்களைச் படுகொலை செய்ததெனக் கூறவில்லை. அவர்களை குற்றஞ்சாட்டவும் இல்லை.
நான்காம் திகதி ஜெயசீலன் கூறிய விடயங்கள் வாக்கு மூலங்களில் இடம்பெறாமை குறித்து எனக்குத் தெரியாது.
மேலும், மாவிலாறு பாலம் மூடப்பட்டமை தொடர்பாகவும் திறக்கப்பட்டமை தொடர்பாகவும் பத்திரிகைகள் வாயிலாகவும் ஏனைய ஊடகங்கள் வாயிலாகவும் கேள்விப்பட்டிருக்கின்றேன்.
அது யாரால் மூடப்பட்டது, எவ்வாறு திறக்கப்பட்டது, எப்போது திறக்கப்பட்டது போன்ற விடயங்கள் எனக்குத் தெரியாது.
அத்துடன் காமினி என்பவர் பற்றி இராணுவ தரப்புச் சட்டத்தரணி மேலும் வினவிய போது, அவர் எனது சக ஊழியர் என்றுதான் எனக்குத் தெரியுமென சாட்சி கூறினார்.
மேலும், நான் இச்சம்பவம் தொடர்பில் நடந்த விடயங்களைக் கூறுவதற்காகவே இங்கு வந்துள்ளேன். எவருடைய வற்புறுத்தலின் அடிப்படையில் இங்குவரவில்லையென தெரிவித்தார்.
இதேவேளை, இராணுவ தரப்புச் சட்டத்தரணியால் பொங்கு தமிழ் நிகழ்வு பற்றியும் மாவிலாறு பாலம் தொடர்பாகவும் காமினி என்ற சக ஊழியர் பற்றியும் சாட்சியை கேள்விகள் கேட்க முற்பட்டபோது, ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் நிசங்க உடலாகம அதற்கு அனுமதி வழங்கவில்லை.
அத்துடன், சாட்சியை திரும்பத்திரும்ப ஒரே கேள்விகளையும் இச்சம்பவத்துடன் தொடர்பற்ற விடயங்களைக் கேட்கவேண்டாமெனவும் ஆணைக்குழுவின் தலைவரால் உத்தரவிடப்பட்டது.
இச்சாட்சியின் சாட்சியம் நேற்றைய தினத்துடன் நிறைவு பெற்றது. இப்படுகொலை தொடர்பான விசாரணைகள் திரும்பவும் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறுமென்றும் இன்னும் சிலர் இவ்விடயம் தொடர்பாக சாட்சியம் வழங்கவுள்ளனரென்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்குழு தெரிவித்துள்ளது.