மலையகத் தொழிற்சங்கங்கள் மேதின நிகழ்வுகளை மலையகத்தின் பல பாகங்களிலும் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை, துரிதமாக மேற்கொண்டு வருகின்றன.
பிரதி சுகாதார அமைச்சர் வடிவேல் சுரேஷ் தலைமையிலான பெருந்தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் முதல் தடவையாக மே தினத்தை பதுளை மாநகரில் கோலாகலமாக நடாத்தத் திட்டமிட்டுள்ளது.
மத்திய மாகாண சபை உறுப்பினர் பி. திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம் மேதினக் கொண்டாட்டத்தை தலவாக்கலையில் நடாத்தவுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸும், மலையக மக்கள் முன்னணியும் அட்டன் நகரில் மேதின நிகழ்வுகளை நடாத்த திட்டமிட்டுள்ளன.
தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் மேதின விழாவினை தலைவர் டி. அய்யாதுரை, மத்திய மாகாண கல்வி அமைச்சர் எல். அருள்சாமி ஆகியோர் நானுஓயா நகரில் நடாத்த திட்டமிட்டுள்ளனர்.
முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சென்னன் தலைமையிலான இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி தமது மேதின நிகழ்வினை இரத்தினபுரியில் நடாத்தவுள்ளது. ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் மேதினத்தினை பொகவந்தலாவை நகரில் நடாத்தவுள்ளது.
இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் ஐக்கிய தேசியக்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் குருநாகலையில் நடாத்தவுள்ளது. மலையக மக்கள் முன்னணி தலைவர் பெ. சந்திரசேகரன் தலைமையில் அட்டனில் நடாத்த ஏற்கனவே திட்டமிட்டிருந்த போதிலும், இ.தொ.கா.வும் தமது மேதினத்தினை அட்டனிலேயே நடாத்துவதென்ற முடிவினை எடுத்திருப்பதினால் இரு தரப்பினருக்குமிடையே முறுகல் நிலை ஏற்படலாமென்ற கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.