அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் படுகொலைச் சம்பவமானது இந்நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாது மலையகத் தமிழ் மக்களுக்கும் பேரிழப்பாகும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
"அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே எனது அரசியல் வாழ்க்கையில் நீண்ட நாள் நண்பன். அத்துடன், ஓர் ஆற்றல் மிகுந்த அரசியல் தலைவர். மும்மொழியும் பேசக் கூடிய எம் தாய் மொழியான தமிழ் இனத்தைச் சேர்ந்த தலைவரை இன்று எம் நாடு இழந்துள்ளது.
ஓர் மனிதனின் உயிரை பறிக்கும் உரிமை இன்னோர் மனிதனுக்கு வழங்கப்படவில்லை. அந்த உரிமை எம்மைப் படைத்த ஆண்டவனுக்கு மட்டுமே உண்டு என்பதனை எல்லோரும் மனித நேயத்துடன் சிந்திக்க வேண்டும்.
இவ்வாறான கொடூர செயல்கள் இனியும் நடைபெறாமல் இருக்க வேண்டும் எனவும், அன்னாரின் மறைவையொட்டி தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதுடன், அவரின் மறைவால் சோகத்தில் ஆழ்ந்துள்ள அவர்தம் குடும்பத்தாருக்கும் உறவினருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்வதாக" குறிப்பிட்டுள்ளார்.