* சர்வதேச கண்காணிப்பாளரை வரவழைக்க இணக்கம்
இயற்கை அனர்த்தம் ஏற்பட்டால் மாத்திரமே கிழக்கு மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்க முடியும். வேறு எவர் நினைத்தாலும் ஒத்திவைக்கும் அதிகாரம் கிடையாதென ஆணையாளர் தயானந்த திசாநாயக்கா தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றுள்ள கிழக்குத் தேர்தல் தொடர்பிலான அரசியல் கட்சிகளுடனான கலந்துரையாடலில் குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
கிழக்கு தேர்தலை நீதியும் நியாயமாக நடத்த திணைக்களம் உறுதிபூண்டுள்ளது. இதற்கு சகலரினதும் ஒத்துழைப்பு பிரதானமானது.
தேர்தலை ஒத்திவைக்கும் எத்தகைய நோக்கமும் எமக்கில்லை. இயற்கை அனர்த்தம் ஏற்பட்டால் மாத்திரமே தேர்தல் ஒத்திவைப்பது சாத்தியமாகும்.
கிழக்கு தேர்தல் பிரசாரங்களை பாதுகாப்பு காரணங்களுக்காக மாலை 6 மணியுடன் நிறைவுசெய்வது அவசியம். இதனை மீறும் கட்சிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கிழக்கு தேர்தல் சுயாதீனமாக நடைபெறுவதை உறுதிப்படுத்த வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் வரவழைக்கப்படுவார்கள் என்றார்.
இக்கலந்துரையாடலில் தேர்தல் ஒத்திவைக்கப்பட வேண்டுமென ஐ.தே.க. எம்.பி. ரவி கருணாநாயக்கா வலியுறுத்தியபோது அதனை தேர்தல்கள் ஆணையாளர் நிராகரித்துள்ளார்.
எனினும், முஸ்லிம் காங்கிரஸில் ஐ.தே.க.வும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் வரவழைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியபோது, அதற்கு தேர்தல் ஆணையாளர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
இக்கலந்துரையாடலில் பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா உள்ளிட்டோருடன் பல்வேறு அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டுள்ளனர்.