* ஊடகவியலாளர் மாநாட்டில் அறிவிப்பு
-எம்.ஏ.எம்.நிலாம்-
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையில் ஜே.வி.பி.யின் 11 எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் தனித்து இயங்க முடிவு செய்திருப்பதாக அறிவித்திருக்கும் நிலையில் அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரணவீர பத்திரண விமல் வீரவன்சவின் பாராளுமன்ற அறிக்கையை கடுமையாக சாடியுள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் விமல் வீரவன்ச கட்சியிலிருந்து தம்மை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்குப் பின்னர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவிருப்பதாகவும் தெரிவித்து அறிக்கையொன்றை விடுத்ததன் பின்னர் அவருக்கு ஆதரவான 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் மாலையில் விசேட ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தியது.
பாராளுமன்ற உறுப்பினர்களான பியசிறி விஜேநாயக்க, தேசிய பட்டியலில் எம்.பி.முஸம்மில் ஜயந்த சமரவீர, பிரியங்கர திசாநாயக்க, சமன்சிறி ஹேரத், பத்மா உதய சா ந்த, அச்சல ஜாகொட, தீபால் குணசேக்கர ,நிமல் பிரேமவன்ஸ, சுஜாதா அழககோன் ஆகியோருடன் அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரணவீர பத்திரணவும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டனர்.
ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த பியசிறிவிஜேநாயக்க; ஜே.வி.பி. இன்று ஏகாதிபத்திய சதிக்குள் சிக்குண்டிருப்பதாகவும் கட்சிக்குள் ஒரு சிலர் கட்சிக்கொள்கைக்கு முரண்பட்டுச் செயற்படத் தொடங்கியிருப்பதாகவும் காட்டிக்கொடுக்கும் வேலையை ஆரம்பத்திருப்பதாகவும் சாடினார்.
ஐக்கிய தேசியக் கட்சியினதும் ஏகாதிபத்திய சக்திகளினதும் வலைக்குள் கட்சியின் உயர்மட்டத்தைச் சேர்ந்த சிலர் சிக்குண்டு விலை போயுள்ளதாகவும் அவர்களிடமிருந்து கட்சியையும் அதன் பின்னால் அணி திரண்டிருக்கும் மக்களையும் பாதுகாப்பதற்காகவே தாங்கள் ஓரணியில் செயற்பட முடிவு செய்ததாகவும் தெரிவித்தனர்.
கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ, உயர் மட்டத்துக்கோ அறிவிக்காமல் கட்சியில் எவரும் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. விமல் வீரவன்ச மீது கட்சி ஒருதலைப் பட்சமாக முடுவெடுத்துள்ளது. இது பற்றிக் கட்சி உயர் பீடத்திடம் கேட்டபோதும் அவர்களில் எவரும் நியாயமான பதிலளிக்காமல் நழுவல் போக்கிலேயே கருத்து தெரிவித்தனர். கட்சி மேலிடம் உண்மையை மூடி மறைத்ததன் விளைவாகவே விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் அறிக்கை வெளியிட நேர்ந்தது. அவர் தமது நிலைப்பாட்டை பாராளுமன்றத்தில் அறிவித்தது நியாயபூர்வமானதாகவே நாம் காண்கிறோம்.
கட்சி மேலிடம் இவ்விவகாரத்தை பேசித்தீர்க்க முன்வந்தால் அதற்கு நாம் தயாராகவே உள்ளோம். ஜே.வி.பி.யை பாதுகாப்பதற்காக நாம் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராகவிருக்கின்றோம் என்றும் பியசிறி விஜேநாயக்க தெரிவித்தார்.
இதனிடையே குறுக்கிட்ட அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரணவீர பத்திரண, விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் அறிக்கை விடுத்தமை தவறானதென கண்டித்தார்.
கட்சிக் கட்டுப்பாட்டை மீறி அவர் செயற்பட்டிருக்கின்றார். உள்ளே இருந்து பேசித் தீர்க்க வேண்டிய விடயத்தை பகிரங்கமாக்கி கட்சிக்கு அவப்பெயரை விமல் வீரவன்ச ஏற்படுத்திவிட்டதாகவும் அவர் கூறினார்.
இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவரும் தம்மனப் போக்கில் பேசத் தொடங்கினர். ஊடகவியலாளர்கள் தனித்தனியே கருத்துக்கூறுமாறு பல தடவைகள் வலியுறுத்தியபோதும் அதனை அவர்கள் செவிமடுக்காமல் பேசிக்கொண்டே இருந்தனர்.
கேட்கப்பட்ட கேள்விகளுக்குக் கூட அவர்கள் நேரிடையாக பதிலளிக்காமல் சாக்குப்போக்காக கருத்துக்களைத் தெரிவித்தனர்.
ஊடகவியலாளர்கள் மத்தியில் 11 பாராளுமன்ற உறுப்பினர்களாலும் உறுதியான நிலைப்பாட்டைத் தெரிவிக்க முடியாத நிலையில் குழப்பகரமான விதத்தில் ஊடகவியலாளர்கள் மாநாடு முடிவுக்கு வந்தது.