Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 09, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Main News
ஜே.வி.பி.இரண்டாகப் பிளவு
[09 - April - 2008] [Font Size - A - A - A]
-எம்.ஏ.எம். நிலாம்-

தென்னிலங்கை அரசியலில் மூன்றாவது பெரிய அணியாக உருவாகியிருந்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) நேற்று செவ்வாய்க்கிழமை இரண்டாகப் பிளவுப்பட்டிருக்கிறது.

ஜே.வி.பி.க்குள் கருத்து முரண்பாடுகளும் பிளவுகளும் ஏற்பட்டிருப்பதாக அண்மைக் காலமாக வெளிவந்த செய்திகளைக் உறுதிப்படுத்துபவையாக நேற்று அக்கட்சி உறுப்பினர்கள் இருகுழுக்களாக பிளவுண்டு விடுத்த அறிக்கைகளும் இடம்பெற்ற சம்பவங்களும் அமைந்திருக்கின்றன.

நேற்றுக் காலை பாராளுமன்றத்தில் விஷேட அறிக்கையொன்றை விடுத்து உரையாற்றிய அக்கட்சியின் பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்ச தன்னை கட்சியிலிருந்து வெளியேற்ற

மத்திய குழு தீர்மானித்திருப்பதாகவும் ஆனால், கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுறும் வரை அது குறித்த அறிவிப்பை வெளியிடுவதை தாமதப்படுத்தி வைத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

தன்னை கட்சியிலிருந்து வெளியேற்றுவது கட்சிக்குள்ளேயே வைத்து கட்சியால் தன்னை படுகொலை செய்வதற்கு ஒப்பானது என்று வர்ணித்திருந்த வீரவன்ச மோசடிகளுக்கும் சதிகளுக்கும் தான் அஞ்சப்போவதில்லையெனவும் தாய்நாட்டிற்காக இறுதி மூச்சு வரை போராடப் போவதாகவும் சூளுரைத்ததுடன் தன்னை வெளியேற்ற மேற்கொண்ட தீர்மானம் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களினதும் சர்வதேச சக்திகளினதும் சதியெனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, விமல் வீரவன்சவுக்கு ஆதரவான 10 எம்.பி.க்கள் நேற்று பிற்பகல் கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் செய்தியாளர் மாநாட்டை நடத்தியதுடன் வீரவன்ச மீது கட்சி எடுத்த தீர்மானம் தவறானது என்று பகிரங்கமாக அறிவித்திருக்கின்றனர்.

அத்துடன், விமல் வீரவன்சவுக்கு எதிராக கட்சி எடுத்த முடிவுக்கு எதிராக தனியான குழுவாக இயங்கி தாங்கள் போராடப்போவதாகவும் இவர்கள் அறிவித்தனர்.

ஆனால், செய்தியாளர் மாநாட்டுக்குச் சமூகமளித்திருந்த 11 பேரில் ஒருவராகக் கலந்து கொண்ட அநுராதபுர மாவட்ட எம்.பி. ரணவீர பத்திரண திடீரென நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்.

விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் அறிக்கை விடுத்ததைச் சாடிய அவர் ஏனையவர்களைப் பேசவிடாமல் தான் நினைத்தபடி பேசிக்கொண்டே போனார். அத்துடன் மற்றயவர்கள் பேசும்போது இடையே குறுக்கீடுகளையும் ரணவீரபத்திரண மேற்கொண்டார்.

ஊடகவியலாளர் மாநாடு முடிந்த பின்னரும் ரணவீர பத்திரண அங்கு நின்ற ஊடகவியலாளர்களிடம் தமது கருத்தைத் தெளிவுபடுத்திக் கொண்டே இருந்தார். ஊடகவியலாளர்களும் அவரை சூழ்ந்து கொண்டு கேள்விக் கணைகளைத் தொடுத்த வண்ணமிருந்தனர்.

சுமார் 15 நிமிடங்கள் வரை ஊடகவியலாளர்களிடம் விமல்வீரவன்சவையும் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்திய பியசிறி விஜேநாயக்கா உள்ளிட்ட 10 பேரையும் ரணவீரபத்திரண கண்டபடி விமர்சித்துக் கொண்டிருந்தார்.

அங்கு நின்ற ஜே.வி.பி. யைச் சேர்ந்த சிலர் அவரை சமாதானப்படுத்தி அழைத்துச் செல்ல முற்பட்டபோதும் அவர் அதனை பொருட்படுத்தாமல் பேசிக் கொண்டே இருந்தார்.

இவ்வேளையில் திடீரென பொலிஸ் அத்தியட்சர் அஜித் பொன்சேக்கா தலைமையில் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் ரணகல உட்பட பொலிஸ் அதிகாரிகள் குழு நிப்பொன் ஹோட்டலுக்குள் நுழைந்து பாராளுமன்ற உறுப்பினர் ரணவீர பத்திரணவை வெளியே அழைத்து வந்தனர்.

அவர் வெளியே வந்தபோதும் பொலிஸ் ஜீப்பில் ஏற மறுத்தார். கட்சித் தலைமையகத்துக்குக் கொண்டுபோய் சேர்ப்பதாக அவர்கள் உறுதியளித்த போதும் அவர் நீண்ட நேரமாக ஜீப்பில் ஏற மறுத்து வந்தார்.

இறுதியில் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் ரணகல அவரை வலுக்கட்டாயமாக ஜீப்பில் ஏற்றியதையடுத்து ஜீப் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இதேவேளை, ஊடகவியலாளர் மாநாடு நடக்கமுன்பு அமைதியாகக் காணப்பட்ட பகுதி சுமார் ஒரு மணி நேரத்துக்குள் பதற்றம் நிலவிய இடம்போல் மாறியிருந்தது.

பெருந்தொகையான பொலிஸாரும் விசேட கொமாண்டோ படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Email this page Your Opinion Print this page
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com