லண்டனில் ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் ஆர்ப்பாட்டக்காரர்களால் தடுக்கப்பட்டது குறித்து சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் கவலை தெரிவித்துள்ளார்.
பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் நடைபெற்று வருகிறது. எனினும், திபெத் பிரச்சினை காரணமாக ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தின்போது ஆங்காங்கே எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
லண்டனில் ஞாயிற்றுக்கிழமை ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் நடைபெற்றபோது ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சீனாவுக்கு எதிராக அவர்கள் கோஷத்தை எழுப்பினர். இதனால் ஓட்டம் சிறிது பாதிக்கப்பட்டாலும் ஒலிம்பிக் ஜோதிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் ரோகே இந்நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளார். நிலைமையை சீராக்க சீனா முயற்சிக்க வேண்டுமென்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
திபெத் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண சீனா முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.