Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, May 01, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
சுயநிர்ணய உரிமையின் வளர்ச்சியும் வரலாறும்
[01 - May - 2008] [Font Size - A - A - A]
*விடிவை நோக்கி.... என்ற தலைப்பில் கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாண மாநகர சபை பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் நிகழ்த்திய தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் நினைவுப் பேருரை

(நேற்றைய தொடர்ச்சி)

ஆனால், நாடுகளின் நாட்டு எல்லைகள் சிதைவுறும் விதத்தில் நடந்து கொள்ள சர்வதேச நாடுகள் விரும்புவதில்லை. கனடாவில் கியூபெக் மாகாண பிரிவினை வழக்கில் அந்நாட்டின் உச்ச நீதி மன்றம் தான்தோன்றித் தனமான பிரிவினையைச் சர்வதேச சட்டம் அனுமதிக்காது என்று கருத்து வெளியிட்டது.

உள்நாட்டு சுயநிர்ணய உரிமை மறுக்கப்பட்ட போது தான் அதாவது, அகச் சுயாட்சியை அரசாங்கங்கள் நிராகரித்திருந்தால்த் தான் புறச்சுயாட்சி பரிசீலிக்கப்படும் என்று கருத்துத் தெரிவித்தது அந்த உச்ச நீதிமன்றம். ஆகவே, `கியூபெக்' மாகாண மக்கள் மக்கட்கூட்டமொன்றாக மதிக்கத்தக்க தகைமைகளைக் கொண்டிருந்தும் உள்நாட்டில் சுயநிர்ணய உரிமையைக் கனடா அரசாங்கம் மறுக்காத காரணத்தால் சர்வதேசச் சட்டத்தின் கீழ் `கியூபெக்' மாகாணம் பிரிந்து போவதற்கு உரிமை உடையதன்று என்று தீர்மானிக்கப்பட்டது.

ஹர்ஸ்ட் ஹன்னும் (Hurst Hannum) என்ற அமெரிக்க சர்வதேசச் சட்டப் பேராசிரியர் 1996 ஆம் ஆண்டு எழுதிய தமது நூலொன்றில் 1945 ஆம் ஆண்டின் பின் அப்பொழுது வரையில் பங்களாதேஷின் சுதந்திரம் மட்டுமே சர்வதேச நாடுகளினால் ஏற்கப்பட்ட ஒரேயொரு சந்தர்ப்பம் என்று கூறி அதுக்குக் கூட சர்வதேசச் சட்டம் அல்லாது இந்திய இராணுவமே வழி வகுத்தது என்றும் கூறியுள்ளார்.

இலங்கையில் இன்றைய நிலை

சுயர்நிர்ணயம், பிரிவினை ஆகிய இரண்டு கருத்துகள் பற்றிய சர்வதேசச் சட்ட நோக்கைப் புரிந்து கொண்டதாலேயோ என்னவோ 2002 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி ஒஸ்லோவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் பின்வருமாறு இணங்கப்பட்டது.

`விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய இரு தரப்பாரும் ஐக்கியப்பட்ட ஷ்ரீலங்கா நாட்டினுள் சமஷ்டி அடிப்படையில் தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்களின் மீது சுய நிர்ணய உரித்தை அவர்கள் பிரயோகிக்கும் வண்ணம் ஒரு அரசியல் தீர்வை ஆராய்வதென இணங்கப்பட்டுள்ளது. இரு தரப்பாரும் அப்பேர்ப்பட்ட தீர்வானது முஸ்லிம்கள் உள்ளடங்கலாக சகல இன மக்களுக்கும் ஏற்புயைடதாய் இருக்க வேண்டும் என்று இணங்கினார்கள்'

இந்த இணக்கப்பாட்டையே தற்போதைய சிங்கள அரசியல் தலைமைத்துவம் உதறித்தள்ளியுள்ளது. மேற்படி இணக்கப்பாட்டுக்குப் பதில் முன்னரே அரசியல் யாப்பில் இடம் பெறும் 13 ஆவது திருத்த அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்று கூறி தமது ஆயுத பலத்தைத் தமிழ் மக்கள் சார்பாகப் போராடும் போராளிகளின் ஆயுத பலத்துடன் மோதவிட்டு வருகிறார்கள். ஆகவே, பிரிவினை எண்ணங்களைச் சிதறடிக்கும் தன்மையதான சமஷ்டித் தீர்வு தற்போதைய சிங்கள அரசியல் தலைமைத்துவத்தால் வரவேற்கப்படவில்லை என்று தெரிகிறது. ஒஸ்லோ விளம்பல் வெளிவருங் காலம் வரையில் இலங்கையின் வட கிழக்குத் தமிழ் மக்களின் விடிவிற்கான அரவணைக்கக் கூடிய அதியுயர இலக்கு சுயர்நிணய உரித்தாகவே சர்வதேசச் சட்டத்தின் கீழ் இருந்தது. ஆனால், தற்பொழுது அந்த உரித்து மறுக்கப்பட்டு வருவது கண்கூடு. இது புறச்சுயாட்சியைக் கோரும் நிலைக்கு நாட்டை எடுத்துச் செல்லுமா என்பதை இருந்து தான் பார்க்க வேண்டும்.

சர்வதேசச் சட்டமானது நடைமுறை நாடுகளை மையமாக வைத்து அதே நாடுகளால் இயற்றப்பட்டுள்ளது என்பதை நாங்கள் மறத்தல் ஆகாது. ஆனால், முன்னர் நான் குறிப்பிட்டது போல் 1919 ஆம் ஆண்டில் இருந்து உலகின் மக்கட்பிரிவினர் ஒவ்வொன்றிற்குங் கூடுமான தன்னாட்சி அளிக்கும் விதமாகவே சர்வதேசச் சட்டம் வளர்ச்சி அடைந்து வந்துள்ளது. தனி நாடுகளின் இறைமைத்துவமும் நாட்டந்தஸ்து நிலையும் வர வர மாற்றமடைந்து வருவதை நாம் இன்று பார்க்கலாம். உதாரணமாக ஐரோப்பிய ஒன்றியம் இதற்கு எடுத்துக்காட்டாக அமைகிறது. "நான்", "நான்" என்ற பல நாடுகள் சேர்ந்து இன்று "நாம்", "நாம்" என்று கூறத் தொடங்கியுள்ளன. சார்க் நாடுகள் இதேபோல் ஒரு ஒன்றியத்தை வருங்காலத்தில் அமைக்குஞ் சாத்தியக் கூறுகள் இப்பொழுது தென்படாவிட்டாலும் நிலைமை மாற இடமிருக்கின்றது. ஜனநாயகக் கோட்பாட்டில் நம்பிக்கை இல்லாத சீனாவின் பலம் ஏற ஏற சார்க் நாடுகள் எவ்வாறு தாம் அதற்கு முகம் கொடுக்க வேண்டும் என்பதில் புதிய புதிய யுக்திகளைக் கையாள நேரிடும்.

நாடுகளும் அவற்றின் எல்லைகளும் என்றென்றைக்கும் நிலைபெறுந் தன்மையன என்று நாம் எண்ணுதல் ஆகாது. சோவியத் ரஷ்யா இதற்கு எடுத்துக்காட்டு.

பாகுபாட்டு மறு பகிர்ந்தளிப்பு

"பாகுபாட்டு மறு பகிர்ந்தளிப்பு" (Discriminatory redistribution) என்ற சொல்லை "பிரிவினை" பற்றி நூலொன்றை எழுதிய அரிசோனா பல்கலைக்கழகப் பேராசிரியர் அலன் பக்கனன் அவர்கள் பாவித்துள்ளார்கள். பாகுபாட்டு மறு பகிர்ந்தளிப்பு என்றால் நாட்டின் வளங்களைப் போய்ச் சேர வேண்டிய இடங்களுக்குச் செல்ல விடாமல் தடுத்து தான் தோன்றித்தனமாக வேற்றின மக்களைப் போய் அடைய வைப்பது. எப்பேர்ப்பட்ட சூழ்நிலைகளில் பிரிவினையானது சர்வதேசச் சட்டக் கோட்பாடுகளுக்கும் நீதி நெறிக் கருத்துக்களுக்கும் ஏற்புடையதாக அமையக்கூடும் என்பது பற்றி அவர் தமது "பிரிவினை" (Secession) பற்றிய நூலில் கருத்து வெளியிட்டுள்ளார். அந்நூலைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடல் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் என்று கருதுகிறேன். அதாவது, எவ்வாறு சில இனங்களின் நன்மைக்காகவும் மற்றவற்றின் துன்புறு வருந்தலுக்காகவும் ஒரு நாட்டின் அரசாங்கம் மறைமுகமாக அதன் வளங்களை மறு பகிர்ந்தளிப்பு செய்து பாகுபாட்டை உண்டு பண்ணக்கூடும் என்பதை ஆராய்ந்துள்ளார். கடந்த அறுபது வருடங்களாக இந்தப் பாகுபாட்டு மறு பகிர்ந்தளிப்பு இந்நாட்டில் நடைபெற்று வருகிறது. பாரம்பரிய காணிகளில் இருந்து தமிழ்ப்பேசும் மக்கள் வெளியேற்றப்பட்டு அங்கு வேற்றின மக்களைக் குடியிருத்துவதிலிருந்து சிங்கள மொழித் திணிப்பு, கல்வியில் தரப்படுத்தல், அரசசேவையில் பாகுபாடு, நாட்டின் வட கிழக்கில் பொருளாதார விருத்தியை நுணங்கச்செய்து மந்தப்படுத்துவது வரை பல விதங்களில் இந்தப் பாகுபாட்டு மறு பகிர்ந்தளிப்பு நடைபெற்று வந்துள்ளது. பேராசிரியர் பக்கனனின் கருத்துப்படி பாகுபாட்டு மறு பகிர்ந்தளிப்பில் ஈடுபடும் அரசாங்கங்கள் தம்மைத் திருத்தாவிடில் அந்த அரசாங்கங்கள் தமது நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்டோர் மீது அரசியல் அதிகாரத்தைச் சட்டப்படி பிரயோகிக்கும் உரித்தை இழக்கின்றார்கள். அதேநேரம் பாதிக்கப்பட்ட மக்கள் தமக்குரிய நிலப்பரப்பில் அப்பேர்ப்பட்ட அரச அதிகாரத்தின் பிரயோகத்தை நீக்க ஆவன செய்வதன்றி வேறு வழிகள் அவர்களுக்கு இல்லை என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

உதாரணத்திற்கு அமெரிக்காவைக் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியா தனது குடியேற்ற நாட்டில் தனது அதிகாரத்தைப் பிரயோகித்தவிதம் தாய் நாட்டுக்கு (அதாவது பிரித்தானியாவிற்கு) நன்மை பயத்ததே அன்றி குடியேற்ற நாட்டு அமெரிக்க மக்களுக்கு எவ்வித நன்மையையும் அளிக்கவில்லை. பிரித்தானியப் பாராளுமன்றத்திலுங் குடியேற்ற மக்களின் குரல் குமுறி ஒலிக்கக்கூடிய வசதி கள் இருக்கவில்லை. ஒலித்தாலும் அதைப் பொருட்படுத்துவோர் இருக்கவில்லை. ஆகவே, குடியேறிய நாட்டின் நியாயமற்றதும் பாகுபாடுடையதுமான அதிகாரமும் அரசாட்சியுந் தொடர்ந்து நிலைத்து நிற்கும் என்று கண்ட அமெரிக்க மக்கள் புரட்சியில் ஈடுபட்டார்கள். இது நியாயமான ஒரு முடிவே என்று பக்கனன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் இன்னும் சில நாடுகளில் சிறுபான்மையினருக்கு எதிராகப் பலதரப்பட்ட பாரபட்சமும் பாகுபாட்டு மறு பகிர்ந்தளிப்பும் நடந்து கொண்டிருக்கின்றன என்று கூறி அப்பேர்ப்பட்ட நாட்டரசாங்கங்களின் விடாப்பிடியான தொடர் நடவடிக்கைகள் பிரிவினையை அன்றி வேறு எந்த ஒரு தீர்வையும் எட்டிப் பிடிக்க முடியாதவாறு சூழ்நிலைகள் மோசமானால் தமக்குரிய பிரதேசத்தைத் தாமே பிரித்தெடுத்து ஆள்வது நியாயபூர்வமானதன்றோ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு நாட்டின் அரசாங்கம் சகலரையும் சமமாகப் பாவித்து நடத்தும் வரையில் தான் அந்த நாட்டின் அரசாங்கமாக அமைய முடியும். அதுவே குறிப்பிட்ட சில மக்களை வாட்டி வதைத்துப் பாரபட்ச நடவடிக்கைகளில் இறங்கி அவர்களுக்கு இன்னல் களையும் இம்சைகளையுந் தரவிளைந்தால் தொடர்ந்து அப்பேர்ப்பட்ட அரசாங்கத்தைத் தமது அரசாங்கம் என்று எவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் அடையாளம் காட்ட முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விதத்தில் எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகள் பிரிவினைக்கு அடி கோலக் கூடிய பாரபட்ச நடவடிக்கைகள் என்பதையும் ஆராய்ந்துள்ளார். ஒரு மக்கட் கூட்டத்தினரின் கலாசாரத்தைச் சிதைப்பது, இன அழிப்புக்கு உடந்தையாக இருப்பது, அதன் பொருட்டு பாதிக்கப்பட்ட மக்கள் தம்மைத்தாமே பாதுகாத்துக்கொள்ள தற்பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய அவசியம் ஒன்றை ஏற்படுத்துவது, குடியியல், அரசியல், அடிப்படை உரிமைகளைப் புறக்கணிக்கும் வண்ணமாக இனரீதியான பாகுபாட்டில் சிரத்தை காட்டுவது மேலும் மேற் குறிப்பிட்ட பாகுபாட்டு மறு பகிர்ந்தளிப்பில் ஈடுபடுவது போன்றவை பிரிவினை கோருவோரின் கரங்களைப் பலப்படுத்தக்கூடிய நிகழ்வுகள் என்று கூறியுள்ளார். இலங்கைத் தமிழர்களைப் பொறுத்த வரையில் இவற்றுள் எவையெல்லாம் எம் இனத்தவருக்கு எதிராகப் பிரயோகிக்கப்பட்டுள்ளன என்பது ஆராயப்படவேண்டிய விடயம். ஆராய்ந்து சர்வதேசத்தவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய விடயங்கள், ஓரளவுக்கு இன்று இது நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றது. அதை அரசாங்கமும் அவதானித்து மாற்று நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதும் கண்கூடு, இவற்றை எடுத்தியம்புவோரைக் கூலிப்படைகள் மூலம் கண்காணித்து வருவதுங் கண்கூடு.

அது மட்டுமல்ல, அண்மைக் காலங்களில் சுய நிர்ணயம், சமஷ்டி போன்ற கருத்துக்களுக்கு எதிரான சிங்கள மக்களின் பேச்சுக்களும் நடவடிக்கைகளும், அரசியலில் குதித்துள்ள பௌத்த குருமாரின் இனப்பாகுபாட்டை வலியுறுத்துங் கருத்துக்களும் செய்கைகளும், நாட்டில் இன்று மிக மோசமாகப் பரவி வரும் இலஞ்ச ஊழல், பொருளாதாரச் சிதைவு, அரசியலில் ஒரு ஸ்திரமற்ற தன்மையுங் கட்சிகளுக்கிடையேயான உட்பூசல் களும் மேலும் இன்னோரன்ன காரணகாரியங்களும் ஷ்ரீலங்கா அரசாங்கங்கள் இது வரையில் வெளியுலகத்திற்கு எடுத்துக்காட்டி வந்த சகல இன மக்களிடையேயான கூட்டுறவு இங்குண்டு என்ற மாயையை இல்லாமற் பண்ணி முஸ்லிம்கள் உள்ளடங்கலான தமிழ்மொழி பேசும் மக்களுக்கு எதிராகப் பாரிய இனத்துவேஷ, இனப்படுகொலை நடவடிக்கைகள் கட்டவீழ்க்கப்பட்டுள்ளன என்ற உண்மையை வெளியுலகத்திற்கு எடுத்துக் கூற வல்ல சூழல்களை உண்டாக்கிவிடலாம் என்று கொள்ளவும் இடமிருக்கின்றது.

(தொடரும்)

Email this page Your Opinion Print this page
அனைத்து அடக்குமுறைகளுக்கு எதிராகவும் வேறுபாடுகளை மறந்து மக்கள் ஐக்கியப்பட்டு போராடக்கூடிய சூழலை உருவாக்கவேண்டும்
உயர்ந்துவிட்ட உணவு விலை அபாயம்
பண்டாரவளை நகரில் மலையக மக்கள் முன்னணியின் மே தின விழா
சுயநிர்ணய உரிமையின் வளர்ச்சியும் வரலாறும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com