Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, May 01, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
பண்டாரவளை நகரில் மலையக மக்கள் முன்னணியின் மே தின விழா
[01 - May - 2008] [Font Size - A - A - A]
எச்.எச். விக்கிரமசிங்க

இலங்கையில் வாழும் 14 இலட்சம் மலையக தமிழர்களை பொறுத்தவரையில் ஊவா மாகாணம் அவர்களுக்கு ஒரு பிரதான உறைவிடம். வாழ்வாதாரத்தை நாடி இலங்கை வந்த இந்திய தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆரம்ப காலத்திலேயே அடைக்கலம் வழங்கிய பெருமை ஊவாவிற்கு உண்டு. ஊவாவில் காணக் கூடியதாக இருக்கின்ற செழிப்பும் வளமும் எமது மக்களின் அயராத உழைப்பின் வழி வந்தது என்பது வரலாறு. பதுளை மாவட்டமும் மொனராகலை மாவட்டமும் இணைந்த ஊவா மாகாணம், மத்திய மாகாணத்திற்கு அடுத்தபடியாக மலையக மக்கள் திரண்டு வாழுகின்ற ஒரு பிரதேசமாகும். 19 ஆம் நூற்றாண்டில் இருந்து பல வரலாற்று நிகழ்வுகளையும் பல தொழிற்சங்க போராட்டங்களையும் தலைமைகளையும் கண்ட ஒரு மாகாணம். அரசியல், தொழிற்சங்கம் என மட்டுமன்றி கலை, இலக்கியம், கல்வி போன்ற பல துறைகளில் பல ஏற்றங்களைக் கண்ட அறிஞர்கள், ஆய்வாளர்கள், இலக்கியவாதிகள் என பல்வேறு ஆளுமைகளைக் கண்ட மாகாணம் இதுவாகும்.

அரசியல் என்றெடுத்தால் 1947 ஆம் ஆண்டு தேர்தலில் பெரு வெற்றி கண்ட எஸ்.எம். சுப்பையா அவர்கள் பதுளை இரட்டை அங்கத்தவர் தொகுதியில் முதலாவது பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டதை இவ்விடத்தில் நினைவுகூர வேண்டும். கினாக்கொல்லையில் 1971 ஆம் ஆண்டு நிகழ்ந்த தொழிலாளர் போராட்டங்களை மறப்பதற்கு இல்லை. அப்புத்தளை தம்பத்தன்னையில் தோழர் வீரமுத்து நடாத்திய கிளர்ச்சி ஏற்படுத்திய அரசியல் பூகம்பங்களை இளந்தலைமுறையினர் கருத்தில்கொள்ள வேண்டும். இவ்வாறு மலையக மக்கள் வாழ்வில் ஊவாவிற்கு இருக்கின்ற தனித்துவமான தனிச்சிறப்பு மிக்க வரலாற்று நிகழ்வுகள் பற்றி ஒரு நீண்ட பட்டியலை தயாரிக்க முடியும். இவ்வளவு பெருமைமிக்க ஊவா மாகாணத்தில், குறிப்பாக பண்டாரவளை நகரில் இன்று மலையக மக்கள் முன்னணி நடாத்துகின்ற மேதின விழாவிற்கு அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான பெ. சந்திரசேகரன் தலைமைதாங்குகிறார்.

பண்டாரவளையில் வாழுகின்ற தொழிலாளர்கள் தாம் செல்ல வேண்டிய போராட்டப் பாதை எது என்பதை வகுத்துக்கொண்டு செயற்படுவதற்கான ஒரு முக்கிய தினமாக இன்று கூருதல் வேண்டும். நாம் இழந்த உரிமைகள் என்ன? பெற வேண்டிய உரிமைகள் என்ன? என்பதை பற்றி ஆழமாக சிந்திக்க வேண்டிய ஒரு தினமே மே தினம். எமது அரசியல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் சிறப்புகளை கண்டுகொண்ட ஊவா மாகாண மலையக மக்கள் எமது தொழிற்சங்கத்தில் பெருவாரியாக இணைந்து வருகின்றார்கள். ஊவா மாகாணத்தில் பணியாற்றி வருகின்ற எமது அடுத்தகட்ட தலைவரான குறிப்பாக ஏ. அரவிந்குமார் மக்களோடு பின்னிப்பிணைந்து அவர்களுடைய அனைத்து பிரச்சினைகள் பற்றிய ஒரு தெளிவான நோக்கங்களையும் அதற்கான முறையான செயற்திட்டத்தையும் கொண்டு இயங்குபவர். அதன் காரணமாகவே ஊவா மாகாணத்தில் ஆழமாக மக்கள் மத்தியில் தடம் பதித்ததோடு தேர்தலில் மண்வெட்டி சின்னத்தில் தனியாக போட்டியிட்டு பெருவெற்றி கண்டிருக்கின்றார். அவர்களுடைய கரங்களை பலப்படுத்தி அவரது செயற்பாடுகளை மேலும் முன்னெடுக்க செய்ய வேண்டியது எமது ஊவா மாகாணத்தில் வாழும் மலையக மக்களின் கடமையாகும். எம்மோடு தோளோடு தோள் நின்று வரும் தொழிற்சங்க துறையில் மிகுந்த அனுபவத்தை பெற்றுள்ள மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளராக விளங்கும் கே. சுப்பிரமணியம் மற்றும் உபதலைவர்களான எஸ். கிருஷ்ணன், எஸ்.பி. ஜெயபாரதி ஆகியோர் தங்களது முழு ஆற்றலையும் பயன்படுத்தி தொழிற்சங்க பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையின் இனப்பிரச்சினை இறுதித்தீர்வில், மலையக தமிழ் மக்களின் பிரச்சினையும் உள்ளடக்கப்பட்டு அதிகாரப்பகிர்வு அலகு ஒன்று வழங்கப்பட வேண்டும். யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரு தரப்பும் யுத்தத்தை நிறுத்தி அரசியல் தீர்விற்கான பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும். தற்போது நிலவும் மிக மோசமான வாழ்க்கைச் செலவை சமாளிக்கும் வகையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு பொருத்தமான நிவாரணம் வழங்க வேண்டும். கூட்டு ஒப்பந்தத்தில் சகல தொழிற் சங்கங்களும் கைச்சாத்திடும் வகையில் ஒப்பந்தம் மீள்திருத்தி எழுதப்பட வேண்டும். தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதாந்தச் சம்பளம் அல்லது வாழ்க்கைச் செலவு புள்ளி அடிப்படையில் வாழ்க்கைச் செலவை சமாளிக்கும் வகையில் பொருத்தமான அடிப்படைச் சம்பளம் வழங்கப்பட வேண்டும். மலையகத்திற்கு என தனியான பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

தலைநகர் கொழும்பிலும் மற்றும் பல இடங்களில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளவர் விசாரித்து விடுதலை செய்யப்படல் வேண்டும். ஆட்கடத்தல்கள் நிறுத்தப்படல் வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்றைய மேதினப் பேரணி இடம்பெறுகிறது.

மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் எல். விஜயகுமார், பிரதியமைச்சரும் நிர்வாக செயலாளருமான பெ. ராதாகிருஷ்ணன், உபதலைவர் ஏ. லோறன்ஸ், மாகாண சபை உறுப்பினர்களான எஸ். ராஜரட்ணம், ஏ. அரவிந்குமார் மற்றும் நிதிச் செயலாளர் சரத் அத்துக்கோரள, தொழிலாளர் முன்னணியின் செயலாளர் கே. சுப்பிரமணியம், உப-தலைவர்களான, எஸ். ஜெயபாரதி, எஸ். கிருஷ்ணன் உட்பட முன்னணியின் மகளிர் அமைப்பு தலைவி கிறிஸ்ரினா உட்பட முன்னணியின் முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

Email this page Your Opinion Print this page
அனைத்து அடக்குமுறைகளுக்கு எதிராகவும் வேறுபாடுகளை மறந்து மக்கள் ஐக்கியப்பட்டு போராடக்கூடிய சூழலை உருவாக்கவேண்டும்
உயர்ந்துவிட்ட உணவு விலை அபாயம்
பண்டாரவளை நகரில் மலையக மக்கள் முன்னணியின் மே தின விழா
சுயநிர்ணய உரிமையின் வளர்ச்சியும் வரலாறும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com