Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, May 01, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
உயர்ந்துவிட்ட உணவு விலை அபாயம்
[01 - May - 2008] [Font Size - A - A - A]
ஆர்.எஸ்.நாராயணன்

இந்தியாவில் எவ்வளவு தான் உணவு விலைக் கட்டுப்பாடுகள் எல்லாம் விதித்தும் கூட உலகளாவிய நிலையில் உணவு உற்பத்தி குறைந்துவிட்டால் மளமளவென்று உணவு விலை ஏறத் தொடங்கிவிட்டது. உலகில் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது உணவு உற்பத்தியில் இந்தியாவின் மந்த நிலையை ஓரளவு பரவாயில்லை என்று கூறலாம். இருப்பினும் ஒரு காலத்தில் உணவு உற்பத்தியில் தன்னிறைவாய் வளர்ந்த பல நாடுகளில் இன்று உணவுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு உணவு இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவை விட உணவு உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் சீனா இன்று உணவு இறக்குமதியில் இந்தியாவுடன் போட்டி போடுகிறது.

உணவு விலை உயர்ந்தும் கூட இதனால் இந்திய விவசாயிகளுக்கு பைசாகூட இலாபம் இல்லை. விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் விலை, உணவு உற்பத்தியின் அடக்கவிலையை விடக் குறைவு என்பது ஒரு பக்கம் இருந்தாலும் கொள்முதல் விலையைவிடக் கூடக் கொடுத்து இந்தியாவில் உணவு இறக்குமதி நிகழ்கிறது. உணவு தானிய வாரியாக உலக அங்காடி நடப்பை மதிப்பிடுவோம். ஆண்டுக்கு 2.5 கோடி தொன் விளையும் அவுஸ்திரேலியாவில் கடும் வறட்சி காரணமாக 98 இலட்சம் தொன் தான் நடப்புப் பருவத்தில் உணவு தானியம் விளைந்துள்ளது. அமெரிக்காவில் தென்மேற்கு மாநிலங்களிலும் சீனாவின் வடக்கு மாநிலங்களிலும் குளிர்பருவப் பயிர் உற்பத்தி பனி உறைவால் குறைந்துவிட்டது. 2007 இல் அமெரிக்காவில் 1 தொன் கோதுமை 167 டொலர் விற்றது. இன்று அதே 1 தொன் கோதுமை விலை 449 டொலர். கோதுமை விலை 115 சதவீதம் கூடியுள்ளது.

2006- 07 இல் இந்தியா விலை கொடுத்து 6.8 இலட்சம் தொன் இறக்குமதி செய்தும்கூட 2007-08 இல் நமது கையிருப்பு போதுமானதாயில்லை. 2008-09 இல் இந்தியா 30 இலட்சம் தொன் கோதுமையை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை உள்ளது.

உலகச் சந்தையில் கோதுமை விலை இறங்கும் வாய்ப்பு இல்லை. ஏனெனில் சீனாவின் தேவையோ இந்தியாவை விட அதிகம். கோதுமையை ஏற்றுமதி செய்யும் கனடா, ஐரோப்பிய யூனியன், துருக்கி, சிரியா ஆகிய நாடுகளிலும் அமெரிக்காவைப்போல் உற்பத்தி குறைந்துவிட்டது. கோதுமை பற்றாக்குறை உலகளாவியதாக உள்ளது. மனிதனுக்கு மட்டுமல்ல. கால்நடைத் தீவனத்திற்கும் கோதுமை பயன்படுகிறது.

அமெரிக்காவில் இது நாள்வரை மக்காச்சோளம் தீவனமாக இருந்த நிலை மாறி கோதுமை மாட்டுத்தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவதாக பெருகி வரும் இறைச்சித் தேவை , பால் தேவை, இரண்டாவதாக மிகவும் கணிசமான அளவு மக்காச்சோளம் உற்பத்தி (20% வரை) உயிரி எரிசக்தி அதாவது எத்தனால் உற்பத்திக்கு ஒதுக்கப்படுவதும் ஆகும்.

40,50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் அரிசி மட்டுமே முக்கிய உணவு. இன்று அப்படி இல்லை. ரவா வடிவில் உப்புமா, கோதுமை மாவு வடிவில் பூரி, சப்பாத்தி இருவேளை உணவாக மாறியுள்ளது. சர்க்கரை வியாதியும் தமிழனிடம் குடிகொண்டு விட்டதால் கோதுமை உணவுத்தேவை கூடிவிட்டது. இதைவிட ஒரு வியப்பான உண்மை உண்டு. கோதுமை விளையும் வட மாநிலங்களில் உருட்டு மாவு ஆலைகள் கிடையாது. ஏறத்தாழ 70 சதவீத கோதுமை மாவு ஆலைகள் தமிழ்நாட்டில் உள்ளன.

இவ்வாறே ரொட்டிக் கிடங்குகளும் தமிழ்நாட்டில் அதிகம். கோதுமை மைதா வடிவில் நாம் உண்ணும் பன், பிரட் ஆகியவற்றையும் கணக்கில் கொண்டால் தமிழ்நாட்டின் நடுத்தர வர்க்கம் வடமாநிலங்களை நம்பித்தான் வயிற்றை வளர்க்கின்றனர். அரசியலிலும் அப்படித்தானே. இதனால், அரிசியைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியுமா?

கோதுமையைப் போலவே அரிசி விலையும் இருமடங்கு உயர்ந்துள்ளது. உலக சந்தையில் கடந்த ஆண்டு ஒரு தொன் 250 டொலர் விலையில் விற்ற சாதா வெள்ளை அரிசி இன்று 500 டொலர். ஐ.நா. உணவு விவசாய அமைப்பின் கணக்குப்படி 2007 -08 இல் உலக அரிசித் தேவை 42 கோடி தொன்கள். ஏறத்தாழ இதே அளவு அரிசி உற்பத்தி இருந்தும்கூட உணவு விநியோகத்திற்கான கையிருப்பில் தட்டுப்பாடு என்பதாலும் உலக அரிசி ஏற்றுமதி நாடான தாய்லாந்தில் பதுக்கல் காரணமாகவும் அங்கு அரிசி விலை 40 சதவீதம் உயர்ந்துள்ளது.

உலகிலேயே அரிசி இறக்குமதியை மட்டும் நம்பி வாழும் நாடு பிலிப்பைன்ஸ். ஒரு காலத்தில் அரிசி உற்பத்தியில் முன்னிலை வகித்த பிலிப்பைன்ஸ் நாட்டில் பசுமைப்புரட்சியின் விளைவால் மண்வளம் இழந்து உணவுக்கு அடுத்த நாட்டை எதிர்பார்க்கும் அவலம். உலக அரிசி ஆராய்ச்சி நிறுவனம் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ளது. இன்று தீராத வறட்சியால் சிக்கித்தவித்து வரும் பிலிப்பைன்ஸ் நாடு அரிசிக் குறுநொய்யை தொன் ஒன்றுக்கு 750 டொலர் என்ற விலையில் வியட்நாமிலிருந்து இறக்குமதி செய்யும் நிலைமை தமிழ்நாட்டுக்கு வந்துவிடக்கூடாது.

இன்று இந்தியாவில் அரிசி ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டாலும் பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி தொன் 650 டொலர் கிடைத்தால் விற்கலாம் என்ற நிபந்தனை உள்ளது. கோதுமையுடன் ஒப்பிடும்போது அரிசியின் நிலை பரவாயில்லை. இன்று பரவலாகப் பேசப்படும் காலநிலை மாற்றம் காரணமாகப் பல நாடுகளில் குறிப்பாக அவுஸ்திரேலியா, கனடா, சீனா , வங்கதேசம், ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் இதன் பாதிப்பு குறைவு என்று நாம் ஆறுதல் கொள்ளலாம். உணவு விலையைப் பொறுத்தவரை உலகச் சந்தையை விட இந்தியாவில் உணவு விலை குறைவு என்றால் அதை எவ்விதத்திலும் ஒரு சாதனையாகவே ஏற்க முடியாது.

ஏனெனில் இந்தியாவின் அசலான விலை அங்காடி விலையை விட அதிகம். உணவு மானியம் 31,000 கோடி ரூபாய். உரமானியம் 42,000 கோடி ரூபாவையும் கூட்டிப்பார்த்தால் இந்தியாவின் அசல் விலை ஆகாயத்தைத் தொடும்.

இன்று தமிழ்நாட்டில் மக்காச்சோள சாகுபடிக்கு மவுசு கூடியுள்ளது. பெரும்பாலும் இது கால்நடை- கோழித்தீவனம் குறிப்பாகப் பால் மாடுகளுக்கு மக்காச்சோளமாவை அடர்தீவனமாக வழங்கும்போது கூடுதல் பால் கறவை இருக்கும் என்பது உலகறிந்த உண்மை.

தமிழ்நாட்டில் பால் விலை உயர்ந்து பாலின் தேவை பன்மடங்கு உயர்ந்துவிட்டதும் மக்காச்சோள சாகுபடிக்குக் கிடைத்த பூஸ்ட், அதேசமயம் மக்காச்சோளம் அமெரிக்கா, ஆபிரிக்கா கண்டங்களில் பிரதான மனித உணவாகவும் உள்ளதால் உயிரி எரிசக்தி உட்பட இதன் பன்முகப் பயன்பாட்டினால் இதன் விலையும் கூடிவிட்டது. கடந்த ஆண்டில் 1 தொன் 180 டொலர் என்ற நிலை மாறி இன்று மக்காச்சோளம் விலை 1 தொன் 220 டொலர் சுமார் 24 சதவீதம் உயர்வு.

இந்திய ரூபாய் விலைகளோடு உலகச்சந்தை விலைகளை ஒப்பிடுவதானால் முதலில் கோதுமை டில்லி விலை ரூ.1,100 என்றால் இறக்குமதி விலை ரூ.1800 . அரிசி (வெள்ளை -சாதா) ரூ. 1600 ஹைதராபாத் விலை . இதே அரிசி இறக்குமதி விலை ரூ. 2000 (100 கிலோ). மக்காச்சோளம் தமிழ்நாட்டு விலை ரூ.800 என்றால் உலக விலை ரூ.900.

உணவு விலை உயர்வு மிகவும் தெளிவாகவே நெருங்கிக் கொண்டிருக்கும், உணவுப் பஞ்சம் அல்லது உணவு நெருக்கடியை எடுத்துக்காட்டுகிறது. மிக அத்தியாவசியப் பொருட்களான அரிசி, கோதுமை, சோளம், சமையல் எண்ணெய் , பருப்பு ஆகிய விலைகளின் உயர்வினால் பணவீக்கம் தீவிரமாகிறது. உள்ளூர் விலைவாசிகளைக் கட்டுப்படுத்த இறக்குமதிதான் தீர்வு என்றால் அதற்குரிய வழியும் அடைபட்டு விட்டது. உள்ளூர் விலையை விடக் கூடுதல் விலை கொடுத்து உணவு இறக்குமதி செய்தால் அதே விலையை உள்ளூர் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலை ஏற்படும்.

இன்றுள்ள உணவு நெருக்கடியும் இனி ஏற்படப் போகும் உணவுப் பஞ்ச அபாயமும் மனிதத் தவறுகளால் உருவாகிறதே தவிர மக்கள் தொகை காரணமல்ல. இருக்கும் வளத்தை உருப்படியாகக் காப்பாற்றி உணவு உற்பத்தியில் போதிய கவனம் செலுத்தினாலே போதும். இதர நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவுக்கு மாறி வரும் தட்ப வெப்பம் விவசாயத்தை அதிகம் பாதித்துவிட வில்லை. கூடுதல் மழை அல்லது கூடுதல் வெள்ளத்தை நல்ல முறையில் சேமித்து வளம் காணும் குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களைப் பின்பற்றி ஓட்டை இல்லாத நீர்வடிப்பகுதி மேம்பாட்டு நீர் மேலாண்மையைத் தமிழ்நாடு மேற்கொள்ள வேண்டும்.

கூடுதல் வெப்பம் கூடுதல் ஒளிச்சேர்க்கைக்கு வழிகாணும் இயல்பைத் தேர்ந்தெடுத்து வளம் பெற உணவு சாராத உயிரி எரிசக்திப் பயிர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், மானியம் ஆகியவற்றை உணவுப்பயிர் சாகுபடியாளர்களுக்கு வழங்குவது அவசியம். உணவுக்கே வழியில்லாத நாடு உயிரி எரிசக்தியைப் பற்றிக் கவலைப்பட்டால் பணவீக்கம் மேலும் அதிகமாகும். மத்தியில் ஆட்சி மாற்றமே ஏற்படலாம்.

தினமணி

Email this page Your Opinion Print this page
அனைத்து அடக்குமுறைகளுக்கு எதிராகவும் வேறுபாடுகளை மறந்து மக்கள் ஐக்கியப்பட்டு போராடக்கூடிய சூழலை உருவாக்கவேண்டும்
உயர்ந்துவிட்ட உணவு விலை அபாயம்
பண்டாரவளை நகரில் மலையக மக்கள் முன்னணியின் மே தின விழா
சுயநிர்ணய உரிமையின் வளர்ச்சியும் வரலாறும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com