Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, May 01, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
அனைத்து அடக்குமுறைகளுக்கு எதிராகவும் வேறுபாடுகளை மறந்து மக்கள் ஐக்கியப்பட்டு போராடக்கூடிய சூழலை உருவாக்கவேண்டும்
[01 - May - 2008] [Font Size - A - A - A]
சி.கா.செந்திவேல்

உலகத் தொழிலாளர்களின் போராட்டத் தினமான மே தினம் இன்று உலகம் பூராவும் கொண்டாடப்படுகிறது. தொழிலாளர்கள், விவசாயிகள் மட்டுமன்றி ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகி நிற்கும் சகல நிலை மக்களும் தமக்குரிய உரிமைகளை வற்புறுத்தும் போராட்ட நாளாகவும் மே தினத்தை நினைவு கூர்ந்து வருகின்றனர். இத்தகைய மே தினம் உருவாகுவதற்கான வரலாற்று நிகழ்வு 122 வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவிலே இடம்பெற்றது. ஈவிரக்கமற்ற சுரண்டலையும் அடக்குமுறையையும் கொண்டிருந்த அமெரிக்க முதலாளித்துவத்தை எதிர்த்து தொழிலாளர்கள் நடத்திய மிகப் பெரும் போராட்டத்திலிருந்தே மே தினம் தோற்றம் பெற்றது.

பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பிய அமெரிக்க, அவுஸ்திரேலியக் கண்டங்களில் முதலாளித்துவம் வளர்ச்சி பெற்று வந்த காலகட்டமாகும். அந்த வளர்ச்சியின் அடிப்படையாக அமைந்தவர்கள் தொழிலாளி வர்க்கத்தினர். பெரும் இலாபத்தைக் குவிக்கும் முதலாளிகளின் பேராசைக்கு தொழிலாளர்களின் உழைப்பு சூறையாடப்பட்டது. குறைந்த கூலியில் அதி கூடிய நேரம் தொழிலாளர்களிடமிருந்து வேலை வாங்கப்பட்டது. 16, 14, 12 மணித்தியாலங்கள் என்ற அடிப்படையில் வரை முறையற்ற நேரக் கணக்கில் குறைந்த கூலியில் தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டு வேலை செய்ய வைக்கப்பட்டனர். அதனை மீறியோர் மீது அடக்கு முறை பிரயோகிக்கப்பட்டு வந்தது. இது தான் முதலாளித்துவத்தின் விதியாகவும் வளர்ச்சியாவும் அமைந்திருந்தது. இத்தகைய சுரண்டலிலும் அடக்கு முறையிலிருந்தும் இன்றுவரை முதலாளித்துவமும் அதன் உச்ச வளர்ச்சியான ஏகாதிபத்தியமும் மாற்றமடையவில்லை. அவற்றின் இந்த இயல்பு ஒருபோதும் மாற்றமடைய மாட்டாது என்பதே சமூக நியதியாகவும் உள்ளது.

இத்தகைய முதலாளித்துவம் தொழிற்சாலைகளில் பணி புரிந்து வந்த தொழிலாளர்களிடமிருந்து மிகக் குறைந்த கூலியில் 12 மணித்தியாலங்கள் முதல் 16 மணித்தியாலங்கள் வரை வேலை வாங்கி அவர்களைச் சக்கையாகப் பிழிந்து வந்தது. 1830 களில் இவ் அதிகரித்த வேலை வாங்கல்களுக்கு எதிரான தொழிலாளர் ஊழியர்களின் அதிருப்தியும் எதிர்ப்புகளும் முளைவிட ஆரம்பித்தன. அவுஸ்திரேலியாவில் இதன் காரணமாக 1837 இல் அரசாங்க ஊழியர்களுக்கு 10 மணி நேரவேலை என்பது வரையறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தொழிலாளர்கள் எட்டுமணி நேர வேலை என்பதைக் கோரிக்கையாக முன் வைக்க ஆரம்பித்தனர். 1850 இல் அமெரிக்காவில் தொழிற்சங்க இயக்கம் வீறு பெற்று எழ ஆரம்பித்தது. இவ்வாறு தொழிலாளி வர்க்கம் விழிப்புற்று தமது கோரிக்கைகளை முன்வைப்பதற்குரிய வலுவான பின்புலம் உருவாகி இருந்தது. அதுவே மாக்சிசத்தின் தோற்றமாகவும் அமைந்திருந்தது. 1848 ஆம் ஆண்டில் உலகத் தொழிலாளர் வர்க்கத்தை நோக்கி கார்ல் மாக்ஸும் ஃபிரடிக்ற் ஏங்கல்ஸும் இணைந்து கம்யூனிஸ்ட் லீக் என்ற அமைப்பின் சார்பாக வெளியிட்ட `கம்யூனிஸ்ட் அறிக்கை' என்பது வெளிவந்தது. தொழிலாளர் வர்க்கத்திற்கு தமது அடிமைச் சங்கிலிகளை விட இழப்பதற்கு எதுவுமே இல்லை. வெல்வதற்கோ ஓர் உலகம் உண்டு. என்றும் முதலாளித்துவ வர்க்கத்தையும் அவர்களது தனிச் சொத்துடமையையும் நிர்மூலமாக்கி அரசியல் அதிகாரத்தைத் தொழிலாளி வர்க்கம் பெறவேண்டும் என்றும் அந்த கம்யூனிஸ்ட் அறிக்கை அறைகூவல் விடுத்தது. இத்தகைய புரட்சிப் பிரகடனம் ஐரோப்பிய, அமெரிக்க, அவுஸ்திரேலியக் கண்டங்களின் தொழிலாளர் வர்க்கத்தினரை விழித்தெழ வைத்ததுடன், அவர்களது போர்க்குணத்தை வெளிப்படுத்த வேண்டிய அவசியத்தையும் தெளிவுபடுத்தியது.

இவற்றின் விளைவாகவே அமெரிக்கத் தொழிற்சங்க இயக்கம் முதலாளி வர்க்கத்திடம் எட்டுமணி நேரவேலை என்ற கோரிக்கையை முன்வைக்க ஆரம்பித்தது. இது ஏற்கனவே அவுஸ்திரேலியாவில் வலியுறுத்தப்பட்டிருந்தது."எட்டு மணிநேரம் வேலை, எட்டுமணிநேரம் தத்தமது சொந்தவேலை, எட்டுமணி நேரம் ஓய்வு உறக்கம்" என்பதாகவே 24 மணிநேரம் பிரித்து வகுக்கப்பட்டிருந்தது. தொழிலாளர்களின் இவ்வரையறை நியாயமான கோரிக்கையாக இருந்த போதிலும் உழைப்பைச் சுரண்டி கொள்ளை இலாபம் பெற்று வந்த முதலாளித்துவ வர்க்கத்தினரால் இதனை உள்வாங்கி ஜீரணிக்கஇயலவில்லை. இவ்விடயத்தில் அமெரிக்க முதலாளி வர்க்கம் மிகவும் மூர்க்கத்தனமாகவே நடந்து வந்தது.

ஆனால் வீரம் செறிந்த அமெரிக்க தொழிலாளி வர்க்கம் அடங்கி ஒடுங்கிவிடவில்லை. 1886 ஆம் ஆண்டில் உருவாகிய அமெரிக்காவின் தேசிய தொழிற் சங்கம் தொழிலாளர்களின் போராட்ட உணர்வுக்கும் எட்டுமணிநேரக் கோரிக்கைக்கும் தலைமை தாங்கியது. அதன் முதலாவது மாநாட்டில் பின்வரும் தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது. "அமெரிக்கா முழுமைக்கும் 8 மணிநேர வேலை நாள் என்பது சட்டமாக்கப்பட வேண்டும். அதன் மூலமே முதலாளித்துவத்தின் கூலி அடிமைத்தனத்திலிருந்து இந் நாட்டின் உழைப்பை விடுவிக்கமுடியும். இந்த மாபெரும் பலனையடைய நாம் நம்முடைய சக்தி அனைத்தையும் ஒன்று திரட்டத் தீர்மானிக்கின்றோம் " என அத்தீர்மானம் தொழிலாளர்கள் அனைவருக்கும் அறை கூவல் விடுத்தது.

இத்தகைய தீர்மானத்தின் எதிரொலிகள் அமெரிக்கத் தொழிலாளர்கள் மத்தியில் பல்வேறு தொழிற்சாலைகளில் தொழிற்சங்கங்கள் தோன்றுவதற்கும் எட்டுமணி நேர வேலையை வற்புறுத்தவும் கூடிய சூழல்களைத் தோற்றுவித்தன. 1884 - 86 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவ்வாறான இடதுசாரித் தொழிற்சங்கங்கள் ஏனையவற்றுடன் இணைந்து செயலாற்றுவதிலும் ஐக்கியப்படுவதிலும் முன் நின்றன. 1886 ஆம் ஆண்டு மே முதல் திகதி அன்று அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் எட்டு மணி நேர வேலைக்கான வேலை நிறுத்தங்கள் உச்ச நிலையை அடைந்தன. தொழிலாளர்கள் தொழிற்சாலைகளை விட்டு வெளியேறி வேலை நிறுத்தம் செய்து ஒன்று கூடினர். தொழிற்சாலை யந்திரங்கள் இயங்கவில்லை. புகை போக்கிகளில் இருந்து புகைகள் வரவில்லை. இயந்திர இரைச்சல்கள் எதுவும் கேட்கவில்லை. தொழிற்சாலைகளின் சங்குகள் ஊதப்பட்டும் தொழிலாளர்கள் அவற்றுக்குச் செவி மடுக்கவில்லை. வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக இடதுசாரியினர் `சமூக ஆர்வலர்கள்' பொது மக்கள் இருந்தனர். அமெரிக்க சமுதாயம் முழுவதும் இவ்வேலை நிறுத்தம் அதிர்வை ஏற்படுத்தியது. அதேவேளை ஐரோப்பிய, அவுஸ்திரேலிய தொழிலாளர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இவை அத்தனைக்கும் மத்தியில் அமெரிக்க முதலாளி வர்க்கம் தனது சொந்த நாட்டின் தொழிலாளர்களின் எட்டுமணி நேரவேலைக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. தனது ஈவிரக்கமற்ற அடக்கு முறையை அரசு இயந்திரமான ஆயுதப்படைகள் மூலம் ஏவி தொழிலாளர்கள் மீது மிக மோசமான தாக்குதல்களைத் தொடுத்து நின்றது. அமெரிக்க முதலாளி வர்க்கம். தொழிலாளர்கள் பலர் படுகாயங்கள் பட்டனர். பலர் கைது செய்யப்பட்டு சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். அமைதியாகத் தமது கோரிக்கையை முன்வைத்து வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்கள் இரத்தம் கொட்டிய தாக்குதல்களுக்கு ஆளாக்கப்பட்டனர்.

1886 இன் அடக்குமுறையை எதிர்த்து மே நான்காம் திகதி சிக்காக்கோ நகரில் அமைந்துள்ள ஹே சந்தைச் சதுக்கத்தில் தொழிலாளர்களின் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. தொழிலாளர்களின் ஒற்றுமையையும் போராட்ட திடசங்கற்பத்தையும் போர்க்குணத்தையும் வெளிப்படுத்திய அக்கூட்டத்தை முதலாளி வர்க்கத்தால் பொறுக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் கைக்குண்டு ஒன்று கூட்டத்தின் மீது வீசப்பட்டது. அதனால் எழுந்த மோதலில் ஒரு இராணுவ அதிகாரி ஏழு பொலிஸ்காரர்கள் நான்கு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயங்கள் பட்டனர். ஹே சந்தைச் சதுக்கம் இரத்த வெள்ளமாகக் காட்சி கொடுத்தது. இவ்வாறு கைக்குண்டு வீசியவன் முதலாளிகளால் அமர்த்தப்பட்ட ஒரு பொலிஸ்காரன் என்பது சில வாரங்களின் பின்பே வெளிவந்துகொண்டது.

ஆனால், தொழிலாளர் தலைவர்களும் கூட்ட ஒழுங்கமைப்பாளர்களும் முதலாளித்துவ நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டனர். விசாரணை முடிவில் தொழிலாளர் தலைவர்களான அல்பேர்ட் ஆர்.பார்சன்ஸ், ஓகஸ்ட் ஸ்பயிஸ் , ஜோர்ஜ் ஏங்கல், எல்டோப் பிஸர் ஆகிய நால்வருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. கியூஜின் ஸ்வாப் , சாமுவல் ஜே.பில்சன் ஆகிய இருவருக்கும் ஆயுட் தண்டனையும் ஓஸ்கர் நீபே என்பவருக்கு 15 வருட சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. லூயிஸ் லீன் என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ஓகஸ்ட் ஸ்பயிஸ் தூக்கு மேடைக்குச் செல்வதற்கு முன்பு தனது இறுதி வாசகங்களை இவ்வாறு கூறிச் சென்றார். "எமது கல்லறைகளின் மௌனம் ஆயிரம் வார்த்தைகளை விட அதிகம் விடயங்களை எடுத்துக் கூறும்" என்பதாகும்.

ஆம்! இன்று உலகம் பூராவும் தொழிலாளர்களும் ஊழியர்களும் ஏனைய உழைக்கும் மக்களும் எட்டுமணி நேரவேலையை சட்டபூர்வமாக அனுபவித்து வருகின்றமை முதலாளி வர்க்கத்தினர் மனிதநேய அடிப்படையில் தொழிலாளர்களுக்கு வழங்கிய ஒன்றல்ல. அன்றைய அமெரிக்கத் தொழிலாளி வர்க்கம் நடத்திய வீரம் செறிந்த போராட்டமும் அவர்களின் தலைவர்கள் முன்னணித் தொழிலாளர்கள் சிந்திய இரத்தமும் செய்து கொண்ட உயிர்த் தியாகங்களுமே காரணமாகும்.

இத்தகைய சிக்காக்கோ நகரத் தொழிலாளர்களின் எட்டுமணி நேரக் கோரிக்கை வெற்றி பெற்று உலகம் பூராவுமான ஒரு வேலை நேர வரையறையாகிக் கொண்டமை வரலாற்று முக்கியத்துவம் கொண்டதாகும். இந்த மகத்தான போராட்டத்தை நினைவு கூருவதை உலகத் தொழிலாளர்கள் அனைவரும் மே முதலாம் திகதியை வருடா வருடம் உலகத் தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட நாளாக நினைவு கூர வேண்டும் என்பதை மாக்சின் இணைபிரியாத நண்பரான ஃபிரடிக்ற் ஏங்கல்ஸ் தலைமையிலான தொழிலாளர்களின் இரண்டாவது சர்வதேசியம் 1893 இல் தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டது.

இதே நினைவு நாளில் தொழிலாளி வர்க்கமும் ஏனைய உழைக்கும் மக்களும் தம்மை எதிர்நோக்கியுள்ள இதர பிரச்சினைகளுக்கும் கோரிக்கை வைத்துப் போராடுவதற்குரிய திடசங்கற்பம் பூணும் நாளாகவும் கொள்ளப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது.

அன்று எட்டு மணிநேர வேலைக்கோரிக்கையை மறுத்து கொடிய ஒடுக்குமுறை மூலம் இரத்தக் குளிப்பு நடாத்திய அமெரிக்க முதலாளித்துவம் தான் இரண்டாவது உலக யுத்தத்தைத் தொடர்ந்து உலகை அச்சுறுத்தும் வலிய ஏகாதிபத்தியமாகிக் கொண்டது . முதலாளித்துவத்தின் உச்சக்கட்ட வளர்ச்சியே ஏகாதிபத்தியம் எனத் தோழர் லெனின் எடுத்து விளக்கியமைக்கு அமைய இன்று அமெரிக்கா உலகம் பூராவும் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்த முனைந்து நிற்கிறது.

ஐக்கிய அமெரிக்க ஏகாதிபத்தியம் என்பது சாதாரண அமெரிக்கத் தொழிலாளர்கள், விவசாயிகள், கறுப்பின ஆபிரிக்க, அமெரிக்கர் போன்றவர்களைக் குறிக்கும் சொற்றொடர் அல்ல. அது அமெரிக்க ஆளும் வர்க்கத்தினரையும் அவர்களது போசகர்களான பெரும் முதலாளிகளையும் கோடீஸ்வரர்களையும் சுட்டி நிற்கும் சொல்லாகும்.

இத்தகைய ஐக்கிய அமெரிக்க ஆளும் வர்க்கம் தான் இன்றைய ஏகாதிபத்திய உலகமயமாதல் நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் உலக நாடுகளை வழி நடத்தி வர முயன்று வருகின்றது. முதலாளித்துவ ஏகபோக மூலதனத்தைக் கொண்டு உலகின் பொருளாதார வளங்கள் அனைத்தையும் தனதாக்கி ஆதிக்கம் செலுத்த முயன்று வருகிறது.

மூலவளங்களின் அபகரிப்புக்காக ஜனநாயகம்` சுதந்திரம்' பயங்கரவாதம் போன்ற சொல்லாடல்கள் மூலம் இராணுவத் தலையீடுகளையும் ஆக்கிரமிப்புகளையும் செய்து வருகின்றது.

ஈராக் மீதான ஒன்றரை இலட்சம் அமெரிக்க- நேசநாட்டுப் படைகளின் ஆக்கிரமிப்பு ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க - நேட்டோ நாட்டுப் படைகளின் பிரசன்னமும் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பயங்கரவாத எதிர்ப்புக்கான இராணுவ நடவடிக்கை அல்ல. இன்றைய காலக் கறுப்புத் தங்கமான எண்ணெய் வளத்தையும் எரிவாயுச் செல்வத்தையும் பொருளாதாரக் கொள்ளையிடல் நடத்துவதற்கான இராணுவ செயற்பாடேயாகும்.

மறுபுறத்தில் உலகமயமாதலின் கீழான நவதாராளவாத பொருளாதாரக் கொள்கை சகல நாடுகளிலும் நாசங்களையே விளைவித்து வந்துள்ளன. தாராளமயம், தனியார் மயம் என்பனவற்றின் ஊடாக பல்தேசியக்கம் பனிகள் தாராளமாக மூன்றாம் உலக நாடுகளில் கடைவிரித்துள்ளன. உதாரணமாக, நமது நாட்டின் சுதந்திரவர்த்தக வலயப் பிரதேசங்களில் காணப்படும் பல்தேசியக் கம்பனிகளில் பல ஆயிரக் கணக்கான இளம் ஆண், பெண் தொழிலாளர்கள் குறைந்த சம்பளத்தில் அதி கூடிய நேரம் வேலை வாங்கப்படுகின்றர். அத்தொழிலாளர்கள் மத்தியில் எவ்வித தொழிற் சங்கங்களும் நிறுவ முடியாது. தொழில் சட்டங்களும் அங்கு செல்லுபடியாக மாட்டாது. சகல வழிகளிலும் அவர்களது தொழிற்சங்க உரிமைகள் மறுக்கப்படுவதுடன், உழைப்புச் சுரண்டல் மிகத் தீவிரமாக நடாத்தப்படுகின்றது.

அவ்வாறே தனியார் கம்பனிகள் அரசாங்கத்தினதும் தொழிற்சங்கத் தலைமைகளின் துணையோடு பெருந்தோட்டத்துறையின் தேயிலை, இறப்பர் உற்பத்தித் தொழிலாளர்களைச் சுரண்டி வருகிறார்கள்.

Email this page Your Opinion Print this page
அனைத்து அடக்குமுறைகளுக்கு எதிராகவும் வேறுபாடுகளை மறந்து மக்கள் ஐக்கியப்பட்டு போராடக்கூடிய சூழலை உருவாக்கவேண்டும்
உயர்ந்துவிட்ட உணவு விலை அபாயம்
பண்டாரவளை நகரில் மலையக மக்கள் முன்னணியின் மே தின விழா
சுயநிர்ணய உரிமையின் வளர்ச்சியும் வரலாறும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com