இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தனது அரசியல் வாழ்க்கையை இந்தியாவின் ராகுல் காந்தியைப்போல கீழ்நிலையில் இருந்து துவங்க வேண்டுமென இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அப்பேட்டியில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
ஒரு வீட்டையோ, நகையையோ பரம்பரைச் சொத்தாக கூறலாம். ஆனால், மற்றவர்களின் விருப்பங்களையும், கனவுகளையும் எப்படி பரம்பரைச் சொத்தாக்க முடியும்?
ஒரு ஜனநாயக அரசியல் கட்சியை பரம்பரைச் சொத்து போல அறிவித்திருப்பது ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கும் செயல்.
எனினும், ராகுல் காந்தி போல கீழ்நிலையிலிருந்து தனது அரசியல் பயணத்தை பிலாவல் தொடங்கினால் அது மிகவும் சிறப்பானதாகும்.
பதவியில் தொடர சட்டரீதியான உரிமை முஷாரப்புக்கு இல்லை. அவர் எப்போதுமே தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை.
பாராளுமன்றத்துக்குள் தன்னை அவர் திணித்துக் கொண்டார். ஆனால், அந்த பாராளுமன்றம் தற்போது இல்லை.
தேர்தலுக்குப் பிறகு அமைந்த பாராளுமன்றத்தில் அவருக்கு அங்கீகாரம் இல்லை. எனவே, அவர் பதவி விலக வேண்டும். தேர்தலில் நவாஸ் ஷெரீப்புக்கும், ஆசிப் அலி சர்தாரிக்கும் மிகப் பெரிய வாய்ப்பை மக்கள் அளித்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.