*ரஷ்யா எச்சரிக்கை
திபிலிசி : ஜோர்ஜியா தனது பிரிந்து போன இரு மாகாணங்களுக்கெதிராக படைப்பலத்தை பிரயோகிக்குமானால் அதற்குப் பதிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென ரஷ்யா எச்சரித்துள்ளது.
ஜோர்ஜியாவிலிருந்து பிரிந்து போன மாகாணங்களான அப்ஹாஸியா மற்றும் ஒஸிரியாவின் தென்பகுதியில் ரஷ்யா தனது படைப்பலத்தை அதிகரிப்பதாகக் கூறி அப் பிராந்தியத்தின் மீதான படையெடுப்பிற்கு ஜோர்ஜியா தயாராகுவதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்நிலையில் இப்பதற்றமான சூழ்நிலையில் சர்ச்சைக்குரிய பிராந்தியத்திலுள்ள படையினரின் எண்ணிக்கையை அதிகரிப்பது விவேகமற்ற செயலென ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தமது நாடு போருக்கு தயாராகவில்லையென தெரிவித்துள்ள ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர், ஆனால் எந்தவொரு தாக்குதலுக்கும் பதில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென எச்சரித்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பான ரஷ்ய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்ஹாஸியாவுக்கெதிராக இராணுவ தாக்குதல்களை ஆரம்பிப்பதற்கு ஜோர்ஜியா தயாராகி வருகிறது.
அப்ஹாஸியாவிலும் தென் ஒஸிரியாவிலும் ரஷ்ய அமைதிப் படைகளின் எண்ணிக்கையை அதிகரித்தமைக்குப் பதிலாகவே ஜோர்ஜியா இந் நடவடிக்கையை மேற்கொள்கிறதெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இப் பிராந்தியத்தில் தமது படைப்பலத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஜோர்ஜியா,ரஷ்யா கோபமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளது.
மேலும் ரஷ்யாவின் இந்நடவடிக்கை பிராந்தியத்தில் பேரிழப்புகளை ஏற்படுத்தும். இப்போதிலி அப்ஹாஸியாட மற்றும் தென் ஒஸிரியாவிற்குள் நுழையும் ஒவ்வொரு ரஷ்ய படையினரும் அல்லது இராணுவ உபகரணங்களும் எமது நோக்கில் சட்ட ரீதியற்றதாகவும் படையெடுப்புக்கான அறிகுறியாகவுமே கருதப்படுமென ஜோர்ஜிய பிரதமர் லடோ குஜினிட்ஸி தெரிவித்துள்ளார்.
இதேவேளை ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சருடனான சந்திப்பின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டுக் கொள்கைகளுக்கான தலைமையதிகாரி ஜே.வியர் சொலானா ரஷ்யா பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்.
ஜோர்ஜியாவிலிருந்து அப்ஹாஸியா மற்றும் தென் ஒஸிரியா ஆகியவை பிரிந்த பின்னர் ரஷ்யாவுடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையொன்றின் பிரகாரம் அப்ஹாஸியாவிலும் தென் ஒஸிரியாவிலும் ரஷ்யாவின் அமைதிப் படைகள் நிலைகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.